அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்

மெகா வேலைவாய்ப்பு முகாம்
பிரீமியம் ஸ்டோரி
News
மெகா வேலைவாய்ப்பு முகாம்

அமைச்சர் சி.வி.கணேசன், “சட்டமன்றத்தில் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்து சாதனை படைக்கும் அண்ணன் உதயநிதியே” என உதயநிதியை ஏகத்துக்கும் புகழ்ந்தார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்
பொலிட்டிகல் பொடிமாஸ்

“கொம்பு சீவுகிறார் அமைச்சர்”

அமைச்சர் சேகர் பாபுவுக்கும், சென்னை எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமனுக்கும் இடையேயான உரசல் சமீபகாலமாக கொழுந்துவிட்டு எரிகிறது. தி.மு.க தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, தன்னுடைய சென்னை கிழக்கு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறார் சேகர் பாபு. அக்டோபர் 12-ம் தேதி, பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ ரவிச்சந்திரனை மேடையில் அமரவைத்தார் சேகர் பாபு. அப்போதே, “பரந்தாமனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை. அவரிடத்தில் ரவிச்சந்திரனை எப்படி உட்கார வைக்கலாம்... பரந்தாமனுக்கு எதிராக ரவிச்சந்திரனைக் கொம்பு சீவிவிடுகிறார் சேகர் பாபு” என பரந்தாமன் ஆதரவாளர்கள் கொதித்தார்கள். அடுத்த நாள், ஸ்டாலினை வாழ்த்தி ‘முரசொலி’யில் பரந்தாமன் வெளியிட்ட விளம்பரத்தில் சேகர் பாபுவின் படம் இல்லை. “மாவட்டச் செயலாளர் படத்தை ஸ்டாம்ப் சைஸ்லகூட போட முடியாதா?” என சேகர் பாபுவின் ஆதரவாளர்கள் காதில் புகைவிடுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையேயான உரசலில், மாவட்ட தி.மு.க-வில் அனல் பறக்கிறது.

பொலிட்டிகல் பொடிமாஸ்

தலைவருக்கு ஒரு குத்து... தம்பிக்கு ஒரு குத்து!

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், மெகா வேலைவாய்ப்பு முகாம், அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதயநிதி தொகுதிக்குள் விழா நடைபெற்றதால், தி.மு.க இளைஞரணியிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். விழாவில் பேசிய துறையின் அமைச்சர் சி.வி.கணேசன், “சட்டமன்றத்தில் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்து சாதனை படைக்கும் அண்ணன் உதயநிதியே” என உதயநிதியை ஏகத்துக்கும் புகழ்ந்தார்.

அருகில் முதல்வர் அமர்ந்திருப்பதை லேட்டாகத்தான் உணர்ந்தார்போல. திடீரென, “அடுத்த 15 ஆண்டுகளுக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதிதான்” என ஒரே போடாகப் போட்டார். இதை எதிர்பார்க்காத இளைஞரணியினர், “அப்ப 16-வது வருஷத்துலதான், சின்னவரு சி.எம் ஆக முடியுமா... தலைவருக்கு ஒரு குத்து, தம்பி உதயநிதிக்கு ஒரு குத்துனு தெளிவா போராருய்யா அமைச்சரு” என கமென்ட் அடித்தனர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்

பன்னீர் அணியில் நட்ராஜ்?

அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன் தங்கள் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து, எடப்பாடியுடன் வருத்தத்தில் இருக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கும் வலை விரித்திருக்கிறது பன்னீர் தரப்பு. மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ நட்ராஜிடமும் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. நட்ராஜ் பாசிட்டிவ் சிக்னல்தான் காட்டியிருக்கிறாராம். எடப்பாடி அணியிலிருக்கும் தி.நகர் சத்யா, ஆர்.கே.நகர் ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, பலராமன், வி.எஸ்.பாபு ஆகியோர் முன்பிருந்ததுபோல எடப்பாடியுடன் நெருக்கமாக இல்லை. கட்சிப் போராட்டங்களில், வெளிமாவட்டங்களில் காட்டும் ஆர்வத்தில் பாதியைக்கூட தலைநகரில் எடப்பாடி காட்டுவதில்லை என்கிறார்கள். இதையெல்லாம் எடுத்துப் பேசி, தலைநகர் அ.தி.மு.க-வைத் தங்கள் வசப்படுத்த வலை விரித்திருக்கிறது பன்னீர் தரப்பு.

பொலிட்டிகல் பொடிமாஸ்

எழுச்சியில்லாத போராட்டம்... அப்செட்டில் உதயநிதி!

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், தி.மு.க இளைஞரணி, மாணவரணி சார்பில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மாவட்டக் கழக நிர்வாகிகள், இதர அணி நிர்வாகிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படாததால், பெருமளவு கூட்டம் திரளவில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க-வின் பங்களிப்பை விளக்கிப் பேசக்கூட சீனியர்கள் யாரும் இல்லை. இதனால், உணர்ச்சியோ, எழுச்சியோ இல்லாத சடங்காக நடந்து முடிந்திருக்கிறது தலைநகரப் போராட்டம். இதே நிலைதான், பல்வேறு மாவட்டங்களிலும் நிலவியது. அரை மணி நேரத்தில் போராட்டத்தை முடித்துவிட்டு, இளைஞரணி நிர்வாகிகள் நடையைக் கட்டிவிட்டார்கள். பல மாவட்டங்களிலும் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் உதயநிதி ஏக அப்செட்!

பொலிட்டிகல் பொடிமாஸ்

ஆ.ராசாவுக்கு வரவேற்பு... கனிமொழிக்குப் போட்டியா?

சமீபத்தில், கோவைக்குச் சென்றிருந்த தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கு பிரமாண்ட வரவேற்பை தி.மு.க-வினர் அளித்தனர். அதுவே கட்சியின் பல சீனியர்களுக்குக் கண்ணை உறுத்திவிட்டது. ‘தூத்துக்குடி மாவட்டத்துக்குள் மட்டும் பாலிடிக்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தவரை, இப்ப மாநில அளவுல களமிறக்கிவிட்டுட்டாங்களே’ என்கிற பொருமல் சத்தமும் அறிவாலய சீனியர்களிடமிருந்து வர ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில், அக்டோபர் 15-ம் தேதி ஊட்டிக்குச் செல்வதற்காக, கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீலகிரி தி.மு.க-வினர் ஏராளமானோர் வந்திருந்தனர். கனிமொழிக்குப் போட்டியாகத்தான் இந்த வரவேற்பு வைபவம் அரங்கேறியதாம். “தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கு கோவையில வரவேற்பளிச்சிருக்காங்க. இனி அவரும் கொங்கு மண்டலத்துல தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்க ஆரம்பிச்சுடுவார். நீலகிரி எம்.பி-யான ஆ.ராசாவுக்கு வரவேற்பளிக்கலைன்னா என்ன மரியாதை இருக்கு... சொத்துக்குவிப்பு வழக்குல ராசா மேல குற்றப்பத்திரிகை தாக்கல் செஞ்சுருக்கு சி.பி.ஐ. இந்தச் சூழலில், கட்சிக்காரங்க அவர்மேல விசுவாசமா இருக்காங்கனு தெரிஞ்சாத்தான் அறிவாலயம்கூட மதிக்கும்” என்கிறார்கள் ஆ.ராசாவின் ஆதரவாளர்கள்.