Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லை!

கோவையின் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்கள் ஐந்து பேரில், ஆக்டிவாக வலம்வருபவர் அவர். கோவையிலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க தோல்வியைத் தழுவிவிட்ட நிலையில், அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும் மேயர் பதவியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று காய்நகர்த்திவருகிறார். தனக்கு சீட் கேட்டால் தர மாட்டார்கள் என்பதை உணர்ந்து, தன் மனைவியை அதற்காகத் தயார்படுத்திவருகிறார். அதற்காக, தன் மனைவிக்குப் போட்டியாக உள்ள மகளிரணியினர், பெண் நிர்வாகிகள்மீது கட்சி வட்டாரத்திலும் ஊடகங்களிலும் அவதூறு பரப்பிவருகிறாராம். கடுப்பான பெண் உடன்பிறப்புகள், ‘சின்னவரைப் பார்த்து புகார் வாசிக்கலாமா... பிரஸ் மீட் வைத்து அவர் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றலாமா?’ என்று ஆலோசித்துவருகிறார்களாம்.

கரைவேட்டி டாட் காம்

புதுச்சேரிக்கு வந்த சோதனை!

புதுச்சேரியில் பல அரசியல் தலைவர்களுக்கும், ரௌடிகளுக்குமான நெருக்கம் என்பது ஊரறிந்தது. அரசியல் தலைவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ரௌடிகள், அதை முக்கியச் சந்திப்புகளில் மெகா சைஸ் கட்-அவுட்களாக வைக்கும் காட்சிகளை அடிக்கடி காணலாம். புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரௌடி ஒருவர், ஆயுள் தண்டனை பெற்று காலாப்பட்டு மத்தியச் சிறையில் இருக்கிறார். சிறையில் இருந்துகொண்டே வெளியிலிருக்கும் தன் கூட்டாளிகள் மூலம் பல தொழிலதிபர்களைப் பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆட்சியின்போது அந்த ரௌடியின் வீட்டில் சோதனை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் நாராயணசாமி. இந்தநிலையில், தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கும் அந்த ரௌடியை, கடந்த வாரம் முத்தியால்பேட்டையில் இருக்கும் கோயில் ஒன்றில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினாராம் அமைச்சர் ஒருவர். அதைப் பார்த்த பக்தர்கள் சிலர், ‘‘என்னடா இது புதுச்சேரிக்கு வந்த சோதனை... சிவாய நம... சிவாய நம…’’ என்று தலையிலடித்துக்கொண்டார்கள்.

‘‘என்னது... யானைக்குத் தீ வெச்சுட்டாங்களா?’’

நீலகிரி மாவட்டம் மசினகுடியில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த காட்டேஜ் வளாகத்துக்குள், உணவு தேடிவந்த காட்டுயானையின்மீது எரியும் டயரைத் தூக்கியெறிந்து, கொளுத்திக் கொன்ற சம்பவத்துக்கு ஒட்டுமொத்த நாடும் கொதித்தது. இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான ரிக்கி ராயன், பல மாதங்களாகத் தலைமறைவாக இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் குன்னூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘‘என்னது... யானைக்குத் தீ வெச்சுட்டாங்களா? எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது’’ என்று அவர் அளித்த பதிலில் செய்தியாளர்கள் உறைந்துபோனார்கள். ‘‘என்னதான் அ.தி.மு.க ஆட்சியில இந்தச் சம்பவம் நடந்திருந்தாலும், அமைச்சர் உள்ளூர் ஆள்தானே... இது எப்படித் தெரியாம இருக்கும்? சரி... பதவிக்கு வந்த பின்னாடியாவது தன் துறை சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தைத் தெரிஞ்சுவெச்சுருந் திருக்கலாம். நாட்டையே கொதிப்படையவெச்ச விஷயத்தையே தெரியாதுன்னு சொல்றாரே வனத்துறை அமைச்சர்’’ என்று அருகிலிருந்த உடன்பிறப்புகள் சங்கடத்தோடு முணுமுணுத்திருக்கிறார்கள்.

டாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரிலுள்ள டாஸ்மாக் கடைகளில், நாளொன்றுக்கு 1,000 ரூபாயை அடாவடியாக வசூல் செய்துவருகிறாராம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெல் பிரமுகர். “குவார்ட்டருக்கும், கூலிங் பீருக்கும் 10 ரூபாய் அதிகமாவெச்சு விக்குறதை நாங்க கண்டுக்கிட்டோமா? அதுபோல நான் கேக்குறதைக் கொடுத்துடு. இல்லைன்னா, ஒழுங்கா வீடு போய்ச் சேர முடியாது” என்று குண்டர்களைவிட்டு மிரட்டுகிறாராம். “இதெல்லாம் தப்பில்லையாங்க... நீங்களும் பங்கு வாங்கிக்கிட்டு கமுக்கமா இருக்கீங்களோ?” என்ற கேள்வியோடு, பெல் பிரமுகருக்கு மேலுள்ள ‘வெளிச்ச’ பிரமுகரிடம் போய் நின்றிருக்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். அவரோ, “மதுவுல வர்ற மாமூலை எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன். நீங்க அவருகிட்டேயே பேசிக்கோங்க. என்னால எதுவும் செய்ய முடியாது’’ என்று நைசாக நழுவிக்கொண்டாராம்.

கரைவேட்டி டாட் காம்

சோகப்பாடல் கேட்கும் `பால்’ பிரமுகர்!

மஞ்சள் சட்டைக்குப் பேர்போன பால் பிரமுகர் அமைச்சராக இருந்தபோது, அவரைப்போலவே மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு, ‘லாலே லாலல லாலாஆஆ...’ என்று கோரஸ் பாடியபடி ஒரு கும்பல் எப்போதும் அவர் பின்னால் சுற்றும். கட்சி சீனியர்கள், இந்தக் கும்பலின் செயல்களைப் பார்த்து அரண்டுபோன சம்பவங்கள் பல உண்டு. பால் பிரமுகரே பரிதாபப்பட்டு ‘தூங்கப்போறேன் வீட்டுக்குப் போங்கய்யா...’ என்று சொன்னால்தான் அங்கிருந்து கிளம்பும் அந்தக் கும்பல். இவர்களுக்கு மாதந்தோறும் தகுதிக்கேற்ப லட்சக்கணக்கில் படியளந்தாராம் பால் பிரமுகர். அந்தச் செல்வாக்கில் இவர்கள், ‘ஆவின்’ தொடங்கி அனைத்து அரசுத்துறைகளிலும் காரியம் சாதித்துவந்தார்களாம். சட்டமன்றத் தேர்தலில் தோற்ற அடுத்த நாளே பால் பிரமுகரை அந்த குரூப் கைவிட்டதாம். இதனால் மிகவும் நொந்துபோனாராம் பால் பிரமுகர். ‘லாலே...’ பாடி கடும் விசுவாசம் காட்டிய அந்தக் கும்பல்தான், ஆவினில் நடந்த முறைகேடுகள் பற்றி அரசுக்குத் தகவல் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்ற செய்தியறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனாராம் பால் பிரமுகர். இப்போது விரக்தியில் விட்டத்தைப் பார்த்தபடி சோகப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism