பிரீமியம் ஸ்டோரி

‘‘கமலைச் சந்திப்பதே கனவு!’’

‘‘ `சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி தடுக்கிறார்’ என்ற பழமொழி எங்களுக்குத்தான் பொருந்தும்’’ என்று புலம்புகிறார்கள் மக்கள் நீதி மய்யத்தினர். கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கமல்ஹாசனை நெருங்க முடிவதில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக இருந்துவருகிறது. சமீபத்தில் கோவை வந்த கமல்ஹாசன் இதைச் சரிசெய்ய மய்யத்தினரின் வீடுகளுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார். அதையடுத்து, தலைவர் மாறிட்டார் எனக் கட்சியினர் பலரும் அவரைச் சந்திக்கச் சென்றார்கள். ஆனால், இடையில் இருந்த சிலர் கறார் காட்டி திருப்பி அனுப்பிவிட்டார்களாம். முக்கியமாக கமலின் பர்சனல் காவலராக இருக்கும் சுரேஷ், குறிப்பிட்ட சிலரைத் தவிர பிற நிர்வாகிகளிடமும் பொது மக்களிடமும் மிகவும் தரக்குறைவாகப் பேசி கமலை நெருங்க விடுவதில்லையாம். ‘‘எவ்வளவோ கனவுகளோட கட்சிக்கு வந்தோம். கடைசியில கமல்கிட்ட பேசறதையே கனவாக்கிடு வாங்கபோல’’ என்று புலம்பித் தள்ளுகிறார்கள் மய்யத்தினர்.

கரைவேட்டி டாட் காம்

ஆபீஸில் டேரா போடும் அமைச்சரின் கணவர்!

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான சந்திர பிரியங்காவின் கணவர் சண்முகம் எந்நேரமும் அமைச்சர் அறையிலேயே டேரா போட்டிருக்கிறாராம். துறைசார்ந்த மூத்த, முக்கிய அதிகாரிகள் வந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகர்வது இல்லையாம். அரசு அலுவல்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் அவர், அதிகாரிகளுக்குப் பல்வேறு உத்தரவுகளை பகிரங்கமாகப் பிறப்பித்துவருகிறாராம். ‘‘எந்த அரசுப் பதவியிலும் இல்லாத ஒருவர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை கூறலாமா?’’ என்று குமுறுகிறார்கள் புதுச்சேரி அதிகாரிகள்.

‘‘இது அமைச்சருக்கு நல்லதில்லை!’’

‘‘அமைச்சர் சக்கரபாணி மூலமா, கயல்விழி செல்வராஜுக்கு எலெக்‌ஷன்ல சீட் வாங்கிக் கொடுத்தது நான்தான். அதோட நான் இறங்கி வேலை பார்த்ததாலதான், கயல்விழி இன்னைக்கு அமைச்சரா ஆகியிருக்காங்க’’ என்று நகர நிர்வாகி ஒருவர் தொகுதியில் பந்தாவாகப் பேசிவருகிறாராம். கோரிக்கை மனு, சிபாரிசு என எதுவாக இருந்தாலும், அந்த நிர்வாகியிடம் டோக்கன் பாஸ் வாங்கினால்தான் அமைச்சர் கயல்விழியைச் சந்திக்க முடியும் என்கிறார்கள். நகர நிர்வாகி, கரன்ஸி மழையில் குளிக்கிறாராம். இதைப் பார்த்து கடுப்பாகியிருக்கும் உடன்பிறப்புகள், ‘கயல்விழி வெற்றிக்காக தி.மு.க-வினர் கடுமையா உழைச்சாங்க. அப்படியானவர்களைப் பக்கத்துலகூட விடாம, இது மாதிரியான ஆட்களைப் பக்கத்துல வெச்சுக்கறது அவங்களுக்கு நல்லதில்லை’’ என்று குமுறித் தள்ளுகிறார்கள்.

‘‘பவரைக் காட்டுற இடமா இது?’’

‘நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைக் காய்கறிகளுக்கான மொத்த விற்பனை ஏல மையத்தை, அரசு அமைத்துத் தர வேண்டும்’ என்பது மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்நிலையில், ‘எடப்பள்ளியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை அமைக்கப்படும்’ என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருப்பது நீலகிரி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், அந்தச் சந்தையை நிறுவ தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘குன்னூர் டு கோத்தகிரி சாலையில் அமைந்திருக்கும் வனத்துறை அமைச்சரின் சொந்த ஊரான இளித்தொரைக்கு அருகிலுள்ள எடப்பள்ளியைத் தேர்வுசெய்திருப்பதால், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்குக் காய்கறிகளைக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது’ என்பதே சர்ச்சைக்குக் காரணம். ‘‘மாவட்ட விவசாயிகளுக்குப் பொதுவான ஒரு இடத்துல அமைக்காம, அமைச்சர் தன்னோட பவரைச் சொந்த ஊர்ல காட்டுறதுக்காக ஒதுக்குப்புறமான இடத்தைத் தேர்வு பண்ணிட்டாப்ல. இதனால, விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் சிரமம்தான்’’ என்று உடன்பிறப்புகளே புலம்பிவருகிறார்கள்.

கரைவேட்டி டாட் காம்

டெல்டாவில் உச்சமடையும் பனிப்போர்!

டெல்டா மாவட்டத்திலுள்ள, கோட்டையும் கொத்தளமுமான ஊரில் மாவட்டப் பொறுப்பாளருக்கும், மக்கள் பிரதிநிதிக்கும் இடையே உச்சகட்ட பனிப்போர் நிலவுகிறதாம். தூர்வாரும் பணியில் டெண்டர் ஒதுக்குவதில் ஆரம்பித்து ஆவின் பால் பூத், டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஒதுக்குதல், அரசுப் பணிகளுக்கான டெண்டர் விடுதல் என அனைத்திலும் இருவருக்குமிடையே மோதல் நீடிக்கிறது என்கிறார்கள். மாவட்டப் பொறுப்பாளர் சொல்லும் நபர்களுக்கு டெண்டர் பணிகளை ஒதுக்காமல், தன்னிச்சையாகச் செயல்பட்டு தன் ஆதரவாளர்களுக்கே ஒப்பந்தப் பணியை மக்கள் பிரநிநிதி உறுதிசெய்கிறாராம். 100 நாள்கள் ஆட்சி நிறைவடைந்ததையொட்டி மக்கள் பிரதிநிதி கொடுத்த விளம்பரங்களில் முற்றிலுமாக மாவட்டப் பொறுப்பாளரைப் புறக்கணித்துவிட்டாராம். இத்தனைக்கும் இருவரின் அலுவலகங்களும் அருகருகில்தான் அமைந்திருக்கின்றன. இருவரும் அலுவலகத்தில் இருந்தால், மரியாதை நிமித்தமாகக்கூடச் சந்தித்துக்கொள்வதில்லையாம். ‘‘இந்தப் பிரச்னையில் சீக்கிரம் கட்சித் தலைமை தலையிட்டு தீர்த்துவைக்கவில்லையென்றால், இங்கு நகர்மன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடையும்’’ என்று தொண்டர்கள் புலம்பிவருகிறார்கள்.

‘‘வெளியில தலைகாட்டவே முடியலை!’’

‘‘ `தி.மு.க ஆட்சிக்கு வந்தா மணல் கொள்ளை கண்டிப்பா தடுக்கப்படும்’னு ஊர் மக்கள்கிட்ட ஜம்பமா சவால் விட்டுக்கிட்டு இருந்தோம். ஆனா, இப்ப நடக்குற கூத்தைப் பார்த்தா எங்களால வெளியில தலைகாட்டவே முடியலை’’ என்று தவிப்புடன் சொல்கிறார்கள் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தி.மு.க உடன்பிறப்புகள். ‘‘திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார கிராமங்கள்ல... குறிப்பா, கொக்காலடி, பாமினி, வேலூர், மணலி பகுதிகள்ல மணல் கொள்ளை அதிகமாக நடந்துக்கிட்டிருக்கு. மணல் கொள்ளையர்களுக்கு எங்க கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் ஆதரவாக இருக்காங்களோனு தப்புக்கணக்கு போட்டுடாதீங்க. எங்க கட்சியின் மிக முக்கியமான பிரமுகர்தான் இந்த மணல் திருட்டுல ஈடுபட்டுக்கிட்டு இருக்கார். அதுவும் சுதந்திர தினத்தன்னைக்கு ரொம்ப சுதந்திரமா நாலு டிராக்டர்கள்ல திருட்டு மணல் எடுத்துக்கிட்டுப் போனாங்க. உட்கட்சிப்பூசல்ல கட்சி பிரமுகர்கள் சிலரே காவல்துறைக்கு பிரஷர் கொடுத்து, அந்த டிராக்டர்களைப் பறிமுதல் செய்யவெச்சுட்டாங்க. ஆனா, அந்தப் பிரமுகர் மேல வழக்கு பதிவு செய்யலை. அவர் கைகாட்டிய பினாமிகள் மேலதான் கேஸ் போட்டுருக்காங்க’’ என்று பொருமலுடன் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு