எடப்பாடி கே பழனிசாமி வாழ்க்கை வரலாறு: வெல்ல வியாபாரம் டு முதல்வர் பதவி - முழுமையான தொகுப்பு

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை சென்றதையடுத்து 2017-ல் அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.
பிறப்பும் பின்னணியும்:
சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையம் எனும் சிற்றூரை பிறப்பிடமாகக்கொண்டவர் எடப்பாடி கே.பழனிசாமி. சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியைக்கொண்ட இவர், மே 12, 1954-ம் ஆண்டில் கருப்ப கவுண்டர், தவசியம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரின் மனைவி ராதா. இவர்களுக்கு மிதுன்குமார் என்ற மகனும் இருக்கிறார்.
கல்வியும் தொழிலும்:
பள்ளிப்படிப்பு முடிந்ததும், ஈரோடு வாசவி கல்லூரியின் விலங்கியல்துறையில் சேர்ந்த இவரின் கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றது. பின்னர், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் சந்தைகளில் வெல்ல வியாபாரம் செய்துவந்தார்.
அரசியல் வருகையும், அனுபவித்த பதவிகளும்:
சாதாரண வெல்ல வியாபாரியாக இருந்த இவரை முதன்முதலில் அரசிலுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர் அ.தி.மு.க அமைச்சர் செங்கோட்டையன்தான். 1974-ல் கோணேரிப்பட்டி கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பழனிசாமி, 1990-ம் ஆண்டில் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், 1991-ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், 1993-ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும், 2001-ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவராகவும், 2006-ல் கழகக் கொள்கைபரப்புச் செயலாளராகவும் படிப்படியாக உயர்ந்தார்.

பின்னர் 2011-ல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2014-ம் ஆண்டு கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினராகவும், தலைமை நிலைய செயலாளராகவும், 2016-ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை சென்றதையடுத்து 2017-ல் அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதல்வராகப் பதவியேற்றார். தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
வெற்றியும் தோல்வியும்:
சட்டமன்ற உறுப்பினராக…
1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க ஜெ பிரிவின் சார்பாக, எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். இதில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
1991-ல் மீண்டும் எடப்பாடி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
1996 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வியடைந்தார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதே எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
நாடாளுமன்ற உறுப்பினராக…
1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.
1999 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வியடைந்தார்.
சாதனைகளும் விமர்சனங்களும்:
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது, குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீர்மேலாண்மையை உறுதி செய்தது, விவசாய பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்தது போன்றவை எடப்பாடி பழனிசாமியின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக கருதப்படுகின்றன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் 13-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம், தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடு, கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான காவல்துறை தடியடி, பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பவம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு விமர்ச்சனங்கள் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்ச்சகர்களால் பழனிசாமி அரசின் மீது முன்வைக்கப்படுகின்றன.