Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

டாஸ்மாக்கில் சாதிக்கும் முதலை!

‘‘நான் முதலமைச்சர் குடும்பத்துக்கு நெருக்கமானவன். திருமதியாரின் ஆன்மிக டூர் ஏற்பாடுகளையே நான்தான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்று தமிழ் வளர்த்த மாநகரில் பந்தாவாக வலம்வருகிறார் முருகக் கடவுள் பெயரைக்கொண்ட முதலைப் புள்ளி. ஆனால், அவர்மீது நில மோசடி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் அடுக்கடுக்காக உள்ளன. ஆனாலும் என்ன... மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் டிரான்ஸ்ஃபர், கான்ட்ராக்ட் விஷயங்களில் புகுந்து விளையாடிவருகிறாராம். பழம் தின்று கொட்டைபோட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளே டாஸ்மாக் விஷயத்தில் மூடியைக்கூடத் திருக முடியாமல் திணறிவரும்போது, முதலையாரின் சாதனை உடன்பிறப்புகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘‘முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருப்பது உண்மைதான்... எப்படி நெருக்கமானார் என்றுதான் தெரியவில்லை’’ என்று உதட்டைப் பிதுக்குகிறார்கள் உடன்பிறப்புகள்.

மலைக்கோட்டை மாநகரப் பதவிக்கு மல்லுக்கட்டு!

மலைக்கோட்டை மாவட்டத்தில், ஆளுங்கட்சியின் மாநகர முக்கியப் பொறுப்புக்கான தேர்தல் ரேஸ் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மீசை அமைச்சரின் வலதுகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் அன்பானவர்தான், பல ஆண்டுகளாக மாநகரின் முக்கியப் பொறுப்பாளராக இருந்துவருகிறார். அமைச்சரின் விசுவாசியான இவருக்குச் சமீபத்தில் மலைக்கோட்டை மாநகராட்சியின் உயர் பதவியும் கொடுக்கப்பட்டது. இப்படியான நிலையில், ‘‘அன்பானவருக்குக் கொடுத்ததெல்லாம் போதுமுங்க. நானும் கட்சிக்காகக் கடுமையா உழைச்சிருக்கேன். இந்த தடவை எனக்கு அந்தப் பதவியைக் கொடுங்க’’ என கவுன்சிலரும், வட்டச் செயலாளருமான ‘முத்தானவர்’ மீசை அமைச்சரிடம் குமுறியிருக்கிறார். அன்பானவர்மீது சொந்தக் கட்சியினரே இப்படி கடும் அதிருப்தியில் இருப்பதால், ‘இம்முறை அவருக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது’ என அமைச்சர் மீசையை நீவியபடியே யோசனையில் ஆழ்ந்துவிட்டார். அமைச்சரின் எண்ணவோட்டத்தை கேட்ச் செய்துவிட்ட முத்தானவர், தன்னுடைய பரம எதிரியான அன்பை காலி செய்துவிட்டு, எப்படியும் அந்தப் பதவியில் அமர்ந்தே தீருவது என்ற கங்கணத்தோடு, வேறு வழிகளில் காய்நகர்த்தத் தொடங்கிவிட்டாராம்!

கரைவேட்டி டாட் காம்

‘`மொத்தத்தையும் நீங்களே சுருட்டிக்கிட்டா எப்பிடி..?’’

குளுகுளு மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்குக் கதர்க் கட்சி சார்பில் ஆள் சேர்ப்பதற்குள் நாக்கு தள்ளிவிடுவதாகப் புலம்புகிறார்கள். காலையில் தொடங்கவேண்டிய ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் சேர்க்கவே மதியம் ஆகிவிடுகிறதாம். இதனால் கடுப்பாகும் உடன்பிறப்புகள், ‘எங்கள் ஆதரவால்தான் உங்களால் இரண்டாவது முறையும் சீட்டைப் பிடிக்க முடிந்தது’ என்று தொகுதியிலுள்ள கதர்க் கட்சி எம்.எல்.ஏ-வின் முகத்துக்கு நேராகவே கிண்டலாகச் சொல்கிறார்களாம். உடன்பிறப்புகள் சொல்வதற்கு ஏற்றாற்போல, பொதுக்கூட்டங்களுக்குக்கூட கதர்க் கட்சித் தொண்டர்களில் 10 பேர்கூட எட்டிப் பார்ப்பதில்லையாம். ஆனாலும், சொந்தக் கட்சியை விட்டுக்கொடுக்க முடியாத அந்த எம்.எல்.ஏ., “எதிர்க்கட்சியாக இருந்தாலும் போன ஆட்சியில்கூட வரும்படி இருந்தது. இப்போது மொத்தத்தையும் நீங்களே சுருட்டிக்கிட்டா... எப்பிடிக் கட்சிக்காரங்க வருவாங்க..?’ என்று பதிலடி கொடுக்கும் தொனியில் புலம்பினாராம்.

மது மயக்கமும், முத்தச் சர்ச்சையும்!

பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கடற்கரையோர மாவட்டத்தில், ஆளுங்கட்சியின் ஒன்றியப் பொறுப்பில் தற்காலிகமாக இருந்துவரும் தமிழ்க் கடவுள் பெயர் கொண்டவருக்கு எதிராக, சொந்தக் கட்சியினரே அறிவாலயம் வரை சென்று கம்பு சுற்றிவருகிறார்கள். “எந்நேரமும் மது மயக்கத்திலேயே இருப்பது, பக்கத்து மாநிலத்திலிருந்து மதுவைக் கடத்திவந்து லோக்கலில் விற்பனை செய்வது, ஆளுங்கட்சி அதிகாரத்தில் காக்கிகளை மிரட்டுவது என ஒன்றியப்புள்ளியின் செயல்பாடுகள் அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் உடன்பிறப்புகள். எல்லாவற்றுக்கும் உச்சமாக, அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில், பொதுமக்கள் முன்னிலையில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார் ஒன்றியப்புள்ளி. கட்சித் தலைமை என்ன ‘ஷாக்’ கொடுக்கப்போகிறதோ..!

கரைவேட்டி டாட் காம்

‘‘பணம் என்றால் பாதாளத்திலும் இறங்கிவிடுவார்கள்!”

மத்திய மாவட்டமொன்றின் போராளித் தலைவர் பெயர்கொண்ட எம்.எல்.ஏ தரப்பு, காசு விஷயத்தில் பலே பேர்வழிகளாம். சரளை மண் எடுப்பதற்காக அனுமதி பெற்றிருக்கும் ஒப்பந்ததாரர்களிடம் நேரடியாகவே சென்று “ஒரு வண்டிக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று கறாராகப் பேரம் பேசுகிறார்களாம். பதிலுக்கு ஒப்பந்ததாரர்கள், “ஒரு வண்டிக்கு 500 ரூபாய் கொடுத்தால், எங்களுக்கு எப்படிக் கட்டுப்படி ஆகும்?” என்று கேட்டால், “இது எங்களுக்கு மட்டும் இல்லை. இதுல பாதிப் பணம் தலைமைக்கும் போகுது. நீங்க எத்தனை வண்டி அடிப்பீங்கனு எங்களுக்குத் தெரியாதா... ஒழுங்கா கப்பம் கட்டுற வழியைப் பாருங்க” எனக் கிடுக்குப்பிடியாகப் பேசி வசூல் செய்துவிடுகிறார்களாம். ‘‘பணம் என்றால் எம்.எல்.ஏ தரப்பினர் பாதாளத்திலும் இறங்கிவிடுவார்கள்” என உடன்பிறப்புகளே கமென்ட் அடிக்கிறார்கள்!