Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

‘‘இப்பிடி பச்சையா ஜால்ரா அடிக்காதீங்க..!’’

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில், எதிர்க்கட்சியாக இருக்கிறது தி.மு.க. ‘புதுச்சேரி மின்துறையைத் தனியார்மயமாக்கக் கூடாது’ என்று மின்துறை ஊழியர்கள் போராடி வருகின்றனர். முதல்வர் ரங்கசாமியும், ‘‘மக்கள் கருத்தைக் கேட்டறிந்து யாரும் பாதிக்கப்படாதவாறு அரசு முடிவெடுக்கும்’’ என்றார். ஆனால், திடீரென மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, மின்துறை ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்தபோது, “தனியார்மயமானால் நல்லதுதானே...” என்று அவர் அந்தர் பல்டியடிக்க... கடுப்பான ஊழியர்கள், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் ஒருவர், “முதல்வர் ரங்கசாமி ரொம்ப நல்லவர். அவரைச் சந்தித்துப் பேசினால் தனியார்மயத்துக்கு அனுமதி கொடுக்க மாட்டார்” என்று கூறியதால், மீண்டும் எரிச்சலான போராட்டக்காரர்கள் “நீங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லையென்றாலும் பரவாயில்லை. இப்படி ஆளுங்கட்சிக்குப் பச்சையாக ஜால்ரா அடிக்காதீங்க” என்று அவர் காதுபடவே முணுமுணுத்தனர்!

கரைவேட்டி டாட் காம்

‘‘போதும் சாமி என்னைய விட்டுடுங்க..!’’

மேற்குப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் அவர். பல ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருப்பவர். மாவட்டப் பொறுப்பாளராக இருந்தாலும், அவர் ஆக்டிவ் அரசியலில் இருப்பதில்லை. காலை 11 மணிக்கு எழுந்திருப்பது, தோட்டங்களில் பொழுதைக் கழிப்பது, கூட்டங்களுக்கு எப்போதும் தாமதமாக வருவது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். ஒவ்வொரு முறை மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் என்று தகவல் வரும்போதும் அவரது பெயரும் அடிபடும். ஆனால், கடைசி நேரத்தில் அது மாறிவிடும். இப்போது அவரின் ஓய்வு நேரம் மேலும் அதிகரிக்க, “அவருக்கு ரிட்டயர்மென்ட் கொடுங்க” என்று உடன்பிறப்புகள் கோபத்தோடு கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவருமே, “போதும் சாமி... என்னைய விட்டுடுங்க” என்று சொல்லிவிட்டாராம். அடுத்து தலைமை அறிவிக்கும் அந்த ஒற்றை முடிவுக்காக, பட்டாசு வெடித்துக் கொண்டாடக் காத்துக் கிடக்கின்றனர் உடன்பிறப்புகள்!

எம்.ஜி.ஆர் கோயிலும், எம்.ஜி.ஆர் மாளிகையும்!

வெயில் மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ‘கோடி ரூபாயில் எம்.ஜி.ஆருக்குக் கோயில் கட்டப்போகிறேன்’ எனக் கூவிக் கூவி, வசூல்வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். ‘‘ஆஹா... அ.தி.மு.க தலைவர்களே வாத்தியாரை மறந்துவிட்ட நிலையில், அண்ணனுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு... தலைவருக்காகத் தன்னோட சொந்த இடத்திலேயே கோடி ரூபா செலவழிச்சுக் கோயில் கட்டுகிறாரே...’’ எனப் புல்லரித்துப்போன ரத்தத்தின் ரத்தங்களும் பணம் அனுப்பிவருகின்றனர். ஆனால், லோக்கல் கட்சிக்காரர்களோ ‘‘வெளிநாட்டில் படித்துவரும் மகளின் தேவைக்காக, ‘கோயில் கட்டுகிறேன், குளம் வெட்டுகிறேன்’ என வசூல் செய்துவருகிறார் அவர். கட்சித் தலைமைதான் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர் மாளிகை வரையிலும் புலம்பித் தீர்த்திருக்கிறார்கள்!

“கட்சி வேற வேறன்னாலும் காசு ரொம்ப முக்கியம்டா கொடுக்காப்புளி!”

நவமணிகளில் ஒன்றின் பெயரைக்கொண்ட அந்த நபர், அ.தி.மு.க வழிகாட்டும் குழுவிலிருந்து தடாலடியாக பா.ஜ.க-வில் அடைக்கலமாகி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இப்போது பா.ஜ.க-வில் மாநில அளவிலான பொறுப்பில் இருந்துவந்தாலும், தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான நகைச்சுவையுணர்வு மிகுந்த தலைவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்துவருகிறார். கடந்த தி.மு.க ஆட்சியின் போதிலிருந்தே ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்துவரும் அந்தப் புள்ளி, கமிஷன் கணக்கு வழக்குகளில் சுத்தமாக இருப்பதால் தி.மு.க-வின் நகைச்சுவைத் தலைவருக்கும் ரொம்பவே பிடித்துப்போனதாம். இந்த நட்பின் வழியே, அதிகாரிகளுக்குப் பணியிட மாற்றம் வரையிலும் செய்துதரும் அந்தப் புள்ளியை, பா.ஜ.க-வினர் ஆச்சர்யத்தோடு பார்க்க, உடன்பிறப்புகளோ கோபத்தில் கண் சிவக்கிறார்கள்!

கரைவேட்டி டாட் காம்

‘‘நான்தான் ‘சின்னவர்’ பேசுறேன்..!’’

தமிழ்க் கடவுள் பெயரைக்கொண்ட அந்த தி.மு.க எம்.பி டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது இவருக்குக் கட்சியில் எந்தப் பதவியும் இல்லை. ஆனாலும் அவருடைய தம்பி, ‘என்னை எல்லோரும் சின்னவர் என்றுதான் அழைக்க வேண்டும்’ என வம்படியாகக் கட்சியினருக்குக் கட்டளையிடுகிறாராம். அண்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோதே இது போன்ற அடாவடிகளை தம்பி அரங்கேற்றிவந்ததால், தலைமை வரை புகார் சென்றதில் கொஞ்ச காலம் அடங்கியிருந்தார். ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மீண்டும் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டாராம் தம்பி. கட்சி நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு போன் செய்யும் தம்பி, ‘‘நான் சின்னவர் பேசுறேன்...’’ எனத் தொடங்கி ‘‘நான் சொல்றதை மட்டும் செய்யுங்க...’’ என்ற கட்டளையோடு பேசி முடிக்கிறாராம். பொறுக்க முடியாத உடன்பிறப்புகள் தம்பியின் அட்ராசிட்டிகளை அறிவாலயத்துக்கு மெசேஜ் செய்துவருகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism