Published:Updated:

`இந்தப் பணத்திலும் தஞ்சாவூர் காங்கிரஸ் நிர்வாகி கமிஷன் கேட்பது நியாயமா?'- மகனை இழந்த தாய் வேதனை

கஜா புயலால் இறந்தவரின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளையின் சார்பில் கொடுக்கப்பட்ட நிதியை அக்கட்சிக்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கமிஷன் பெற்றுக்கொண்டு கொடுத்த சம்பவம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவுனம்மாள்
பவுனம்மாள் ( ம.அரவிந்த் )

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சார்பில் கஜா புயலால் இறந்தவரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூரைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினரிடம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரூ.20,000 கமிஷன் பெற்றுக்கொண்டு காசோலை கொடுத்த சம்பவம் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்

தஞ்சாவூர் பாபநாசம் அருகே உள்ள உக்கடை கிராமத்தைச் சேர்ந்தவர் பவுனம்மாள். இவருடைய மகன் ஸ்ரீராம். இவர் பட்டுக்கோட்டை ரயில்நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின்போது மேற்கூரை தகர ஷீட் இவர் மேலே விழுந்ததில் பணியில் இருக்கும்போதே இறந்துவிட்டார். இதையடுத்து இவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி தருவதாக அறிவித்தது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. தற்போது அதற்கான காசோலையைத் தருவதற்கு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரூ.20,000 கமிஷன் கேட்டு அதைப் பெற்றுக்கொண்டு காசோலையைக் கொடுத்திருக்கின்றனர்.

இது குறித்து பவுனம்மாளிடம் பேசினோம். ``என் மகன் ஸ்ரீராம் பட்டுக்கோட்டை ரயில்வேயில் வேலை பார்த்து வந்தான். கஜா புயலின்போது தகர ஷீட் விழுந்து இறந்துவிட்டான். என் குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து எங்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளிப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான தொகை வந்து சேரவில்லை. நாங்கள் தஞ்சாவூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொடர்புகொண்டு கேட்டு வந்தோம்.

பவுனம்மாள்
பவுனம்மாள்

அதற்கு அவர்கள் கும்பகோணத்தில் உள்ள வடக்கு மாவட்ட தலைவரான லோகநாதன் அலுவலகத்தில் சென்று விசாரித்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். அதன் பிறகு, எங்க வட்டாரத்தலைவர் கண்ணன் என்பவர் காசோலை வந்துவிட்டது எனத் தெரியப்படுத்தினார். அத்துடன் ஆகஸ்ட் மாதம் விழா எடுத்து கொடுக்க உள்ளோம் என்றார். அதன் பிறகு, காசோலையைப் பெறுவதற்கு ரூ.20,000 தர வேண்டும் அப்பதான் காசோலை கிடைக்கும் என்றார்.

நாங்களே ரொம்ப கஷ்டப்படுகிறோம். அதோடு என் மகனை இழந்த துக்கமே இன்னும் மறையவில்லை. ஏதோ இதுபோல் கிடைக்கும் உதவிகள் மூலம் அவன் மறைந்தும் எங்களை வாழவைக்கிறான். இந்தப் பணத்திலும் கமிஷன் கேட்கிறீர்களே இது நியாமா என்றேன். அதற்கு அவர் 20,000 கொடுத்தால் ஒரு லட்சம். இல்லை என்றால் கிடைக்காது எனச் சொல்லிவிட்டார். நான் செக் கைக்கு வந்ததும் வங்கியில் செலுத்தி எடுத்துத் தருகிறேன் எனக் கூறினேன். அதற்கு அவர் ஒத்துக்க முடியாது எனக் கூறி விட்டதால் பின்னர், வேறு வழியின்றி அந்த கமிஷன் பணத்தை கொடுப்பதற்காகக் கடன் வாங்கினேன். அதன் பிறகு, என்னை கும்பகோணத்தில் உள்ள வடக்கு மாவட்ட தலைவர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

செக் கொடுத்த கவர்
செக் கொடுத்த கவர்

அங்கு மாவட்டத் தலைவரான லோகநாதன் என்னிடம் ஒரு லட்சத்துக்கான செக்கை கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். கூடவே வந்த கண்ணன் என்னிடம் பணம் கேட்டார். நான் அவரிடம் ராஜீவ்காந்தி படத்துக்கு முன்னால் நின்றுகொண்டு ரூ.20,000 கொடுத்தேன். எதுவும் சொல்லாமல் வாங்கிகொண்டார்'' என்றார்.

அம்மாப்பேட்டை வட்டாரத்தலைவர் கண்ணன் என்பவரிடம் பேசினோம். `செக்கை பெறுவதற்காக இரண்டு வேன் எடுத்துக் கொண்டு எங்க கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பவுனம்மாள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் கும்பகோணத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்றோம். பின்னர் செக்கை பெற்றுக்கொண்ட பிறகு, எல்லோரும் சாப்பிட்டுவிட்டு ஊருக்கு திரும்பினோம். அதற்கான செலவைதான் பவுனம்மாளை செய்ய சொன்னேன். அவரும் செய்தார். பிடிக்காத எங்க கட்சிக்காரர்களே இதைக் கிளப்பிவிடுகிறார்கள்'' என்றார்.

லோகநாதன்
லோகநாதன்

வடக்கு மாவட்டத் தலைவர் லோகநாதனிடம் பேசினோம். ``செக் வந்து நீண்ட நாள்கள் ஆகியும் அதைப் பெறுவதற்கு சம்பந்தபட்டவர்கள் வரவில்லை. அப்புறம் எங்க கட்சியைச் சேர்ந்த கண்ணன் பவுனம்மாளை அழைத்து வந்தார். நீங்க வரவில்லை என்றால் செக்கை திருப்பி அனுப்பியிருப்பேன் எனக் கூறிவிட்டு செக்கை கொடுத்துவிட்டேன். மற்றபடி வெளியே என்ன நடந்தது என தெரியவில்லை'' என்றார்.