Published:Updated:

`அமைச்சர் பதவி (அ) மாவட்டச் செயலாளர் பொறுப்பு' - 22 அமைச்சர்களுக்கு செக்? ஸ்டாலின் அதிரடி?!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க ஆட்சியமைத்து கொரோனா பேரிடர் பணியில் சென்றுகொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் இப்போதுதான் மெல்ல கட்சிப் பக்கம் வந்திருக்கிறார். அவர் கட்சியில் அதிரடியாக சில மாற்றங்களை மேற்கொள்ள விருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் ஒருவர், “ஆட்சியமைந்ததும் எந்தவித கெட்டபெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதனால் தொடர்ந்து ஆட்சிப் பணியை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் கவனித்து வந்தார். கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துவிட்டதால் சற்று கட்சிப் பக்கம் வந்திருக்கிறார். தி.மு.க-வின் ஈர்ப்பு விசையில் பல்வேறு மாற்றுக்கட்சியினரும் தி.மு.க-வை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கட்சியில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்.

தி.மு.க-வில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே வாய்மொழி உத்தரவாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படிதான், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரையிலான பேரண்ட் பாடியை மெயிண்டெயின் செய்து வருகிறோம். பேரண்ட் பாடி மட்டுமின்றி, அணிகளின் நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். சட்டமன்றத் தேர்தல், ஆட்சி அமைப்பு, கொரோனா, சட்டப்பேரவைக் கூட்டம் போன்ற பணிகளால் கட்சியில் அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவு சில காலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது.

திமுக அமைச்சர்கள் சிலர்
திமுக அமைச்சர்கள் சிலர்

இதற்கு உயிரூட்டும் வகையில் பல அதிரடி மாற்றங்களை கட்சித் தலைவரான ஸ்டாலின் நிகழ்த்தப்போகிறார். முதற்கட்ட அட்டாக்கே அமைச்சர்களில் இருந்துதான் தொடங்குகிறது. பி.கே.சேகர்பாபு, மா.சுப்ரமணியன், ஆவடி நாசர், தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், சிவசங்கர், செந்தில்பாலாஜி, ரகுபதி, சாமிநாதன், முத்துசாமி, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ் ஆகிய 22 அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்களாகவும், மாவட்டப் பொறுப்பாளர்களாகவும் இருக்கின்றனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சிக் கட்டுப்பாடு காரணமாக 22 அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. தயக்கம் காட்டும் நபர்களுக்கு ஒன்று மாவட்டச் செயலாளர் அல்லது அமைச்சர் என இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவிதான் வேண்டுமென்றால், அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்து, வேறு நபர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமாம். எப்படி வேட்பாளர் பட்டியலை தனியாகத் தேர்வு செய்தாரோ, எப்படி அமைச்சரவைப் பட்டியலைத் தனியாகத் தேர்வு செய்தாரோ அதேபோல, இந்த விவகாரத்தையும் யாருடைய தலையீடும் இல்லாமல், தனியாகவே கையாளப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்.

பல எம்.எல்.ஏ-க்களும் மாவட்டச் செயலாளர்களாக இருப்பதாக சிலர் கூறலாம். எம்.எல்.ஏ பதவி என்பது மக்கள் நேரடியாக தேர்வு செய்த பொறுப்பு. அது கட்சிக் கொடுத்தது அல்ல. அதுவே, அமைச்சர் பதவி என்பது முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலினாகப் பார்த்துக் கொடுத்தது. அதாவது கட்சி மூலம் கொடுக்கப்பட்டதுபோலதான். அதனால்தான் ஒருவருக்கு ஒரு பதவி எனும்போது அமைச்சர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இதில் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு