Published:Updated:

`எரவாடா சிறையிலிருந்து ஆந்திரா வந்த மாமரம்!’ - சிறைவாசிகளுக்கு காந்தி குறித்த கதை சொன்ன தமிழிசை

``அரவிந்தர், மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு, சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரம்பிள்ளை போன்றவர்கள்கூட சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார்கள். சிறைவாசிகளுக்கு காந்தியைவிட மிகப்பெரிய உதாரணம் இருக்க முடியாது.” - தமிழிசை சௌந்தரராஜன்

மாதிரி சிறைச்சாலைத் திட்டத்தின்கீழ் ஸ்ரீ அரவிந்தர் குழுமத்துடன் இணைந்து புதுச்சேரி சிறைத்துறை ஏற்பாடு செய்திருக்கும் `ஜெயில் மஹோத்சவ்’ நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று முன்தினம் கலந்துகொண்டார். அந்த விழாவில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள், அவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தமிழிசை, ``மத்திய சிறைச்சாலையில் நடக்கும் இந்தச் சிறை பெருந்திருவிழாவுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிலர் சூழ்நிலை காரணமாகக் கைதியாகிறார்கள்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

சிலர் சூழ்நிலைக் கைதிகளாகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். கண நேரத்தில் கட்டுப்படுத்த முடியாத கோபத்தால் தவறிழைத்துவிடுகிறார்கள். யாரும் குற்றவாளியாகப் பிறப்பதில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் குற்றம் செய்ய அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் சார்ந்த சூழலும் சமூகமும்கூட பல நேரங்களில் காரணமாகிவிடுகின்றன. பல தேசிய தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள். அரவிந்தர், மகாத்மா, சரோஜினி நாயுடு, சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரம்பிள்ளை போன்றவர்கள்கூட சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார்கள்.

ஆக, இந்தச் சிறை வாசம் வாழ்க்கையில் நம்மை புதுப்பித்துக்கொள்ள உதவி செய்ய வேண்டும். சிறைவாசிகளுக்கு காந்தியைவிட மிகப்பெரிய உதாரணம் இருக்க முடியாது. காந்தியடிகள், அவர் சிறையில் இருந்த காலத்தில் ஒரு நிமிடத்தைக்கூட வீணடித்தது கிடையாது. அதேபோல நீங்களும் நேரத்தை வீணடிக்கக் கூடாது. ஹைதராபாத்தில் மதிப்புக்குரிய சரோஜினி நாயுடு அவர்களின் வீட்டில் மிகச் சுவையான மாம்பழத்தை தரும் மரம் ஒன்று இருக்கிறது. அந்த மாமரம் எரவாடா சிறையிலிருந்து வந்தது. காந்தி அவர்கள் எரவாடா சிறையில் இருக்கும்போது, ஒரு மாங்கனியைச் சாப்பிட்டுவிட்டு அந்தக் கொட்டையை அவர் கீழே போடுகிறார்.

புதுச்சேரி சிறை
புதுச்சேரி சிறை

அது மரமாக வளர்கிறது. அவர் விடுதலை ஆகும்போது ஞாபகமாக அந்தச் சிறு கன்றை எடுத்துவருகிறார். அவர் சிறையிலிருந்து வெளிவந்து முதலில் சென்றது தெலங்கானா மாநிலம், அப்போது ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் அது. அங்கே வரும்போது சரோஜினி நாயுடுவின் இல்லம் இருக்கும் வளாகத்தில் அதை நடுகிறார், இன்றும் அந்த மரம் நல்ல கனிகளைக் கொடுப்பதோடு, காந்தி அவர்கள் எரவாடா சிறையிலிருந்த அனுபவங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாங்கனியைச் சாப்பிட்டுவிட்டு அந்தக் கொட்டையைத் தூக்கி எறிந்திருக்கலாம். ஆனால் அதைச் செடியாக மாற்றி, அதை நட்டதால் அது வளர்ந்து இன்று சரித்திரத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் காந்தி அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கக் கூடாது. குடும்பத்துக்குப் பயனுள்ளவர்களாக உங்கள் நேரத்தை மிகச் சிறப்பாக செலவழித்துவருகிறீர்கள். சிறை அனுபவம் என்பது நமது வாழ்க்கையில் புது அனுபவத்தைத் தருவதாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே முதன்முறையாக சிறைத் திருவிழாவை நடத்துகிறார்கள். நவீனமயமான பார்வையாளர்கள் அறை கட்டப்பட்டிருக்கிறது.

`` யாரும் தூங்கிவிடாமல் கல்வி கற்க வேண்டும்!" திறந்தவெளி வகுப்பறை விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை!

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. சிறைக் கைதிகள் குடும்ப உறுப்பினர்களோடு பேசுவதற்கு தொலைபேசி வசதி, படிப்பதற்கு நூலகம் ஆகிய வசதிகளைச் செய்திருக்கிறார்கள். அதற்காகச் சிறைத்துறையைப் பாராட்டுகிறேன். பெண்களுக்கென்று தனிச் சிறைச்சாலை வளாகம் அமைத்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிறைச்சாலை என்பது மனதுக்கு கனமான ஒன்று. அதையும் நல்ல அனுபவமாக மாற்றி, நீங்கள் விடுதலை அடைந்த பிறகு, நம் கையிலும் ஒரு தொழில் இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்தச் சிறைச்சாலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு