Published:Updated:

`வருமானத்துக்கு வழி இல்லை.. செலவுதான் நடக்கிறது!'- ரூ.4 லட்சம் கோடி கடன் குறித்து கனிமொழி

கனிமொழி
கனிமொழி

``மாநிலத்தின் வருவாய்க்கு வழி செய்யாமல், பணத்தைச் செலவு செய்தால் கடன்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். தி.மு.க ஆட்சியை விட தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் கடன் சுமை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது” என கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியமான ஒன்று. தமிழரின் நாகரிகத்தைப் பற்றிய மிக முக்கியமான கண்டுபிடிப்புகள், கண்டெடுப்புகள் ஆதிச்சநல்லூரிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால், அதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் தற்போது வரை தரப்படவில்லை.

கனிமொழி
கனிமொழி

இங்கு நடந்த அகழாய்வின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். பல முறை கோரிக்கை வைத்த பிறகு கடந்த டிசம்பர் மாதம் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்று மத்தியத் தொல்லியல்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். ஆதிச்சநல்லூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் மத்தியரசு தெரிவித்துள்ளது மட்டும் ஆறுதலாக உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது குறித்து தற்போதைய முதல்வருக்குத் தெரியவில்லை.

கனிமொழி
கனிமொழி

அதேபோல, பட்ஜெட்டை எப்படி அமைப்பது என்பது தெரியாமலும், எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் கடனாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக, நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

எந்தவித வருமானத்திற்கும் வழி வகை செய்யாமல், பணத்தைச் செலவு செய்தால் மேலும் மேலும் தமிழகத்தின் கடன்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமல் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனிமொழி
கனிமொழி

சிறுபான்மையினர் நலனுக்காகக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் சில சரத்துகளை நீக்கக்கோரி பிரதமருக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியது தேவையில்லாத ஒன்று. மாநிலங்களவையில், இந்த மசோதாவுக்கு எதிராக அ.தி.மு.க வாக்களித்திருந்தாலே போதும். இந்தச் சட்ட மசோதா நிறைவேறி இருக்காது. அதைவிட்டுவிட்டு தற்போது கடிதம் எழுதியதெல்லாம் கண்துடைப்பிற்காகத்தான்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு