Published:Updated:

"முள்ளை முள்ளால் எடுக்கவே ரஜினியை ஆதரிக்கிறேன்!" - தமிழருவி மணியன் திறந்த மடல்

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

ஐம்பது ஆண்டுகளாக பாலை நிலத்தில் பயிரிட்டுப் பார்த்த நான், அனுபவத்தில் அறிந்த உண்மை இது. சித்தாந்தத்தைச் சொல்லி இந்த மக்களிடம் இனி அரசியல் நடத்திப் பயனில்லை. இந்த முயற்சியில் என் இளமை முழுவதையும் இழந்ததுதான் மிச்சம்.

நடிகர் ரஜினிகாந்த், ஒரு வார்த்தை பேசினால்கூட ஆதரவும் எதிர்ப்புமாக ஓராயிரம் விமர்சனங்களும் எதிர்வினைகளும் எழுகின்றன. தமிழக அரசியல் களத்தில், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் 'காந்திய மக்கள் இயக்க'த்தின் நிறுவனத் தலைவருமான தமிழருவி மணியனும் இந்த விமர்சன அலைகளுக்குள் சில சமயங்களில் சிக்கிக்கொள்வதும் உண்டு. அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்விதமாக, தன் கொள்கைப்பிடிப்பை விவரித்து திறந்த மடல் ஒன்றை ஜூனியர் விகடனுக்கு எழுதியுள்ளார் தமிழருவி மணியன்...

"இரண்டு குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக எழுப்பப்படுகின்றன. உரிய விளக்கத்தை வழங்குவது என் சமூகக் கடமை. தவறான ஒரு கூட்டணியை 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் உருவாக்கி, மதவாத கும்பலுடன் சேர்ந்து நின்றது முதல் குற்றம். இப்போது தமிழர் அல்லாத ரஜினிகாந்துடன் இணைந்து நிற்பது இரண்டாவது குற்றம். என்னளவில் இரண்டுமே குற்றமில்லை. சேற்றில் இருந்தாலும் தாமரையின் இதழ்களில் சேறு படிவதில்லை. நான் காந்தியைப் படித்தவன்; காமராஜரைப் பற்றி நிற்பவன். என்னால் வகுப்புவாதியாக இருக்கவே முடியாது.

"முள்ளை முள்ளால் எடுக்கவே ரஜினியை ஆதரிக்கிறேன்!" - தமிழருவி மணியன் திறந்த மடல்

2011-ல் சீமான், 'இரட்டை இலையால் ஈழம் மலரும்' என்று முழங்கினார். ஜெயலலிதாவுக்கு ஈழம் தழைக்க வேண்டும் என்ற தவிப்பு இல்லை என்பது சீமானுக்குத் தெரியாதா? தி.மு.க-வைத் தோற்கடிப்பதற்கும், ஈழம் ரத்தநிலமானபோது சோனியா பக்கம் நின்ற கருணாநிதியைத் தண்டிப்பதற்கும், ஜெயலலிதாவை சீமான் ஆதரித்ததுதான் சரியான அரசியல். தி.மு.க, அ.தி.மு.க இரண்டில் எது நல்ல கட்சி? எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி? இன்று இரண்டு கழகங்களையும் எதிர்த்து சீமான் நடத்துவதுதான் தமிழர்களுக்கான நல்ல அரசியல். ஆனால், இந்த அரசியல் இன்னும் இருபது ஆண்டுகள் சீமானால் தனித்து முன்னெடுக்கப்பட்டாலும் வெற்றி பெறாது.

ஐம்பது ஆண்டுகளாக பாலை நிலத்தில் பயிரிட்டுப் பார்த்த நான், அனுபவத்தில் அறிந்த உண்மை இது. சித்தாந்தத்தைச் சொல்லி இந்த மக்களிடம் இனி அரசியல் நடத்திப் பயனில்லை. இந்த முயற்சியில் என் இளமை முழுவதையும் இழந்ததுதான் மிச்சம். கவர்ச்சி அரசியலே தமிழனைக் கவர்ந்திழுக்கும். கவர்ச்சிகரமான தலைமைக்குப் பின்னால்தான் வாக்காளர்கள் வந்து நிற்பார்கள். திரையுலகைப் பயன்படுத்தியே தி.மு.க வளர்ந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கலையுலகக் கவர்ச்சியே அ.தி.மு.க-வுக்கு உயிர்க்காற்று. ஸ்டாலினுக்கோ, எடப்பாடிக்கோ எந்தக் கவர்ச்சியும் இல்லை. ஏற்கெனவே கவர்ச்சியால் கட்டப்பட்ட மாளிகைகளில் இருவருமே சுகவாசம் செய்கிறார்கள். இந்தக் கட்சிகளுக்கான ஆயுள் எப்போது முடியும் என்பதை, காலம் கணக்கில் வைத்திருக்கிறது. எந்த மாளிகையும் கால நடையில் ஒருநாள் பாழ்மண்டபமாகும். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/3aJnItN

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். ரஜினிகாந்த், கவர்ச்சி அரசியலின் வாரிசுதான். ஆனால், அவர் மக்களின் பொதுச்சொத்தைச் சுரண்டிக் கொழுக்கவோ, தன்னுடைய பகையை வீழ்த்தி அடிக்கவோ அரசியலுக்கு வர விரும்பவில்லை. தேர்தல் களத்தில் அன்பை மட்டுமே அவர் ஆயுதமாக ஏந்தி நிற்பார். தலையில் மகுடம் சுமப்பதற்காக அவர் வரவில்லை. மக்களின் நலனுக்காகவே வருகிறார்.

இரண்டு திராவிடக் கட்சிகளால் அடித்தட்டு மக்களுக்கு சில நன்மைகள் ஏற்பட்டதை மறுக்க முடியாதுதான். ஆனால், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டுச் சீரழிவை இளமைக்காலம் முதல் பார்த்து வருகிறேன். பொதுச்சொத்தை சமூகக்கூச்சமே இல்லாமல் சூறையாடும் மனிதர்களிடம் எவ்வளவு காலம் அரசியலை அடகுவைப்பது? இந்தியா முழுவதும் ஊழல் நாற்றம் எடுப்பதால் தமிழகத்தின் ஊழலையும் சகித்துக்கொள்வது சரியாகுமா? இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிப்பதுதான் எனது ஒரே கொள்கை. அதற்காக முதலில் வைகோவை முன்னெடுத்தேன். எந்த நிலையிலும் நான் விஜயகாந்த் குறித்து வாய் திறந்ததில்லை. வைகோ தடம் மாறிப் போனதால் இன்று ரஜினியை நம்புகிறேன்.

"முள்ளை முள்ளால் எடுக்கவே ரஜினியை ஆதரிக்கிறேன்!" - தமிழருவி மணியன் திறந்த மடல்

வானத்தைப் பார்த்துச் சேற்றை வீசுபவர்களால் வானம் எந்நாளும் அசுத்தப்படாது. என்னைப் பழிப்பவர்களால், நான் ஒழுக்கம் தவறியவன் என்றோ, நேர்மைக்கு மாறானவன் என்றோ, அரசியலில் சம்பாதிப்பவன் என்றோ ஒருவராலும் சொல்ல முடியாது. என்னைப் பழித்தே தீர வேண்டும் என்ற மனநோய்க்கு ஆளானவர்கள், 'நான் பல கட்சி பார்த்தவன்' என்பார்கள். நான் சுயநலத்துக்காக எந்தக் கட்சியிலும் சேர்ந்தவன் அல்ல. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் குறுகிச் சிறுத்துவிட்ட ஜனதாதளத்தில் நெடுங்காலம் இருந்தவன் நான். தமிழக ஜனதா கட்சி, லோக்சக்தி, காந்திய மக்கள் இயக்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை ஏற்றவன் நான்."

- தமிழருவி மணியன் எழுதிய திறந்த மடலை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "நான் கொள்கைக்காரன்!" - தமிழருவி மணியன் https://www.vikatan.com/government-and-politics/politics/tamilaruvi-manian-open-letter-about-his-policy

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு