Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

எகிறிய எம்.எல்.ஏ பதுங்கியது ஏன்? - சங்கரன்கோவில் சரண்டர்!

தி.மு.க-வின் தென்காசி மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவுடன் சங்கரன்கோவில் தொகுதிக்கு சீட் பெற்று எம்.எல்.ஏ ஆனவர் ராஜா. இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டதை அடுத்து, தென்காசி எம்.பி தனுஷ்குமாருடன் கைகோத்துக்கொண்டு தனி கோஷ்டியாகச் செயல்பட்டுவந்தார் ராஜா. இந்த நிலையில்தான், ராஜாவின் செயல்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு வரவேண்டிய அரசு மருத்துவமனையை இடம் மாற்ற முயன்றதாக எழுந்த சர்ச்சையில், வைகோவின் கோபத்துக்கு ஆளான ராஜாவுக்கு கட்சித் தலைமையிடமிருந்து ஆறுதலான வார்த்தைகூட சொல்லப்படவில்லையாம். இதனால், அப்செட்டானவர் அப்படியே யூ டர்ன் போட்டு மீண்டும் மாவட்டச் செயலாளரிடமே சரண்டர் ஆகிவிட்டாராம். இதையடுத்து, ‘‘ராஜா நிஜத்துல வேணும்னா வலு தூக்கும் வீரரா இருக்கலாம். ஆனா, அரசியல்ல அவரை மாதிரி எத்தனை பேரை நாங்க பார்த்திருக்கோம்’ என்று கமென்ட் அடிக்கிறார்கள் மா.செ-வின் விசுவாசிகள்!

“வடை போச்சே!” - புலம்பும் கோவை உடன்பிறப்புகள்!

கோவை மாவட்டத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே கட்சியின் நிர்வாகிகள் பலரும் கமிஷனுக்காக டாஸ்மாக் கடைகளை எல்லை வகுத்து, பிரித்துக்கொண்டார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் கட்சியை வளர்க்கும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து டாஸ்மாக் கமிஷன் வருவது நின்றுவிட்டதாம். அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள் டாஸ்மாக் ஏரியாவில் விசாரித்தால், “அவரோட துறையிலேயே வசூல் நடத்த அமைச்சர் எப்படி அனுமதிப்பாரு? அவரோட ஆளுங்களே எல்லாத்தையும் பார்த்துக்குறாங்க!” என்று பதில் வந்ததாம். ‘வடை போச்சே!” ரீதியில் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட தி.மு.க நிர்வாகிகள்.

கரைவேட்டி டாட் காம்

பூட்டு மாவட்டத்தில் எகிறுது ‘ரேட்டு’!

பூட்டு மாவட்டத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் ‘சுகர்’ வி.ஐ.பி-யும், ‘பிக்’ வி.ஐ.பி-யும் மண் அள்ளும் விஷயத்தில் மட்டும் சமரசமாகிவிட்டார்களாம். ‘அந்தக் கோட்டைத் தாண்டி நான் வர மாட்டேன்... இந்தக் கோட்டைத் தாண்டி நீ வரக் கூடாது’ ரேஞ்சுக்குத் தங்களுக்குள் ஏரியா பிரித்துக்கொண்டு மண் அள்ளும் ஒப்பந்ததாரர்களிடம் புகுந்து விளையாடுகிறார்கள். ரேட்டும் கடந்த ஆட்சியைவிட இரு மடங்காக உயர்ந்துவிட்டதாம். இன்னொரு பக்கம் வேலை, இடமாற்றம் என்று ‘பிக்’ வி.ஐ.பி-யிடம் சிபாரிசு கேட்டுவரும் கட்சியினரை, ‘‘எதுவா இருந்தாலும் மாவட்டத்தைப் போய்ப் பாருங்க’’ என்று அனுப்பிவிடுகிறாராம். மாவட்டம் வேறு யாருமல்ல... அவரின் மகன்தான். அவரிடம் சென்றால் ‘முக்கியமான பேப்பர்’ இல்லாமல் வேலை நடப்பதில்லையாம். இதையெல்லாம் பார்த்து “பெரிய மனுஷங்களே இப்படி இருக்காங்களே!” என்று புலம்புகிறார்கள் கட்சி நிர்வாகிகள்!

“எம்.எல்.ஏ-வையே மிரட்டுவீங்களா?” - ஊட்டியில் கொந்தளிக்கும் கதர்கள்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கணேஷ் இரண்டாவது முறையாக ஊட்டி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். ஊட்டியில் மழை பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக வனத்துறை அமைச்சர் அல்லது நீலகிரி எம்.பி-க்காக ஆளுங்கட்சி நிர்வாகிகள் காத்துக்கிடக்க... கணேஷ் ‘சோலோ’வாகக் களமிறங்கி வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுவருகிறார். இதனால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரும் அவர்மீது கடுப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், சமீபத்தில் ஊட்டி காந்தல் பகுதியில் மழை பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற கணேஷைத் தன் ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்ட ஊட்டி தி.மு.க நகரச் செயலாளர் ஜார்ஜ், ‘‘நாங்க எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், உங்களைக் கூப்பிடுறோம். ஆனா, நீங்க தனியா போய் மக்களைச் சந்திக்குறீங்க. இது கூட்டணிக்கு நல்லதில்லை’’ என்று எச்சரித்தாராம். இதையடுத்து, ‘‘ஆளுங்கட்சி நிர்வாகின்னா, எங்க கட்சி எம்‌.எல்.ஏ-வையே மிரட்டுவீங்களா?’’ என்று கொந்தளிக்கிறார்கள் கதர்ச் சட்டைக்காரர்கள்.

அன்பிலுக்குப் போட்டி அருண் நேரு? - களைகட்டும் திருச்சி கோஷ்டி அரசியல்!

‘‘அமைச்சர் அன்பில் மகேஷுக்குப் போட்டியாக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவைக் களமிறக்குகிறார்கள்!’’ - திருச்சி தி.மு.க-வின் ஹாட் டாபிக் இதுதான். கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் நேருவின் பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாகத் திருச்சி முழுவதும் போஸ்டர்களை ஒட்டி திக்குமுக்காட வைத்தார்கள் அவரின் ஆதரவாளர்கள். கடந்த காலங்களில் நேருவின் புகைப்படம் மட்டுமே போஸ்டர்களில் இடம்பெற்ற நிலையில், இந்தமுறை அருண் நேருவின் புகைப்படமும் இருந்தது. கூடவே ஏகத்துக்கும் அருண் நேருவைப் புகழ்ந்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. சமீபத்தில் மழைச் சேதங்களைப் பார்வையிட முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தபோது விமான நிலைய ஓய்வறையில் முதல்வருடன் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருடன் அருண் நேருவும் சென்று சந்தித்தார். அப்போதே, “கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத அருண் நேருவை முதல்வரைச் சந்திக்க எப்படி அனுமதிக்கலாம்?” என்று அன்பிலின் ஆதரவாளர்கள் முணுமுணுத்தார்கள். இதையடுத்தே அன்பில் மகேஷுக்குப் போட்டியாக நேருவின் மகனை இப்போதே தயார்ப்படுத்துகிறார்கள் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இதற்கிடையே டிசம்பர் 2-ம் தேதி அன்பில் மகேஷ் பிறந்தநாளையொட்டி நகரின் பல இடங்களில் அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர்களையும் பேனர்களையும் வைத்திருந்த நிலையில், சட்ட விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி பேனர்களை அப்புறப்படுத்தும்படி சொல்லிவிட்டாராம் அன்பில் மகேஷ். வருகிற டிசம்பர் 12-ம் தேதி அருண் நேருவின் பிறந்தநாள் வருகிறது. அப்போது அவர்கள் தரப்பு என்ன செய்யப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறது அன்பில் கோஷ்டி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism