Published:Updated:

பல் இல்லாத காவல்துறை புகார் ஆணையம்... சட்டத் திருத்தம் செய்யத் தயங்கும் அரசு!

காவல்துறை
பிரீமியம் ஸ்டோரி
காவல்துறை

கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை-மகன் அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப்போட்டது.

பல் இல்லாத காவல்துறை புகார் ஆணையம்... சட்டத் திருத்தம் செய்யத் தயங்கும் அரசு!

கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை-மகன் அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப்போட்டது.

Published:Updated:
காவல்துறை
பிரீமியம் ஸ்டோரி
காவல்துறை

‘ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானது’ என்று பெருமைப்பட்டுக்கொள்கிற தமிழ்நாடு காவல்துறை, ‘லாக்கப்’ மரணத்திலும் தென்னிந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக உயர் நீதிமன்றம்வரை சுட்டிக்காட்டப்பட்டிருப்பது தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது!

காவல்துறை புகார் ஆணையம்...

`காவல்துறையைச் சீர்திருத்தவும், புதிய காவல்துறை சட்டங்களைக் கொண்டுவருவதற்கும் பல்வேறு ஆணையங்கள் அரசுக்கு அளித்த பரிந்துரைகள் பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கின்றன... அவற்றைச் செயல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி முன்னாள் காவல்துறை அதிகாரியான பிகாஷ் சிங் கடந்த 1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து, 2006-ல் ஏழு கட்டளைகளை பிறப்பித்த நீதிமன்றம் அவற்றை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. அவற்றுள் முக்கியமான ஒன்று, `காவல்துறையினர் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்மீது புகார்கள் கொடுக்கவும், அந்தப் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் மாநில, மாவட்ட அளவிலான காவல்துறை புகார் ஆணையங்களை அமைக்க வேண்டும்’ என்பது!

தொடர் மெத்தனம், நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டு `காவல்துறை சீர்திருத்த அவசரச் சட்டம்’ கொண்டுவந்தது. அதன்படி மாநில, மாவட்ட அளவில் காவல்துறை புகார் ஆணையங்களும் அமைக்கப்பட்டன.

பல் இல்லாத காவல்துறை புகார் ஆணையம்... சட்டத் திருத்தம் செய்யத் தயங்கும் அரசு!

அதில் என்ன சிக்கல்?

‘மாநில அளவிலான காவல்துறை புகார் ஆணையத்தை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலும், மாவட்ட அளவிலான காவல்துறை புகார் ஆணையத்தை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலும்தான் அமைக்க வேண்டும்’ என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால், தமிழ்நாடு அரசு அமைத்த மாநில அளவிலான காவல்துறை புகார் ஆணையம் உள்துறைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டதுடன், டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான ஆணையம் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. போன்ற காவல்துறை அதிகாரிகளை உறுப்பினர் களாகவும்கொண்டு அமைக்கப்பட்டது. ‘இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது; சட்டவிரோதமானது’ எனக் குற்றம்சாட்டுகிறார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், ம.நீ.ம துணைத்தலைவருமான ஏ.ஜி.மவுரியா.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘`கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை-மகன் அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப்போட்டது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் சுதந்திரமாகச் செயல்படும் வகையிலான காவல்துறை புகார் ஆணையங்களை மாநில, மாவட்ட அளவில் ஏற்படுத்த வேண்டும்; காவல்துறை சீர்திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி அந்த ஆண்டே ம.நீ.ம சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம் `இது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. ஆனால் முந்தைய அரசும் சரி, இந்த அரசும் சரி... உரிய பதிலளிக்காமல் இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்துவருகின்றன” என்றார்.

இது குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஹென்றி திபேன் பேசியபோது, ``காவல் நிலையங்களிலும் சிறைச்சாலையிலும் காவல்துறை அதிகாரிகளின் சித்ரவதைகள் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுவரை வெளியில் வந்திருப்பவை வெகு சில மட்டுமே. வெளிவராமல் மறைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம். சமூகநீதி அரசு என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க அரசு இதை எப்படி அனுமதிக்கிறது... முதல்வர் ஸ்டாலின் தாமாக முன்வந்து புகார் ஆணையத்தைச் சீர்ப்படுத்த வேண்டுமல்லவா... ஏன் செய்யவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

ஏ.ஜி.மவுரியா
ஏ.ஜி.மவுரியா

இறுதி அவகாசம் கொடுத்த நீதிமன்றம்!

இந்த நிலையில், `காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூன் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு, ``காவல் நிலைய மரணங்களில் தென் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. காவல்துறை புகார் ஆணையம் அமைப்பதிலுள்ள சட்டத் திருத்தம் சம்பந்தப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தது. தமிழ்நாடு அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞரோ, ``காவல்துறை புகார் ஆணையக்குழுவுக்கு உள்துறை செயலாளர்தான் தலைமை வகிக்கிறார். அவர் காவல்துறை சார்ந்தவர் இல்லை என்பதால், அவர் தலைமையில் குழு அமைத்ததில் எந்தத் தவறும் இல்லை” என வாதாடினார்.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

குறுக்கிட்ட நீதிபதிகள், ``ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க அரசு அஞ்சுகிறதா?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், ``விசாரணைக் கைதிகளை இரக்கமற்று தாக்குவதும் அதனால் ஏற்படும் மரணக் குற்றங்களும் காவல்துறையினரின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது” என விமர்சித்தனர்.

இறுதியாக, ``இதை அரசுக்கு எதிரான உத்தரவாக அல்லாமல், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரானதாக மட்டுமே கருதி, மாநில அரசே ஒரு நல்ல முடிவெடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும் என நம்புகிறோம்’’ எனக் கூறி, தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கின்றனர் நீதிபதிகள்.

‘பல் இல்லாத’ காவல்துறை புகார் ஆணையத்தை அரசு பலப்படுத்தும் என்று நாமும் நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism