அரசியல்
அலசல்
Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமான்

ஆர்.கே.நகர் தி.மு.க எம்.எல்.ஏ எபிநேசர், இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக, தொகுதி கரைவேட்டிகளிடம் கொந்தளிப்பு எழுந்திருக்கிறது.

பொலிட்டிகல் பொடிமாஸ்

“மொழிப்போருக்குத் தலைமை தாங்குவது யார்?”- சீறிய திருமாவளவன், கெத்துகாட்டிய சீமான்!

தமிழக மீனவர்கள்மீது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தித் திணிப்பு, மாநில உரிமை பறிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன், “இந்தித் திணிப்பை எதிர்த்து திராவிட இயக்கங்கள் மட்டும்தான் போராட வேண்டும் என அவசியமில்லை. இனி தமிழகத்தில் மொழிப்போர் நடைபெற்றால், அதை வி.சி.க-தான் தலைமையேற்று நடத்தும்” என்று வெடித்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக தி.மு.க இளைஞர் அணி நடத்திய ஆர்ப்பாட்டம் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சம்பிரதாயமாக நடந்து முடிந்ததே, திருமாவின் இந்த ‘தலைமையேற்பு’ சீற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள் சிறுத்தைகள்.

இன்னொருபுறம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்க சாலையில் எழுச்சியோடு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் சீமான். வெறும் 500 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்று கெடுபிடி காட்டிய காவல்துறையே 6,000 பேர் பங்கேற்றதாக மேலிடத்துக்கு ‘ரிப்போர்ட்’ போடுமளவுக்குக் கூட்டம். ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசனோடு, சீமானுடன் முரண்பட்டு நா.த.க கூட்டங்களைத் தவிர்த்துவந்த இயக்குநர் அமீரும் பங்கேற்றது ஆச்சர்யம்.

பொலிட்டிகல் பொடிமாஸ்

‘‘மோடியே தமிழ்ல பேசுறாரு... நீங்க பேச மாட்டீங்களா?’’

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் அக்டோபர் 28-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய, பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த், ஆங்கிலத்தில் தன்னுடைய பேச்சை தொடங்கினார். அப்போது, தி.மு.க கவுன்சிலர்கள், “பா.ஜ.க உறுப்பினரை தமிழில் பேச சொல்லுங்கள்” என்று கோஷமிட்டார்கள். டென்ஷனான உமா ஆனந்த், “நான் ஒன்றும் இந்தியில் பேசவில்லை. ஆங்கிலத்தில் தானே பேசுகிறேன்” என்றார். இதைக்கேட்டு கொதித்தெழுந்த தி.மு.க-வினர், “பிரதமர் மோடியே ஐ.நா சபையில தமிழ்லதான் பேசுகிறாரு. நீங்க பேச மாட்டீங்களா?” என வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர். கூடவே, ‘தமிழ் வாழ்க... தமிழ் வாழ்க...’ என்ற கோஷத்தையும் எழுப்பினார்கள். இதை எதிர்பார்க்காத உமா ஆனந்த், தமிழில் உரையாற்றிவிட்டு அமர்ந்தார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்

இளைஞரணிக்குப் பதவி... அந்தரத்தில் சீனியர்கள்!

ஆர்.கே.நகர் தி.மு.க எம்.எல்.ஏ எபிநேசர், இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக, தொகுதி கரைவேட்டிகளிடம் கொந்தளிப்பு எழுந்திருக்கிறது. சீனியர்களை அவர் புறந்தள்ளுவதாகக் குமுறும் நிர்வாகிகள், “41 மற்றும் 43-அ வட்டக் கழகங்களுக்கு, இளைஞரணியைச் சேர்ந்தவர்களை வட்டச் செயலாளர்களாக நியமித்திருக்கிறார் எபிநேசர். ஆர்.கே.நகர் மேற்கு இளைஞரணியைச் சேர்ந்த ஒருவருக்கு மாவட்டப் பிரதிநிதி பொறுப்பையும் தூக்கிக் கொடுத்திருக்கிறார். 40-வது வட்டத்தில், இளைஞரணியைச் சேர்ந்த இருவருக்கு துணை வட்டச் செயலாளர், பகுதி பிரதிநிதி பதவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இளைஞர்களுக்குப் பதவி கிடைப்பது வரவேற்கக்கூடியதுதான். அதேநேரம், சீனியர்களைத் திட்டமிட்டு ஒதுக்குவதுதான் பிரச்னையாகியிருக்கிறது. சிம்லா முத்துச்சோழன், மருது கணேஷ் போன்ற சீனியர்களின் பெயரைக்கூட போஸ்டரில் போடுவதற்கு எபிநேசரின் ஆட்கள் தடுக்கிறார்கள்.

பொலிட்டிகல் பொடிமாஸ்

மாவட்டம் - எம்.எல்.ஏ மோதல்... சென்னை வடக்கு கடமுடா!

சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணாவுக்கும், அவரது மாவட்ட எம்.எல்.ஏ-க்களுக்கும் ஒத்துப்போகவில்லை. ராயபுரம் எம்.எல்.ஏ ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி, பெரம்பூர் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் இருவருமே இளைய அருணாவுக்கு எதிராக மா.செ பதவிக்குக் காய்நகர்த்தியவர்கள். அமைச்சர் சேகர் பாபுவின் ஆதரவு இருந்ததால், மீண்டும் மா.செ பதவியைப் பிடித்தார் இளைய அருணா. ஆனால், எம்.எல்.ஏ-க்களைத் தன் கட்டுக்குள் கொண்டுவர இளைய அருணாவால் முடியவில்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள். “ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி, பெரம்பூர் சேகர்... இவங்க இரண்டு பேரும் அவங்க ஆளுங்களைத்தான் பகுதி, வட்டப் பொறுப்புக்கு பெரும்பாலும் போட்டிருக்காங்க. இளைய அருணா ஆளுங்களுக்கு மரியாதையே இல்லை. போஸ்டர்ல இளைய அருணா பெயரைப் போடுறதுலகூட பிரச்னை வருது” என்று புலம்புகிறது வடக்கு மாவட்ட தி.மு.க.

பொலிட்டிகல் பொடிமாஸ்

ஏமாற்றினால் ஐடி விங் பதவியா... கொதிப்பில் ராமநாதபுர தி.மு.க!

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சசிவர்ணம், அரசு அனுமதியில்லாமல் பார் நடத்திய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே இவர்மீது அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் இருந்தபோதும், மீண்டும் அவருக்கு ஐடி விங் துணை அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. “ஒருகாலத்தில் போராடி சிறைக்குச் சென்றவர்களுக்குப் பதவியளித்தார்கள். இப்போது அரசை ஏமாற்றினால் பதவி அளிக்கிறார்கள்” என்று நொந்துகொள்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். சசிவர்ணத்துக்குப் பதவி அளிக்கப்பட்ட விவகாரம் அறிவாலய விசாரணை வளையத்துக்குள்ளும் வந்திருக்கிறது.