Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

‘மேடத்துக்கு நான் வேண்டப்பட்டவன்!’

மயில் ஆடுகிற மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலின்போது சொந்தக் கட்சி வேட்பாளரையே எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஒரு சுயேச்சை உடன்பிறப்பு. அண்மையில் அவருக்குக் கூடுதலாகக் கட்சிப் பொறுப்பு வழங்கியதில் ஆரம்பித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கும்மியடிக்கின்றன. குறிப்பாக, பழம்பெரும் பாடகர் ஒன்றியத்தில் மட்டும் ஒன்பது நிர்வாகிகளில் ஆறு பேர் கட்சித் தலைமை இல்லத்தரப்பின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களாம். ‘மேடத்துக்கு நான் வேண்டப்பட்டவன்’ எனத் தன்னைத் தானே சொல்லிக்கொண்டு ஆட்டம் போட்டுவரும் முத்தானவர்தான் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லும் உடன்பிறப்புகள், ‘இப்படிச் செய்தால் கட்சி பாதிக்கப்படாதா...’ என்று கண்ணைக் கசக்குகிறார்கள்.

கரைவேட்டி டாட் காம்

பதவி கிடைச்சா கிடா வெட்டு!

திண்டுக்கல் மாவட்டம், கோட்டையூரில் புதிதாகக் கட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க நிர்வாகி ஒருவர் கிடா வெட்டி, ஊருக்கே விருந்துவைத்த விவகாரத்தைத்தான் வாய் மணக்கப் பேசிவருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலின்போது, “கவுன்சிலராகிவிட்டால் கிடா வெட்டி விருந்துவைக்கிறேன்” என்று ஊர் மக்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்தவர், வெற்றிபெற்று கவுன்சிலரான பிறகு பேரூராட்சித் துணைத் தலைவர் பதவிக்கு முயன்றார். அந்தப் பதவி கிடைக்கவில்லை என்றதும் ‘கிடா விருந்தை’ ஓரங்கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில், லோக்கல் அமைச்சரின் சிபாரிசில், கட்சிப் பதவியே கைகூடிவர... உற்சாகமானவர், 20 கிடாக்களை வெட்டி ஊரைக்கூட்டி மணக்க மணக்க விருந்துவைத்து அசத்தியிருக்கிறார். இதே மாவட்டத்திலுள்ள காரமான பேரூராட்சியிலுள்ள தலைவரோ மூன்று பஸ் நிறைய தன் ஆதரவாளர்களைக் குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று, கறி விருந்து வைத்து குஷிப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து, சுற்றுலா அழைத்துச் செல்லவும், கறி விருந்து நடத்தச் சொல்லியும் மாவட்டம் முழுக்க வெற்றிபெற்ற தலைவர்களுக்கு நெருக்கடிகள் அதிகரித்துவருகின்றனவாம்.

கரைவேட்டி டாட் காம்

விநாயகர் ஊர்வலத்திலுமா தேர்தல் பிரசாரம்?

குளுகுளு மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது, தாமரைக் கட்சி மற்றும் மத அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் வழிநெடுகிலும் தி.மு.க-வுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வந்ததோடு, ‘தாமரைக் கட்சிக்கே உங்கள் ஓட்டு’ என்றும்‌ முழங்கினார்களாம். “என்னதான் கட்சிப் பற்று இருந்தாலும் கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா... சாமி ஊர்வலத்திலுமா இப்படி ஓட்டுக் கேட்டு பிரசாரம் பண்ணணும்?’’ என்று தாமரைக் கட்சித் தொண்டர்களே முணுமுணுக்கிறார்கள்.

கரைவேட்டி டாட் காம்

‘போட்ட காசை எடுக்கணுமில்ல..?’

வட மாவட்டத்தைச் சேர்ந்த ‘வனம்’ நகராட்சித் தலைவராக இருக்கிறார், நிலவின் பெயர்கொண்ட கவுன்சிலரின் மனைவி. ஆனால், அதிகாரம் அனைத்தும் நிலவானவர் கைகளில்தான் இருக்கின்றனவாம். அண்மையில், தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆணையரையே மாற்றியவர், அந்தப் பொறுப்பில் தன் சமூகத்தைச் சேர்ந்தவரைக் கொண்டுவந்து இருத்தியிருக்கிறார். ‘என் மனைவியை இந்த இடத்துக்குக் கொண்டுவர 7 கோடிக்கு மேல செலவு செஞ்சுருக்கேன். போட்ட பணத்தைச் சம்பாதிக்க வேண்டாமா..?’ என்று சக கவுன்சிலர்களிடம் சீறுகிற நிலவுப்புள்ளி ‘நான் மாஜி அமைச்சருக்கு சகலை, தெரியுமில்ல..?’ என எதிர்க்கட்சி கவுன்சிலர்களையும் ஆஃப் செய்கிறாராம். நிலவின் இந்த அதிகார ஆட்டப் பின்னணியில், கோட்டை மந்திரியின் மருமகன் சப்போர்ட் இருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள்.

கரைவேட்டி டாட் காம்

எங்களுக்கும் அரசியல் தெரியும்!

மலைக்கோட்டை மாநகராட்சியின் உயர் பதவி, கட்சியின் மாநகர உயர் பதவி என அரசு மற்றும் அரசியல் பதவிகள் இரண்டையும் தன்னுடைய ஆதரவாளருக்குக் கொடுத்து, மலைக்கோட்டை மாநகரத்தையே தன் கன்ட்ரோலில் வைத்திருந்தார் மீசைக்கார அமைச்சர். ஆனால், சமீபத்திய உட்கட்சித் தேர்தலின்போது, மீசைக்காரரின் அதிகாரத்தை உடைக்கும் வகையில் கட்சித் தலைமையிடம் பேசி, கட்சியின் மாநகரப் பொறுப்பை இரண்டாக உடைத்தார் அன்பான அமைச்சர். கூடவே, அப்படி உருவாக்கிய புதிய பதவிக்குத் தன்னுடைய ஆதரவாளரையும் நியமித்து அதிரடித்தார். அன்பான அமைச்சரின் இந்த செனடாப் சாலை அரசியலில் கொதித்துக்கிடக்கிறது மீசைக்காரர் தரப்பு. இதெல்லாம் எங்க போய் முடியுமோ?