Election bannerElection banner
Published:Updated:

`எங்க உடம்புல காங்கிரஸ் ரத்தம்... உன் உடம்புல பி.ஜே.பி ரத்தமானு கேட்டாங்க!' - தமிழிசை கணவர் ஷேரிங்ஸ்

குடும்பத்தினருடன் தமிழிசை
குடும்பத்தினருடன் தமிழிசை

மருத்துவராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தபோது தமிழிசைக்கு ஊக்கம் கொடுத்த அவரின் கணவர், மனைவிக்காக ஆளுநர் மாளிகையில் தானும் குடியேறிவிட்டார். மனைவியின் வெற்றி முதல் தமிழிசையின் பர்சனல் பக்கங்கள் வரை பலவற்றையும் பகிர்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான அரசியல்வாதியாக வலம்வந்த டாக்டர் தமிழிசை, தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் (பொறுப்பு) செயல்படுகிறார். இவரின் கணவர் செளந்தரராஜனும் பிரபலமான மருத்துவர்தான். கருணாநிதி முதல் ரஜினிகாந்த் வரை வி.ஐ.பி-க்கள் பலருக்கும் சிகிச்சையளித்திருக்கிறார். 1,200-க்கும் மேற்பட்டோருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கும் செளந்தரராஜன், தமிழகத்தில் சிறுநீரக சிறப்பு மருத்துவர்களில் முன்னணியில் இருப்பவர்.

கணவருடன் தமிழிசை
கணவருடன் தமிழிசை

மருத்துவராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தபோது தமிழிசைக்கு ஊக்கம் கொடுத்தவர், மனைவிக்காக ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தானும் குடியேறிவிட்டார். மனைவியின் வெற்றி முதல் தமிழிசையின் பர்சனல் பக்கங்கள் வரை பலவற்றையும் பகிர்கிறார்.

``எங்க கல்யாணத்தை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும், எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதியும் இணைஞ்சு நடத்தி வெச்சாங்க. அது நியூஸ் பேப்பர்கள்ல தலைப்புச் செய்தியா வெளியாகி, எங்களுக்கு மறக்க முடியாத தருணமாச்சு. எங்களுக்குக் கல்யாணம் ஆனபிறகு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில உதவிப் பேராசிரியரா எனக்கு வேலை கிடைச்சது. அப்போ சென்னையில எம்.பி.பி.எஸ் படிச்சுகிட்டு இருந்த தமிழிசை, அங்கிருந்து மாறுதலாகி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில சேர்ந்து படிப்பை முடிச்சாங்க. அப்போதெல்லாம் அரசு மருத்துவமனைகள்ல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் குறைவாதான் இருக்கும்.

தமிழிசையின் திருமண நிகழ்வு
தமிழிசையின் திருமண நிகழ்வு

தமிழிசை பயிற்சி மருத்துவரா இருந்த நேரம். ஒருநாள் கவலையுடன் வீட்டுக்கு வந்தார். காரணம் கேட்டேன். `நான் சிகிச்சை கொடுத்துட்டு இருந்த ஒரு கர்ப்பிணிக்குக் கருவிலேயே குழந்தை இறந்துடுச்சு. மூணு நாள்களுக்குப் பிறகுதான் அதைக் கண்டறிய முடிஞ்சது. ஏசி வசதி இல்லாததால, ஸ்கேன் எடுக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படாமல் இருக்கு. அந்த இயந்திரம் சரியா செயல்பட்டிருந்தா, அந்தப் பெண்ணுக்குச் சிறப்பான சிகிச்சை கொடுத்து குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம்’னு சொல்லிக் கலங்கினாங்க. இந்த விஷயத்தை உடனே தன்னோட அப்பாவும், அப்போதைய தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரா இருந்தவருமான குமரி அனந்தன்கிட்ட ஏக்கத்துடன் சொன்னார்.

அடுத்த நாளே இந்த விவகாரம் குறித்து என்னுடைய மாமனார், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்குத் தெரியப்படுத்தினார். `உடனே ஆவன செய்யவும்’னு அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கலைஞர் உத்தரவிட்டார். அன்று மதியமே ஏ.சி வசதியுடன், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரம் மீண்டும் செயல்படத் தொடங்குச்சு. தமிழிசைக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. இப்படி மக்கள் நலனில் அப்போதே என் மனைவி அக்கறையுடன் இருந்தார்.

கணவர், அப்பாவுடன் தமிழிசை
கணவர், அப்பாவுடன் தமிழிசை

மருத்துவரா வேலை செஞ்சப்போ, பல்வேறு சம்பவங்களின் மூலம் உரிய அதிகாரம் நம்ம கையில இருந்தா, மக்களுக்கான சேவைகளைச் சிறப்பா செய்யலாம்னு தமிழிசை நினைச்சாங்க. வாஜ்பாய் மீதான மதிப்பு, காங்கிரஸ் கட்சி மீதான கோபம் உள்ளிட்ட காரணத்தால், தமிழிசை பி.ஜே.பி-யில் சேர்ந்தாங்க. பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த என் மனைவியின் அரசியல் நிலைப்பாட்டை, அவரின் குடும்பத்தினர் ஏற்கல. ஆறு மாதங்கள் மகளுடன் பேசாத மாமனார், அதன் பிறகும் நீண்டகாலத்துக்குப் பட்டும் படாமலும்தான் மகளுடன் பழகினார். `நம்ம உடம்புல காங்கிரஸ் ரத்தம் ஓடுது. பி.ஜே.பி-யில் சேர்ந்தது நியாயமா?’ன்னு கடைசி வரைக்கும் தமிழிசை மீது கோபமாவே இருந்தார் தமிழிசையின் சித்தப்பா `வசந்த் & கோ’ வசந்தகுமார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரா சோனியா காந்தி பொறுப்பேற்றதும், ஜி.கே.மூப்பனார் உட்பட பலரையும் மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார் என் மாமனார் குமரி அனந்தன். அப்போது எனக்கு போன் செய்த பீட்டர் அல்போன்ஸ், `சொந்த மகளை பி.ஜே.பி-யில் சேர்த்துவிட்டுட்டு, எங்களை காங்கிரஸில் இணையச் சொல்றாரு உங்க மாமனார்’னு கிண்டலாகச் சொன்னார். இந்தச் செய்தி அடுத்த நாள் செய்தித்தாள்கள்லயும் வெளியாச்சு. பீட்டருக்கு போன் செய்த தமிழிசை, `அண்ணே, என்னை ஸ்கூல்ல சேர்க்கக்கூட அப்பா உடன் வந்ததில்ல. என்னைக் கட்சியில் சேர்க்க அவர் எப்படி வருவார்? இது முழுக்கவே என் முடிவு. அப்பாவை வம்புக்கு இழுக்க வேண்டாம்’னு ஆதங்கத்துடன் சொன்னார்.

கணவருடன் தமிழிசை
கணவருடன் தமிழிசை
லட்சுமி மீதான அந்த விமர்சனம், அர்ச்சனாவின் சுதந்திரம்... பிரபலங்களின் கணவர்கள் பகிரும் சீக்ரெட்ஸ்!

அப்போ பி.ஜே.பி கட்சிக்கான செல்வாக்கு குறைவாகவே இருந்துச்சு. அதைச் சுட்டிக்காட்டியும், `தமிழிசையை காங்கிரஸில் சேரச் சொல்லுங்க. பெரிய பொறுப்பு வாங்கிக் கொடுக்கிறோம்’னு பலரும் சொன்னாங்க. எதையும் ஏற்காத தமிழிசை, தன்னோட கொள்கையில் உறுதியா இருந்தார். பா.ஜ.க-வுல மாவட்ட அளவவிலான மருத்துவ அணி பொறுப்புலதான் தமிழிசை இருந்தார். மிகுந்த ஈடுபாட்டுடன் கட்சிப் பொறுப்பிலும் வேலை செஞ்சார். மக்கள் பணிக்காக அரசியல்ல இருந்தாலும், நமக்கான வாழ்வாதாரத்துக்கு மருத்துவர் பணிதான் கைகொடுக்கும்னு உறுதியா இருந்தார் தமிழிசை. அதுக்காகவே, சிறப்பு மருத்துவம் முடிச்சு, குழந்தைகளுக்கான ஸ்கேன் ஸ்பெஷலிஸ்டாகவும் சிறந்து விளங்கினாங்க. போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில பல வருஷம் வேலை செய்த தமிழிசை, முழுநேர அரசியல் பணிக்காக உதவிப் பேராசிரியர் வேலையிலிருந்து விலகினாங்க” என்பவர், தமிழிசை எதிர்கொண்ட உடல் கேலி முதல் ஆளுநர் பொறுப்பு அதிகாரங்கள் வரையிலான விஷயங்களையும் பகிர்கிறார்.

``முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன்பு குடும்பத்தினர், அப்பாவின் கட்சியினர் பேசிய பேச்சுகள் தமிழிசையை ரொம்பவே பாதிச்சது. முழுநேர அரசியலுக்கு வந்த பிறகு, நிறைய கேலி, கிண்டல், மீம்ஸ் போன்றவற்றை எதிர்கொண்டாங்க. அதனால சில நேரங்கள்ல வருத்தப்படுவாங்க. ஆனா, சின்ன வயசுல இருந்தே அரசியல் சூழல்களை நல்லா புரிஞ்சு பக்குவத்துடன் வளர்ந்ததால, எல்லா விமர்சனங்களையும் தைரியமா எதிர்கொண்டு தனக்கான வளர்ச்சியையும் உறுதிப்படுத்திகிட்டாங்க. தன்னோட முடிவிலும் கொள்கையிலும் யாருக்காகவும் சமரசம் செஞ்சுக்காம, வலி மிகுந்த அந்தக் காலகட்டத்தையும் பொறுமையுடன் கடந்துவந்தாங்க.

கணவருடன் தமிழிசை
கணவருடன் தமிழிசை

அரசியல்ல பெரிசா எனக்கு அனுபவமும் ஈடுபாடும் இருந்ததில்ல. அதனால, இப்ப வரை மனைவியின் அரசியல் செயல்பாடுகள்ல பெரிசா தலையிட மாட்டேன். ஊழல் இல்லாத நேர்மையான அரசியல் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றணும்னு தமிழிசைக்குத் தீராத ஆர்வம் உண்டு. அதுக்காக மக்கள் பிரதிநிதியா நாடாளுமன்றம், சட்டமன்றங்கள்ல குரல் கொடுக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அது இப்ப வரை நிறைவேறவேயில்ல. இதுக்கிடையே, `எங்க கட்சியில் சேர்ந்தால் முக்கிய பொறுப்பு கொடுக்கிறோம்’னு முக்கியமான கட்சிகள்ல தமிழிசைக்கு அழைப்புகள் வந்துச்சு. அதையெல்லாம் என் மனைவி ஏற்கவே இல்ல.

`போர்க் களத்துல வெற்றி, தோல்வி சகஜம்தான். எனவே, இறுதி வரை பி.ஜே.பி-யில்தான் இருப்பேன்’னு உறுதியா இருந்தாங்க. என் மனைவியின் உழைப்புக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில, ஆளுநர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தது பா.ஜ.க. என் மனைவியின் விருப்பப்படி, அவருடன் ஹைதராபாத்துல இருக்கும் ஆளுநர் மாளிகையில வசிக்கிறேன். அந்த நகரத்திலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில சிறப்பு மருத்துவரா வேலை செய்யுறேன். தவிர, சென்னையிலுள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகள்ல வேலை செய்றதோடு, ஆன்லைன் வாயிலாகவும் மருத்துவ ஆலோசனைகள் கொடுப்பதுடன், கெளரவ பேராசிரியராகவும் வேலை செய்யுறேன்.

கணவருடன் தமிழிசை
கணவருடன் தமிழிசை

ஓர் ஆளுநரருக்கு வழங்கப்படும் எல்லா மதிப்பும், அவருடைய கணவர்/மனைவிக்கும் கிடைக்கும். அந்த வகையில, தமிழிசையுடன் சில நிகழ்ச்சிகள்ல கலந்துக்கும்போது எனக்கும் உரிய மதிப்பும் முக்கியத்துவமும் கிடைக்கும். தமிழிசையுடன் போகும்போதெல்லாம் என்னையும் எந்த இடத்துலயும் பாதுகாப்புச் சோதனை செய்ய மாட்டாங்க. விமான நிலையங்கள்ல விமானத்துக்குப் பக்கத்துலயே எங்க கார் வரும். ஆளுநர் மாளிகையில ராஜ மரியாதை எனக்கும் கிடைக்குது. இதெல்லாம் புது அனுபவம்னாலும், ரொம்ப நல்லாவே இருக்கு (சிரிக்கிறார்).

நான் வெளியே தனியா போகும்போது, எனக்கும் அதிகப்படியான பாதுகாப்பு கிடைக்கும். ஆனா, அதையெல்லாம் வேண்டாம்னு தவிர்த்துடுவேன். இருப்பினும் சில பாதுகாப்பு அதிகாரிகள் மட்டும் என்னுடன் வருவாங்க. அதேநேரம், சென்னை வரும்போதெல்லாம் எந்தப் பாதுகாப்பும் வேண்டாம்னு சாமான்ய நபரா தனியாவே வந்துட்டுப் போவேன். தினமும் வாக்கிங் போறது முதல் சமூக நிகழ்வுகளை விவாதிக்கிறது வரை முன்பைவிட இப்பதான் இருவரும் ஒண்ணா அதிக நேரம் செலவிடுறோம்" என்று முடித்தார் செளந்தரராஜன்.

தமிழிசை குறித்து செளந்தரராஜன் பகிரும் கூடுதல் விஷயங்களை, இந்த வாரம் வெளியான அவள் விகடன் இதழில் படிக்கலாம்.

சுடர்விடும் மனைவிகள்... தூண்டுகோலாய் கணவர்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு