அலசல்
சமூகம்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

“நீ வட்டம் போட்டா, நான் வழக்கு போடுவேன்!”

சமீபத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்கு, விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் ஆட்கள் சாரை சாரையாக பசும்பொன் நோக்கிப் படையெடுத்துச் சென்றனர். அவ்வாறு ‘வாகனங்களில் செல்பவர்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் சட்டவிதிகளைப் பின்பற்றி குருபூஜை நிகழ்ச்சிக்குச் சென்று வரலாம்’ என மாவட்டக் காவல்துறை நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால், காவல்துறையின் அறிவிப்புகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்ட சிலர், ‘சுமோ வாகனத்தில் சீறிப் பாய்ந்து, சாலையின் நடுவே புழுதி பறக்க வட்டம் போட்டு’ கெத்து காட்டியிருக்கிறார்கள். இந்த அட்ராசிட்டிகளையெல்லாம் அமைதியாகப் புகைப்படமெடுத்து மாவட்டத் தலைமைக்கு அனுப்பிவிட்டனர் காவல் உளவாளிகள். பிறகென்ன... குருபூஜை முடிந்த பிறகு சாலையில் வாகனத்தில் வட்டம்போட்ட நபர்கள் அனைவரின் மீதும் வழக்குகள் வட்டமிட்டிருக்கின்றன!

‘‘ஆடு திருடுனது ஒருத்தன்... அடி வாங்கினது இன்னொருத்தனா?’’

சிவகங்கை மாவட்டம், பாதரக்குடியைச் சேர்ந்த விஜய், மது ஆகியோர் அரியக்குடியில் ஆடுகளைத் திருடி, டூ வீலரில் கொண்டு சென்றிருக்கின்றனர். இதைப் பார்த்துவிட்ட அந்தப் பகுதி மக்கள் அவர்களைப் பிடிக்கத் துரத்திச் சென்றனர். புயல் வேகத்தில் பறந்த ஆடு திருடர்களின் டூ வீலர், நடுவழியில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது. சட்டென்று ஆடுகளைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு டூ வீலருடன் புதருக்குள் மறைந்துவிட்டார்கள் அவர்கள். பின்னர் புதருக்குள்ளிருந்தவாறே செல்போனில் நண்பர்களைத் தொடர்புகொண்டு ‘பெட்ரோல் வாங்கித் வரும்படி’ சொல்லியிருக்கின்றனர். ஆடு திருடச் சென்ற இடத்தில்தான் பெட்ரோல் தீர்ந்துவிட்டது என்ற உண்மை தெரியாத மூன்று நண்பர்கள், உதவும் உள்ளத்துடன் பெட்ரோலுடன் அங்கு டூ வீலரில் விரைந்து வந்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே ஆடு திருடர்களைத் தேடிக்கொண்டிருந்த ஊர் மக்கள், பெட்ரோல் கேனுடன் சென்றவர்களைத் திருடர்கள் என நினைத்து அடி வெளுத்தெடுத்துவிட்டனர். தகவல் காவல்துறையினருக்குத் தெரியவர... விரைந்து வந்து மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, பிறகு உண்மையான ஆட்டுத் திருடர்களைக் கைதுசெய்திருக்கின்றனர்.

‘‘ஆடு திருடுனது ஒருத்தன்... அடி வாங்கினது இன்னொருத்தனா?’’ என்று வேடிக்கையாகப் பேசிவருகிறார்கள் பகுதி மக்கள்.

லோக்கல் போஸ்ட்

‘‘நீங்க நல்லாருங்க...’’ - வயிறெரிந்த விவசாயிகள்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு விவசாயிகள் நடத்திய நூதன போராட்டம் டெல்டா மாவட்டங்கள் முழுக்கப் பேசுபொருளாகியிருக்கிறது. ‘‘மழையால பயிரை இழந்த நாங்க இன்ஷூரன்ஸாவது கிடைக்கும்னு நம்பி, கட்டின பணத்தையும் இழந்து நிக்கிறோம்... நீங்க நல்லாருங்க...’’ என்று ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மண்ணைவாரித் தூற்றினர் விவசாயிகள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “மயிலாடுதுறை மாவட்டத்துக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் இன்ஷூரன்ஸ் 16 கோடியே 17 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 281 வருவாய் கிராமங்களில் 53 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் 150 கோடி ரூபாய் வரை, இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு பிரீமியமாக செலுத்தியிருக்கும் நிலையில், அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்தும் சில மாவட்டங்களுக்கு மட்டும் அதிகமாகத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முறைகேட்டைத் தடுக்கவும், உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு கேட்டுமே இந்தப் போராட்டம்” என்றனர்.

லோக்கல் போஸ்ட்

‘‘த்ரீ நாட் ஒன்... மாட்டுக்குப் புண்ணாக்கு வெய்ங்க!’’

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, கண்டமனூர் பகுதிகளில் மினி வேன் வைத்து மாடுகளைத் திருடிய பலே திருடர்கள் மூன்று பேரை போலீஸார் பிடித்துள்ளனர். திருடும் மாடுகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்பதையே தொழிலாக வைத்திருந்திருக்கிறார்கள் அவர்கள். கடைசியாக மூன்று மாடுகளைத் திருடியபோது, நல்ல விலைக்கு ஆசைப்பட்டு ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்றிருக்கிறார்கள். அப்போது அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்த போலீஸார், மூன்று பசு மாடுகளையும் மீட்டு பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கட்டினர். மாடுகள் இரைக்காகக் கத்த... அதைச் சகிக்க முடியாத போலீஸாரும், காவல் அதிகாரிகளும் வேளாவேளைக்கு வைக்கோல் போட்டு, தண்ணீர் காட்டியிருக்கின்றனர். ‘‘குற்றவாளிகளைப் பிடித்ததுகூட எளிதாக இருந்தது. ஆனால், மீட்ட மாடுகளை நீதிமன்ற நடைமுறைகளை முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும்வரை போதும் போதும் என ஆகிவிட்டது’’ என்று இன்னமும் புலம்புகிறார்கள் காக்கிகள்.

செவிலியரின் தலைமுடி அறுத்தெறிந்த தி.மு.க பெண்!

நெல்லை மாநகரப் பகுதியில் ஆளுங்கட்சியின் முக்கியப் பெண் பிரமுகர் ஒருவர், தன் கணவருடன் தவறான தொடர்பில் இருந்த செவிலியரின் தலைமுடியை அறுத்து வீசிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மாநகராட்சியில் முக்கிய மக்கள் பிரதிநிதியாக இருக்கும் அந்தப் பெண், தன் கணவருடன் தொடர்பில் இருந்த செவிலியரைப் பலமுறை நேரில் சந்தித்து எச்சரிக்கை விடுத்தாராம். ஆனாலும் உறவு தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த பெண் பிரமுகர், செவிலியரின் வீட்டுக்குத் தன் உறவினர்கள் சூழச் சென்று அடித்து உதைத்திருக்கிறார். அதன் பின்னரும் ஆத்திரம் தணியாத அவர், அங்கு கிடந்த அரிவாளை எடுத்து செவிலியரின் தலைமுடியைப் பிடித்து அறுத்துவிட்டாராம். அதனால் ஏற்பட்ட அவமானத்தால் கூனிக் குறுகிய அந்தச் செவிலியர், வீட்டைவிட்டே வெளியே வராமல் முடங்கிக்கிடக்கிறாராம். ஊருக்கே இந்த விவகாரம் தெரிந்தபோதிலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் இரு தரப்புமே புகார் அளிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்!