அரசியல்
அலசல்
Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

‘போஸ்டர் ஒட்டிய கைதான் கிழிக்கும்!’

அண்மையில் அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதி முழுக்க, ‘கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி... புளியம்பட்டி வி.ஏ.ஓ அலுவலகம் என்னாச்சி...’ என்று கொட்டை எழுத்து வாசகங்களுடன் போஸ்டர்கள் மின்னின. `அண்ணாச்சி தொகுதியிலேயே அதிரடி போஸ்டரா?’ என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னணி இதுதான்... ஒன்றரை ஆண்டுக்கு முன்பே புளியம்பட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் அமைத்துத் தரக் கோரி வருவாய்த்துறை அமைச்சரை அணுகியிருக்கிறார் லோக்கலில் இருக்கும் ‘மறுமலர்ச்சி’ பிரமுகர். ஆனால், அமைச்சர் தொடர்ந்து அலட்சியம் காட்ட... கடுப்பாகிப்போனவர் நகரெங்கும் போஸ்டர் ஒட்டிவிட்டார். காண்டாகிப்போன அமைச்சர் தரப்பு, ‘‘ஒட்டிய போஸ்டரை நீங்களே கிழித்துவிடுங்கள்... இல்லை...’’ என ‘அன்பு’டன் கோரிக்கைவைக்க.... பதறிப்போன மறுமலர்ச்சி, தான் ஒட்டிய போஸ்டரை, தன் கரங்களாலேயே கிழித்துப்போட்டது பெரும் துயரம்.

‘எம்.பி இப்ப எந்த அணி?’

‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்கிற ஒற்றை லட்சியத்துடன் செயல்படும் அல்வா மாவட்டத்தின் டெல்லி பிரமுகர், வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்வதைவிடவும், தனது சொந்தத் தொழில்களை விரிவாக்குவதிலேயே கவனமாக இருக்கிறாராம். லோக்கல் அதிகாரிகளை உருட்டியும் மிரட்டியும் குவாரி பிசினஸில் கொடிகட்டிப் பறக்கிறார் மனிதர். ‘அவரை வாக்கு கேட்டுவந்தபோது பார்த்ததோடு சரி; அதற்குப் பிறகு பார்க்கவே முடியவில்லை’ எனப் புலம்புகிறார்கள் தொகுதிவாசிகள். வாக்களித்தவர்களைத்தான் புறக்கணிக்கிறார்... சீட் கொடுத்த கட்சிக்காவது விசுவாசமாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லையாம். கூச்சமே இல்லாமல் தினமும் ஒரு கோஷ்டிக்கு ஆதரவளிக்கும் அவர், சில வேளைகளில் யாருமே இல்லாமல் தனி ஆவர்த்தனமும் செய்கிறாராம். ‘அண்ணன் இப்போ எந்த அணியில் இருக்கிறார்?’ என்பதுதான் கட்சிக்காரர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது நமட்டுச் சிரிப்புடன் கேட்டுக்கொள்ளும் கேள்வியாக இருக்கிறது.

கரை வேட்டி டாட் காம்

அண்ணனின் 101-வது தற்கொலை மிரட்டல்!

வேலூர் காகிதப் பட்டறையைச் சேர்ந்த அந்த இனிஷியல் அ.தி.மு.க பிரமுகர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு மிக நெருக்கமானவர் எனக் கதையளந்து பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவர். பணத்தை இழந்தவர்கள் திருப்பிக் கேட்டுத் தொந்தரவு செய்தால், ‘அவர்கள் என்னை தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியூருக்குத் தப்பி ஓடிவிடுவது அண்ணனின் ஹாபி. இப்படி இதுவரை 100 முறைக்கு மேல் தற்கொலை மிரட்டல் கடிதங்களை எழுதியே ஃபேமஸ் ஆகிவிட்டார் அவர். கடைசி மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து அவரைத் தேடிய வேலூர் போலீஸார், பெங்களூரில் ரூம் எடுத்து, குடியும் கும்மாளமுமாக பதுங்கியிருந்த அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிவந்தனர். ஆனாலும் அவர் திருந்திய பாடில்லையாம். இப்போது மறுபடியும், ‘மந்திரிகிட்ட ஏமாந்துட்டேன். என் கல்யாணநாளிலேயே தூக்கில் தொங்கப் போகிறேன்’ என்று தன் முகநூல் பக்கத்தில் கே.சி. வீரமணியின் பெயரைப் பதிவிட்டுவிட்டு ஓடி ஒளிந்துவிட்டார் மனிதர். இதைப் பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள், ‘இது அண்ணனின் 101-வது மிரட்டல்’ எனப் பாராட்டி மகிழ்கிறார்கள்.

‘அது நான் இல்லீங்கோ...’

அவார்டு மாவட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உடன்பிறப்புகளுக்கு இடையேயான தீபாவளி வேட்டு இன்னும் வெடித்துக்கொண்டேயிருக்கிறது. கோட்டை நகர் அருகேயுள்ள ‘கன்னி’ ஊராட்சி மன்றத் தலைவிக்கும், துணைத் தலைவரின் கணவருக்கும் இடையே தீபாவளி ஸ்பெஷல் கமிஷன்‌ தொகையைப் பங்கு பிரிப்பதில் பெரும் தகராறு. இந்தத் தகராறு, பரபரப்பு ஆடியோவாகவும் வெளியானது. அந்த ஆடியோவில், ‘‘மருந்து குடித்து தற்கொலைதான் செஞ்சுக்கணும்’’ என ஊராட்சி மன்றத் தலைவி விரக்தியடைந்து பேசியும்கூட, கமிஷன் கேட்பதில் தொடர்ந்து கறார் காட்டுகிறார் ஊராட்சி துணைத் தலைவரின் கணவர். இது தொடர்பாக யாராவது துணைத் தலைவரின் கணவரிடம் விளக்கம் கேட்டால், ‘‘அது நான் இல்லீங்கோ... அது நான் இல்லீங்கோ...’’ என பம்முகிறார். ஆனால், ‘‘அதான் எல்லாம் தெரிஞ்சு போச்சேய்யா... முழுசா நனைஞ்ச பிறகு எதுக்கு முக்காடு?’’ என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்...

எம்.பி பதவி காலியாகிப் பல ஆண்டுகளாகியும், டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டைக் காலி செய்யாமலிருந்தார் சசிகலா புஷ்பா. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யாமல், பா.ஜ.க எம்.பி-க்களின் சிபாரிசோடு வீட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அவர். ஆனால், அதிரடியாகப் பொருள்களையெல்லாம் அள்ளி வீதியில் போட்டுவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டார்கள் அதிகாரிகள். அதேநாளில் தூத்துக்குடியில் அவசர பிரஸ் மீட் நடத்திய அவர், “வீட்ல பொருள்களை அப்புறப்படுத்துறதை தி.மு.க ஐடி விங்-தான் வைரலாக்கினாங்க. அரசியல்ல பெண்களை வளரவிடக் கூடாதுங்குறதுல தி.மு.க தெளிவா இருக்கு. பா.ஜ.க-வோட வளர்ச்சியை தி.மு.க-வால தாங்கிக்க முடியலை” எனச் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டே போனார் அம்மணி. ‘இடியே ஆனாலும் தாங்குற அக்காவை... இந்த வீட்டு விஷயம் ரொம்ப பாதிச்சுருச்சுபோலயே?’ என்று உடனிருந்தவர்கள் சோகமாகப் பேசிக்கொண்டார்கள்.

கொடியைத் தலைகீழாக ஏற்றியதற்கு ட்ரீட்!

அண்மையில் நடந்த அ.தி.மு.க பொன்விழா நிறைவு நிகழ்ச்சியை ‘ஜில்’ மாவட்டத்தில் மூன்று கோஷ்டிகளும் தனித்தனியே கொண்டாடியிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பிடித்த ஊரில் அவரால் திறந்துவைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை அருகில் எடப்பாடி அணி சார்பில் கொடியேற்றவிழா நடந்தது. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ‘ஜில்’ மாவட்டச் செயலாளர் கெத்தாகக் கட்சிக்கொடியை ஏற்றியிருக்கிறார். யார் செய்த விஷமமோ தெரியவில்லை... கொடி தலைகீழாகப் பறந்திருக்கிறது. இதைக் கண்ட தொண்டர்கள் கூச்சலிட, சிலர் வீடியோ எடுத்திருக்கிறார்கள். பதறிய மாவட்டம், கொடியை உடனடியாக இறக்கி, நேராக ஏற்றிக்கட்டினாராம். போட்டோ, வீடியோ எடுத்தவர்களைச் சந்தித்து, “விஷயம் அணு அளவு கசிஞ்சாலும் அண்ணனுக்கு ஆபத்துடா தம்பி” என்று கெஞ்சியதுடன் அவர்களுக்கு நல்ல ஹோட்டலில் மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்தாராம். “கொடியைத் தலைகீழா ஏத்துனதுக்காக ட்ரீட் வெச்ச ஒரே நிர்வாகி அண்ணன்தான்” என்று ‘புகழ்’கிறார்கள் ஜில் மாவட்டத்தில்!