Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட் காம்

தலைவர் பதவியைக் குறிவைக்கும் ‘குற்ற’ நபர்!

குற்ற வழக்கொன்றில் சிக்கி, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, தலைமறைவாக இருந்த அந்த நபர் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியால் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு எம்.எல்.ஏ-வாகவும் ஆக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போணியாகாது என்று தெரிந்ததும், பா.ஜ.க-வுக்கு நூல்விட்டுப் பார்த்தார். ஆனால், அவர் கேட்ட தொகுதியைத் தர பா.ஜ.க மறுத்துவிட்டது. அதனால், காங்கிரஸ் கட்சியிலேயே போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர், தற்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமியையே ஓவர்டேக் செய்து, கட்சித் தலைவர் பதவியைக் குறிவைத்து காய்நகர்த்திவருகிறாராம். நாராயணசாமி சும்மாவிடுவாரா? சம்பந்தப்பட்ட நபரின் குற்றக் கோப்புகளைத் தேடியெடுத்து டெல்லிக்குத் தட்டிவிட்டிருக்கிறாராம்.

‘லோன் தரலையா... செயலாளரை மாற்று!’

மக்கள் பிரதிநிதியாகவும் கோலோச்சிய தஞ்சை மாவட்ட தி.மு.க ஒன்றிய நிர்வாகி ஒருவர், தனது ஊரிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கரும்பு பயிரிடாமலேயே பயிரிட்டதாகக் கூறி கடன் கேட்டிருக்கிறார். சங்கச் செயலாளர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, வேறு நபரை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்து கரும்பு லோன் எடுத்து, பெரும் தொகையை மோசடி செய்துவிட்டாராம். தற்போது விஷயம் வெளியே கசிய, அவரின் லீலைகளைப் புகாராகத் தலைமைக்குத் தட்டிவிட்டு அவரின் பதவிக்கு வேட்டுவைக்கக் காத்திருக்கிறார்கள்.

களைகட்டும் கரூர்... உள்குத்து அரசியல்!

கரூர் மாவட்டம், கடவூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராகவும், கடவூர் ஒன்றிய சேர்மனாகவும் இருந்த செல்வராஜ், 10 அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களோடு செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் தி.மு.க-வுக்குத் தாவினார். கட்சிக்கு வந்த சில தினங்களிலேயே ‘உள்குத்து’ அரசியலில் செல்வராஜ் இறங்கிவிட்டதாக கடவூர் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சுதாகர் தரப்பு கொந்தளிக்கிறது. ஒன்றியச் செயலாளரையும், மற்ற பொறுப்பாளர்களையும் அழைக்காமல் ஊர் ஊராகச் சென்று நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடத்தினாராம் செல்வராஜ். கடவூர், சேர்வைக்காரன்விடுதி உள்ளிட்ட ஊர்களில் கூட்டம் நடத்திவிட்டு, பாலவிடுதி வந்தபோது, செல்வராஜின் காரை தி.மு.க-வினர் சிலர் மறித்துவிட்டார்கள். ‘கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத நீங்க எப்படிக் கூட்டம் நடத்தலாம்... ஒன்றியச் செயலாளர் சுதாகரை அழைக்காமல் எப்படி நடத்தலாம்?’ என்று ஆளாளுக்குக் கேள்வி கேட்க, பதில் சொல்லாமல் திணறிய செல்வராஜ், “தெரியாம செஞ்சுட்டேன்” என்று மழுப்பியிருக்கிறார். “செல்வராஜை செந்தில் பாலாஜி முன்னிலைப்படுத்தப் பார்க்கிறார். இல்லைன்னா, அவர் எப்படி தன்னிச்சையா செயல்படுவார்?” என்று சுதாகர் தரப்பு கேள்வியெழுப்ப... “கட்சிப் பணி செஞ்சது தப்பா?” என்று புலம்புகிறது செல்வராஜ் தரப்பு.

கரைவேட்டி டாட் காம்

ஆளுங்கட்சியுடன் நட்பு பாராட்டும் அரச பிரமுகர்!

வறட்சி மாவட்டத்தில் ஒரு காலத்தில் உச்சப்புள்ளியாக வலம்வந்த அரச பிரமுகருக்கு, பதவிபோன பிறகு முக்கியப் பொறுப்போ, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டோ வழங்கப்படவில்லை. அந்தக் கவலையில் இருந்தவருக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சிக்காலத்தில், அவர் உறுப்பினராக இருந்த வாரியத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் சம்பந்தப்பட்ட புகார்கள் முதல்வர் ஸ்டாலினுக்குச் சென்றிருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, கடும் கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம். ‘என்மீது எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுத்துவிடக் கூடாது... உதவி செய்யுங்கள்’ என்று தன் பழைய நண்பரான கண்ணான உச்சப்புள்ளி மூலம் சமாதானம் பேசிவருகிறாராம். அத்துடன், தி.மு.க முக்கியப் புள்ளிகளுடனும் நட்பு பாராட்டிவருகிறாராம்.

சொந்தக் கட்சிக்காரனுக்குப் பதவி இல்லையா?

அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு மாறிவந்தாலும், தொடர்ந்து தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கடலோர ஊர்ப் புள்ளிமீது, ‘சொந்தக் கட்சியினரை ஒதுக்கிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு, மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும், குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கும் பதவி கொடுக்கிறார்’ என்ற குற்றச்சாட்டுகளை நிர்வாகிகள் சிலர் அறிவாலயத்தின் பார்வைக்குக் கொண்டுசென்றார்கள். அங்கிருந்து குட்டு வைக்கப்பட்டதும் அமைதியானவர், இப்போது உச்ச பதவி கிடைத்தவுடன், பதவி வழங்குவதில் பழையபடி தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறாராம். என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துக்கொண்டிருக்கிறார்கள் அவரால் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism