Published:Updated:

`வெளிமாநிலம் அல்ல.. வெளிநாட்டு மாணவர்களுடனும் போட்டியிடலாம்!’ - புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழிசை

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

``புதிய கல்விக் கல்விக் கொள்கையில் அரசியலைப் புகுத்தாதீர்கள்" என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நெல்லை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பா.ஜ.க., இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் 50 நாள்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து பட்டியலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி, இந்தியாவில் இல்லாமல் தற்போது லண்டனில் ஒளிந்துகொண்டிருக்கிறார்.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

இதற்காக ஸ்டாலின்தான் தலைகுனிய வேண்டும். நாடாளுமன்றத்தில் 37 பேரை கொண்ட தி.மு.க கட்சியில் கனிமொழி, ராசா, டி.ஆர் பாலு, தயாநிதிமாறனைத் தவிர மற்ற யாருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதான் தி.மு.க-வுக்குள் இருக்கும் சர்வாதிகாரம். தமிழை, தி.மு.க மட்டும்தான் காப்பாற்றி வருவது போன்ற ஒரு தோற்றத்தை தி.மு.க-வினர் உருவாக்கி வருகின்றனர். தமிழ் என்பது தொன்மையான மொழி. மத்திய அரசு எந்த விதத்திலும் இந்தியை தமிழகத்தில் திணிக்காது. அப்படி ஒரு நிலைமை வருகிறது என்றால், தமிழக பா.ஜ.க அதை தடுப்பதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும்.

உலக அளவில் கல்வியில் இருக்கும் சவால்களைச் சந்திப்பதற்கு மாணவர்களுக்குத் தரமான கல்விக் கொள்கை தேவை. அதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு அமல்படுத்துவதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டியது கல்வியாளர்களும் மாணவர்களும்தான். அதைவிடுத்து, `அரசியல் கட்சியினர் இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்தப் புதிய கல்விக் கொள்கையே தவறு' எனக் கூறுவது ஏற்க முடியாதது. புதிய கல்விக் கொள்கையில் அரசியலைப் புகுத்தக் கூடாது. இதுகுறித்து தவறான கருத்துகளைக் கூறுவதால், புதிய கல்விக் கொள்கை மீது தவறான கருத்தை மக்களிடம் பதிய வைத்துவிடும். இந்தக் கல்விக்கொள்கையால் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுடன் நமது மாணவர்கள் போட்டி போடும் நிலை ஏற்படும்.

தமிழிசை
தமிழிசை

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் மூலமாக மாநில அரசின் உரிமைகளை எந்தவிதத்திலும் மத்திய அரசு பறிக்க முயலவில்லை. இங்குள்ள தி.மு.க-வுக்கு, கனிமொழிக்கு தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வும் வந்துவிடக் கூடாது. அதனாலேயே அவற்றை எதிர்க்கின்றனர். மோட்டார் வாகனச் சட்டம் உண்மையில் மக்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டம். கடவுள் மறுப்புக் கொள்கை உடைய தி.மு.க, தி.க கட்சியினரும் அத்திவரதரை சாரை சாரையாக சென்று சந்திப்பது மகிழ்ச்சிதான். ஸ்டாலினே வந்து அத்திவரதரை தரிசித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி மலர உள்ளதுபோல, தமிழகத்திலும் நிச்சயம் பா.ஜ.க-வின் ஆட்சி அமையும்" என்றார்.