Published:Updated:

``பாஜக-வைக் கொச்சைப்படுத்தினால், அவர்களின் பிசினஸில் கைவைப்போம்" - உண்ணாவிரத மேடையில் அண்ணாமலை

மாட்டுவண்டியில் வந்த அண்ணாமலை
மாட்டுவண்டியில் வந்த அண்ணாமலை ( ம.அரவிந்த் )

``தமிழக முதல்வர் சாராயத்துறை அமைச்சரைத் தன் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார். விவசாயத்துறை அமைச்சரை தூரமாகவே வைத்திருக்கிறார். இதுவே தமிழக அரசின் செயல்பாடுகளை உணர்த்துவதற்கு ஒரு சான்று." - அண்ணாமலை

மேக்கேதாட்டுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதைக் கைவிட வலியுறுத்தியும் தமிழக பி.ஜே.பி சார்பில் தஞ்சாவூரில் பனகல் கட்டடம் எதிரே இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பாஜக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்
பாஜக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

போலீஸார் அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறிப் போராட்டத்தை நடத்தியதால் தஞ்சாவூர் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதற்காக பெரிய கோயில் அருகேயுள்ள சோழன் சிலையிலிருந்து உண்ணாவிரதம் நடைபெறும் இடம்வரை மாட்டுவண்டிப் பேரணி நடைபெற்றது. அண்ணாமலை மாட்டுவண்டியில் வர அவரைத் தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் வந்தனர். தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இதைத் தொடங்கிவைத்தார். இதில் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

`கதை, திரைக்கதை, வசனம்... ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா!’ - சாடும் அண்ணாமலை
பா.ஜ.க  சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்
பா.ஜ.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

இதற்கு ஏற்பாடு செய்த மாநிலத் துணைத் தலைவரான கருப்பு.முருகானந்தம் ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் போராட்டம் தொடங்கியதுமே பெருங்கூட்டம் கூடத் தொடங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த அண்ணாமலை, கருப்பு.முருகானந்தத்தை மேடையிலேயே பாராட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போராட்டத்துக்கு வந்தவர்களை ஒரு சில இடங்களில் போலீஸார் தடுத்து நிறுத்தியதாகத் தகவல் வந்ததையடுத்து மேடையில் இருந்த நிர்வாகிகள் கொந்தளித்ததுடன், `அறவழியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம் தயவு செய்து போலீஸார் யாரையும் தடுத்து நிறுத்தாதீர்கள்’ எனக் கோரிக்கைவைத்தனர். மேடையில் பேசிய பலரும் தி.மு.க-வை விமர்சனம் செய்தனர்.

போராட்டத்தில் பேசும் அண்ணாமலை
போராட்டத்தில் பேசும் அண்ணாமலை

பின்னர் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். ``தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்காக மாதந்தோறும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தும் அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடைய திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக ஓர் ஆய்வுக் கூட்டத்தையாவது நடத்தியிருக்கிறார்களா? தமிழக முதல்வர் சாராயத்துறை அமைச்சரைத் தன் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார் ஆனால், விவசாயத்துறை அமைச்சரை தூரமாகவே வைத்திருக்கிறார். இதுவே தமிழக அரசின் செயல்பாடுகளை உணர்த்துவதற்கு ஒரு சான்று.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, எங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், `பா.ஜ.க-வுக்கு வயிற்றில் பிரச்னை இருக்கிறது' என கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுகிறார். அவர் கட்சியைவிட்டு, வீட்டுக்குச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதைப் பார்த்து கைதட்டி ரசித்திருக்கிறோம். தற்போது அரசியல் நடிப்புக்கு வந்துவிட்டார்.

மய்யம் என்று பெயர் வைத்துக்கொண்டு மய்யம் இல்லாமல் பேசிவருகிறார். வெயிலில் நின்று இது போன்ற ஒரு போராட்டத்தைக்கூட அவரால் நடத்த முடியாது. கர்நாடகாவில் உள்ள உதயா டி.வி சேனல் கலாநிதிமாறனுடையது. அவரின் தம்பி தயாநிதிமாறன் பணத்தை வசூல் செய்துகொண்டிருக்கிறார். அவர்களுக்கு மனசாட்சியே இல்லாததால், மக்களிடம் சாட்சி சொல்ல முடியாமல் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு உண்மையாக இருக்கும் பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால், அவர்களது அனைத்து விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும். கர்நாடகாவில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அனைத்து அமைப்பினரும் சேர்ந்துகொண்டு, `நாம் ஏன் கடிதம் எழுத வேண்டும்... அனுமதி பெற வேண்டும்... அதைச் செய்யாமலேயே மேகக்கேதாட்டுவில் அணை கட்டுவோம்’ என்று கூறிவருகிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டம்

மேகேதாட்டுவில் அணை கட்டினால் கண்டிப்பாக தமிழக பா.ஜ.க எதிர்க்கும். அங்கு அணை கட்டக் கூடாது எனச் சட்டம் தெளிவாக இருப்பதால் கட்ட முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் பட்டினிச் சாவு அதிகமாக நிகழ்ந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு விவசாயிகூட பட்டினியால் சாகவில்லை. இங்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்திருக்கும் கூட்டம் பிரியாணிப் பொட்டலங்களுக்கும், டீ-சர்ட்டுக்காகவும் வரவில்லை. விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அறப் போராட்டத்துக்காக வந்துள்ளனர். தமிழக அரசியலில் யாராவது பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் விட மாட்டோம். மீறிப் பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையைவைப்போம். அவர்கள் செய்யும் துரோகத்தைப் பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடிபோலக் கொடுப்போம்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ``நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கர்நாடக எம்.பி ஒருவர் `மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு, எப்போது மத்திய அரசின் அனுமதி வழங்கப்படும்?’ எனக் கேள்வி எழுப்பியபோது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத், `மேக்கேதாட்டு திட்ட அறிக்கைக்கு, கடைமடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியும், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலும் இல்லாமல் மத்திய அரசு அனுமதி அளிக்காது’ எனத் திட்டவட்டமாக பதிலளித்திருக்கிறார். இதனால் மேக்கேதாட்டு பிரச்னை முடிவுக்கு வரப்போகிறது" எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு