Published:Updated:

`கட்சி... ஆட்சி... ரஜினியே என்னிடம் சொன்னார்!'- தமிழருவி மணியன் பகிரும் சீக்ரெட்ஸ்

ரஜினியுடன்  தமிழருவி மணியன்
ரஜினியுடன் தமிழருவி மணியன்

”இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆர் இருவரிடமும் நான் கண்ட சுறு சுறுப்பை தற்போது ரஜினிகாந்த் அவர்களிடம் பார்க்கிறேன்” என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்.

'ரௌத்திரம்' இலக்கிய வட்டத்தின் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கில் கலந்துகொண்ட காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், 'வழிப்போக்கனின் வாழ்க்கை' என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, ’ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன... ஏமாற்றம் என்ன?’ என்ற தலைப்பில் பேசிய அவர், ”இன்றைய தமிழக அரசியல் சூழல் அழுக்கேறிக் கிடக்கிறது. அதை அகற்றுவதற்குப் பதிலாக, அழுக்குப் படிந்த மனிதர்கள் அரசியலை ஆக்கிரமித்துள்ளதால், அந்த அழுக்கு கூடியிருக்கிறதே தவிர அகலவில்லை.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

அந்த அழுக்கை அகற்றுவதற்கு ஒரு மனிதன் வேண்டாமா... தி.மு.க-வும் அ.தி.மு.க-வும், மீண்டும் மீண்டும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்ததால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. அரசியலில் நல்ல மனிதர்களைக் காண முடியவில்லை. அரசியல் வாதிகள் வேறு, கட்சிக்காரர்கள் என்பது வேறு. இன்று உங்கள் முன்னால் உளறிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் கட்சிக்காரர்களே தவிர, அரசியல்வாதிகள் அல்ல.

அரசியல் என்பதை நீங்கள் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து இன்று வரை விரிவாகப் பார்க்க வேண்டும். ரஜினிகாந்த் அவர்களைப் பற்றி நான் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வேன். ஆனால், அதற்கான களத்தை முதலில் நீங்கள் கண்டெடுக்க வேண்டும். காந்தியடிகள் தலைமையேற்று அரசியல் வேள்வியை நடத்திய நேரத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அவரின் பின்னால் கண்மூடிக்கொண்டு நின்றது. நாடு விடுதலை பெற வேண்டும் என்ற கனவுடன் அவரின் பின்னால் அனைவரும் சென்றனர். காந்தியார் காலத்தில் ஒருவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால், இருப்பதை இழப்பவராக அவர் இருக்க வேண்டும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தன்னிடம் இருப்பதை இழப்பதற்குத் தயாராக இருந்தவர்கள் தான் காந்தியடிகள் காலத்தில் அரசியலுக்கு வந்தார்கள். அதுதான் உன்னத நிலை. அந்த நிலைக்கு மீண்டும் நாம் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான், ஒரு ரஜினிகாந்த் பின்னால் தமிழகம் வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எதையும் எதிர்பாராமல், எதைப் போட்டால் எதைப் பெறலாம் என்ற கணக்கு இல்லாமல், உனக்குப் பின்னால் நான் வருகிறேன், இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தலைவா நீ வருகிறாயா ? உன்னோடு கைகோத்து நாங்களும் வருகிறோம் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

பணம் சம்பாதிக்கும் கூடாரமாக இன்றைய அரசியல் மாறிவிட்டது. இன்றைக்கும் ரஜினிகாந்திற்கு ரூ.300 கோடி ரூபாய்க்கு பட விநியோகம் செய்யும் சூழல் உள்ளது. ஆனால், அவற்றை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, அரசியலை தூய்மைப்படுத்த வருகிறார் ரஜினிகாந்த். அ.தி.மு.க-வில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் வித்தியாசமான மனிதர்கள். இவர்கள், தி.மு.க-வினருக்கே எப்படி கொள்ளையடிக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டனர். சிறுபான்மை மக்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தின்மூலம் ஒரு இஸ்லாமியரையோ அல்லது கிறிஸ்தவரையோ வெளியேற்ற முடியும் என நிரூபிக்கத் தயாரா?

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

தமிழக அரசை தீர்மானம் நிறைவேற்ற நெருக்கடி கொடுக்கிறார் ஸ்டாலின். குடியுரிமைச் சட்டம் குறித்துப் பேசமுடியாது என மோடி அறிவித்துவிட்டார். மோடிக்கு ஆதரவாகப் பேச நான் வரவில்லை. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளால் மக்கள் முக்காடு போட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளனர். ரஜினி சொன்னதை நான் சொல்கிறேன். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள யாருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் பாதிப்பு இல்லை. அப்படி பாதிப்பு ஏற்பட்டால், ரஜினிகாந்த் முதல் ஆளாகக் குரல்கொடுப்பார். அவருடன் நானும் இருப்பேன். ரஜினியின் எதிர்பார்ப்பு, தொண்டர்கள் இன்னும் வீரியமாகச் செயல்படவில்லை என்பதுதான்.

தமிழகத்தில் 35% வாக்குகள் தான் நமக்குத் தேவை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக தமிழகம் அவர் பின்னால் வரும். ஒருநாளும் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என நான் சொல்லவே இல்லை. ஊடகங்கள் திட்டமிட்டே பொய் பரப்புகின்றன. எந்த நிலையிலும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ரஜினிகாந்த்திடம் நான் ஓர் உறுதிமொழி கேட்டதுடன், சிஸ்டம் சரியில்லை என நீங்கள் சொன்னதால்தான் நான் உங்களிடம் வந்தேன் என்றும் கூறினேன். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், ரஜினிகாந்த் பக்கம் வரவேண்டும். 50 ஆண்டுகால அழுக்கை உதறிவிட்டு, ரஜினிகாந்த்தை கோட்டையில் அமரவைக்க வேண்டும்.

ரஜினிகாந்த் தொண்டர்கள்
ரஜினிகாந்த் தொண்டர்கள்

கட்சி, ஆட்சி என்பதை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும், ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருக்க வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார் ரஜினிகாந்த். இரண்டு முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா உட்கார்ந்த இருக்கையில் அமரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக ஜெயலலிதா இருக்கையில் அமர்ந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி ’அம்மா’ அரசு எனச் சொல்வதே இல்லை. எடப்பாடியே அம்மாவாக மாறிவிட்டார்.

ரஜினிகாந்த் அவர்களே... என்னை உட்பட யாரையும் முதல்வராக்க நினைக்காதீர்கள். இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆரிடம் நான் கண்ட சுறுசுறுப்பை தற்போது ரஜினிகாந்த்திடம் பார்க்கிறேன். நான் முதல்வராக மாட்டேன் என ரஜினிகாந்த் சொன்னதை மாவட்டச் செயலாளர் ஏற்கவில்லை. இதைத்தான் ஏமாற்றம் என்று கூறினார் ரஜினிகாந்த்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு