Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட் காம்

- 'வட்டம்’ பாலா

‘‘அவரே குண்டுவெப்பாராம்... அவரே எடுப்பாராம்!’’ - கலாய்க்கப்படும் தி.மு.க மா.செ வரதராஜன்

தி.மு.க கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன். பொள்ளாச்சி கொட்டாம்பட்டி அருகே ஆக்கிரமிப்பிலுள்ள ஒரு குளத்தைத் தூர்வார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக, படங்களுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். ‘‘தனியார் தோட்டத்தின் வழியாகக் கழிவுநீர் செல்வதைத் தடுத்து, கழிவுநீரைக் குளத்துக்குத் திருப்பத்தான் குறிப்பிட்ட அந்தக் குளத்தைத் தூர்வாருகிறார்கள். ஒரு தனியார் தோட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் செய்திருக்கும் வேலையால், குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர் தேங்குகிறது’’ என்று பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் சுதாரித்துக்கொண்ட வரதராஜன், ‘கழிவுநீர் செல்லும் பாதையைச் சரிசெய்ய வேண்டும்’ என்று பொள்ளாச்சி சப் கலெக்டரிடம் பொதுவாக ஒரு மனுவைக் கொடுத்துச் சமாளித்திருக்கிறார். ‘‘அவரே குண்டுவெப்பாராம்... அவரே எடுப்பாராம்!’’ என்று ‘முதல்வன்’ பட ரகுவரன் டயலாக்கைச் சொல்லிக் கிண்டலடிக்கிறார்கள் பொதுமக்கள்.

கரைவேட்டி டாட் காம்

‘‘வைத்திலிங்கம் அடாவடியா பேசுறதை நிறுத்திக்கணும்!”
- கொந்தளிக்கும் நிர்வாகிகள்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்டங்களின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். ‘மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை’ என்று தி.மு.க அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூரில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, ‘ஆர்ப்பாட்டத்துக்கு ஒவ்வொரு ஒன்றியச் செயலாளரும் பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டிவர வேண்டும். இல்லையென்றால், ஒன்றியச் செயலாளர் பதவி பறிக்கப்படும்’ என ஓப்பன் மைக்கில் மிரட்டும் தொனியில் பேசினார். ‘‘இப்படி அடாவடியா பேசுறதை அவர் நிறுத்திக்கறதுதான் அவருக்கும் கட்சிக்கும் நல்லது’’ என்று கொந்தளிக்கிறார்கள் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள்.

‘‘என் பேரும் சுப்பிரமணிண்ணா!’’ - தலைவரைச் சுற்றும் தொண்டர்கள்!

‘வாழும் காமராஜர்’ என்ற அடைமொழியுடன் வலம்வரும் தலைவரின் சமீபத்திய செயல்பாடுதான் புதுச்சேரியின் ஹாட் டாபிக். பல ஆண்டுகளாகத் தன்னுடன் இருக்கும் நண்பர்களுக்கும், உண்மை விசுவாசிகளுக்கும் அவரவர் செய்த ‘உதவிகளுக்கும் தியாகங்களுக்கும்’ தகுந்த மாதிரி தன் சொத்துகளை எழுதிவைத்துவருகிறாராம் அந்தத் தலைவர். அந்த வகையில் சமீபத்தில் தன் கடிகார நண்பருக்கு சுமார் 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை எழுதிக்கொடுத்திருக்கிறாராம். ஐரோப்பிய நாட்டை அடைமொழியாகக்கொண்டவர், முனி கடவுளின் பெயரைக் கொண்டவர்களுக்கு முதல் ரவுண்டில் நோட்டுகளாக செட்டில் செய்யப்பட்டிருக்கிறதாம். அவரின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்த அடிப்பொடிகள், பழைய விஜயகாந்த் பட காமெடிபோல ‘‘என் பேரும் சுப்பிரமணிண்ணா’’ என்று தலையைச் சொறிந்துகொண்டு அவரை மொய்த்துவருகிறார்களாம்!‘

‘எத்தனை கவுன்சிலர் சீட் வேணும்?’’ - செல்லப்பாண்டியனுக்குத் தூண்டில்போட்ட சண்முகநாதன்

அ.தி.மு.க-வின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சண்முகநாதனும், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனும் தனித்தனி அணியாக முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். மா.செ பதவியைக் கைப்பற்றத் துடிக்கிறார் செல்லப்பாண்டியன். சண்முகநாதனின் மீது அதிருப்தியிலுள்ள முக்கிய நிர்வாகிகள், செல்லப்பாண்டியன் பக்கம் தாவினார்கள். இந்நிலையில், சண்முகநாதன் அரசியலில் வளர்ந்த கதையை மேடையில் நக்கலாகப் பேசிய தலைமைக்கழகப் பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி மீது ‘அசிங்க’த்தைப் பூசிய விவகாரத்தில் சண்முகநாதன் உள்ளிட்ட நான்கு பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ‘‘இதே நிலை தொடர்ந்தால் வரும் மாநகராட்சித் தேர்தலில் தோல்வி நிச்சயம்’’ என்று செல்லப்பாண்டியன் தரப்பினர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரிடமும் பற்றவைக்க... இருவரும் தனித்தனியாக அழைத்து சண்முகநாதனை எச்சரித்திருக்கிறார்கள். இதையடுத்து செல்லப்பாண்டியனுக்கு போன் செய்த சண்முகநாதன், “செல்லப்பாண்டிண்ணே... 60 வார்டுகள்ல உங்களுக்கு எத்தனை கவுன்சிலர் சீட் வேணும் கேளுங்கண்ணே... சீட் ஒதுக்கிவெச்சுடுவோம்’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘சண்முகநாதனைப் பதவியிலருந்து தூக்கிட்டு நமக்கு பதவி கொடுப்பாங்கன்னு பார்த்தா... கவுன்சிலர் சீட்டு எத்தனை வேணும்னு நம்மகிட்டயே இவர் கேட்குறாரே?’’ என்று புலம்பிவருகிறாராம் செல்லப்பாண்டியன்.

கரைவேட்டி டாட் காம்

‘‘தி.மு.க ஆபீஸ்லயே லாட்டரி பிசினஸா?’’ - கொதிக்கும் உடன்பிறப்புகள்!

திருப்பூர் எம்.ஜி.பி தியேட்டர் அருகேயுள்ள தி.மு.க-வின் 49-வது வார்டு செயலாளர் அலுவலகத்தில் லாட்டரிச்சீட்டு விற்பனை நடைபெற்றுவந்ததை, சமீபத்தில் நல்லூர் போலீஸார் ஆதாரங்களோடு பிடித்தார்கள். மனோகரன், கணேசன், கவாங்கர், பழனியப்பன் என நான்கு பேர்மீது வழக்கு பதியப்பட்டது. இவர்களில் மனோகரன், 49-வது வார்டு தி.மு.க செயலாளர். இவருடைய அலுவலகத்தில்தான் லாட்டரிச்சீட்டு விற்பனை ஜோராக நடந்துவந்திருக்கிறது. இந்த மனோகரன், திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க செயலாளரான டி.கே.டி.நாகராஜின் சகோதரர். திருப்பூர் தெற்குத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜின் வலதுகரமான நாகராஜ் மீது, ஏற்கெனவே டாஸ்மாக் பாரில் அடாவடி வசூல் செய்துவருவதாகப் புகார்கள் உள்ளன. இப்போது அவருடைய சகோதரர், கட்சி அலுவலகத்திலேயே பகிரங்கமாக லாட்டரி விற்று போலீஸில் சிக்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது!