Published:Updated:

புறநானூறு, திருக்குறள்… வரிசையில் பாரதியார் கவிதை! - நாடாளுமன்றத்தில் கலக்கும் தமிழ் நூல்கள்

விஷ்ணுராஜ் சௌ

சமீபகாலமாகப் புறநானூறு, திருக்குறள், பாரதியார் கவிதைகள் என நாடாளுமன்ற விவாத அரங்கில் அதிகமாக மேற்கோள் காட்டப்படுகின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் ( விகடன் )

இந்திய நாடாளுமன்றத்தில் சமீபகாலமாகத் தமிழ் மொழி ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. புறநானூறு, திருக்குறள், பாரதியார் கவிதைகள் எனத் தமிழ்ப் பாடல்களை நாடாளுமன்ற விவாத அரங்கில் மேற்கோள் காட்டிவருகின்றனர், தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

நிர்மலா சீதிராமன்
நிர்மலா சீதிராமன்
விகடன்

சமீபத்தில் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கான முடிவுகளானது கடந்த மே மாதம் 23-ம் தேதி வெளியாகின. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்கள் கடந்த மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பதவியேற்றனர். இந்தப் பதவியேற்பு நிகழ்வின்போது தமிழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் ‘ தமிழ் வாழ்க’ என்ற முழக்கத்தை முன்வைத்தனர்.

மோடி 2.0 அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்ற நிர்மலா சீதாராமன், தன்னுடைய முதல் பட்ஜெட்டை கடந்த 5-ம் தேதி தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட் தாக்கலின்போது பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார நிலைப்பாட்டைக் எடுத்துக்கூறும் விதமாகப் புறநானூற்றிலிருந்து, 'யானை புக்க புலம்போல' என்ற தமிழ்ச் சங்க இலக்கியப் பாடலை மேற்கோள்காட்டினார். அத்துடன் அந்தப் பாடலுக்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கினார். நிர்மலா சீதாராமனின் இந்த உரை, சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
பாரதியார்

இந்த நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்தான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, நிர்மலா சீதாராமனுக்குப் பதிலளிக்கும் விதமாக, ``ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு “ எனும் திருக்குறளை மேற்கோள் காட்டினார். மேலும், ``ஓர் அரசு உற்பத்தி செய்தல், சேமித்தல் , முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் ஆகிய நான்கு விஷயங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்தப் பட்ஜெட்டில், இந்த நான்கில் எந்தவொன்றும் இடம்பெறவில்லை” என்றார்.

இந்நிலையில் , இன்று மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்தான விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமன் குறித்துப் பேசியபோது, ``பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” எனும் பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். மேலும், ``தற்போதைய நிதியமைச்சர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.