Published:Updated:

``திமுக, அதிமுக-தான் தோழமைக் கட்சிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கின்றன!" - கே.எஸ்.அழகிரி ஓப்பன் டாக்

கே.எஸ்.அழகிரி

``குலாம் நபி ஆசாத் ஒன்றும் அவ்வளவு பெரிய தலைவர் இல்லை. அவர் விலகளால் கட்சிக்கு எந்த சிரமமும் வராது. தனிநபரை நம்பி காங்கிரஸ் இல்லை." - கே.எஸ்.அழகிரி

``திமுக, அதிமுக-தான் தோழமைக் கட்சிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கின்றன!" - கே.எஸ்.அழகிரி ஓப்பன் டாக்

``குலாம் நபி ஆசாத் ஒன்றும் அவ்வளவு பெரிய தலைவர் இல்லை. அவர் விலகளால் கட்சிக்கு எந்த சிரமமும் வராது. தனிநபரை நம்பி காங்கிரஸ் இல்லை." - கே.எஸ்.அழகிரி

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

செப். 7-ம் தேதி ராகுல் மேற்கொள்ளவிருக்கும் நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் சென்னை நந்தனத்திலுள்ள தனது வீட்டில் தீவிர ஆலோசனை மேற்கொண்டிருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

"ராகுல் காந்தியின் நடைபயண ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன?"

"தமிழ்நாடு இதுவரை கண்டிராத அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' மேற்கொள்ளும் ராகுல் கையில் ஏந்திச் செல்லும் தேசியக்கொடியை முதல்வர் ஸ்டாலின் கொடுத்து பயணத்தை தொடங்கி வைக்கிறார்."

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``பா.ஜ.க முன்வைக்கும் ஒரே இந்தியாவுக்கும், காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணத்துக்கும் என்ன வேறுபாடு?"

``பா.ஜ.க-வின் ஒரே இந்தியா என்பது ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் அகண்ட பாரதம் என்ற கொள்கையைத்தான். அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடம். ஆனால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள் என வாழும் நாட்டில் ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே வழிபாடு என்பது சாத்தியமில்லை. ஆனால், காங்கிரஸின் இந்திய ஒற்றுமை கோஷம் என்பது, இங்கு வாழும் அனைவரும் இந்தியர்கள் என்பதுதான். பா.ஜ.க இந்தியாவைப் பிரிக்க நினைக்கிறது. நாங்கள் ஒன்றுபடுத்த நினைக்கிறோம்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இனம், மொழி, சாதி, மதம் என பிரிந்து கிடக்கும் இந்தியாவை ராகுலின் இந்த ஒற்றைப் பயணம் இணைத்துவிடும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?"

``ஒருவரை இனம், மொழி, மதம், சாதி மூலம் அடையாளம் காட்டி, பொது சமூகத்திலிருந்து அவர்களை விலக்கி வைக்கும் செயலை பா.ஜ.க தொடர்ந்து செய்து வருகிறது. இதுபோன்ற காட்டுமிராண்டி தனத்தால் நாடு பின்நோக்கி சென்றுவிடக்கூடாது என்பதை மையமாக வைத்துதான், தேசியக்கொடியை ஏந்தி பயணத்தை ராகுல் மேற்கொள்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் வேற்றுமையில் ஒற்றுமை மீண்டும் தலைத்தோங்கும்."

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``ஆனால், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்களையே ராகுலால் இணைக்க முடியவில்லையே?"

``காங்கிரஸில் இது ஒன்றும் புதிதாக நடந்த விஷயமில்லை. சுதந்திரத்துக்கு முன்பாக காந்திக்கு இணையான தலைவர் சுபாஸ் சந்திர போஸ், காங்கிரஸிலிருந்து விலகினார். அதேபோல, சுதந்திரத்துக்குப் பின்பாக நேருவுக்கு இணையான ஜெயபிரகாஷ் நாராயணன், ராஜாஜி போன்ற பல தலைவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியிருக்கிறார்கள். அப்படி பார்த்தால் குலாம் நபி ஆசாத் ஒன்றும் அவ்வளவு பெரிய தலைவர் இல்லை. அவரால் கட்சிக்கு எந்த சிரமமும் வராது. தனிநபரை நம்பி காங்கிரஸ் இல்லை."

``ஆனால், ராகுல் என்ற தனிநபரைச் சுற்றி காங்கிரஸ் இயங்குவதாகதானே விலகியவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது?"

``அப்படியெல்லாம் இல்லை. ராகுல்மீதும் சோனியா காந்திமீதும் கட்சியிலிருந்து விலகியவர்கள் வைக்கும் குற்றச்சாட்டை தொண்டர்கள் யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆசாத் பக்கம் கட்சி சென்றால் அவர்தான் தலைவர். ஆனால், அவர் பக்கம் தொண்டர்கள் யாரும் செல்லவில்லையே... தலைமை என்பது திணிக்கப்படுவதில்லை."

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``தலைவர் பதவி வேண்டாமென்று ராகுல் தொடர்ந்து மறுத்துவருகிறார். ஆனால், நீங்களோ அவர்மீது தலைவர் பதவியை திணிக்கிறீர்களே... இது முரணாக இல்லையா?"

``இதற்கு பெயர் திணிப்பு இல்லை. கட்சியின் வளர்ச்சிக்கான தேவை... அவர் தலைவராக இருந்தால்தான் கட்சியை வளர்க்க முடியுமென்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். தொண்டர்கள் விரும்பாத தலைவர் வந்தால், கட்சி செயலற்றுபோகும். இந்த இயல்பான தன்மை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்."

``ஆனால், காங்கிரஸ் கட்சி இப்போதும் செயலற்றுதானே இருக்கிறது?"

``நூறு ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் பல மாற்றங்கள் நடத்திருக்கின்றன. காங்கிரஸின் வழியில்தான் இன்று பல மாநில கட்சிகளும் பா.ஜ.க-வை எதிர்த்து நிற்கின்றன. இந்தியா இருக்கும்வரை காங்கிரஸ் இருக்கும்... செயலற்றுப் போகாது."

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``தி.மு.க கொடுக்கும் ஆக்ஸிஜனில்தான் காங்கிரஸ் உயிர் வாழ்கிறது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறாரே?"

``தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க என்று பெரிய கட்சிகள்தான் தோழமை கட்சிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கின்றன. நாங்கள் கொஞ்சம் ஆரோக்கியமாக இருப்பதால், தி.மு.க கொடுக்கும் ஆக்ஸிஜன் எங்களுக்கு பொருந்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் 72 சதவிகிதம் வெற்றி பெற்றியிருக்கிறோம். ஆனால், பண பலம், அ.தி.மு.க கூட்டணி என இரு ஆக்ஸிஜனோடு தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு வெறும் 4 இடங்களே கிடைத்தன. எவ்வளவு ஆக்ஸிஜன் கொடுத்தாலும், ஏற்றுக்கொள்ளாத வீக்கான உடல்தான் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. இதை அண்ணாமலை முதலில் புரிந்துகொண்டு ஆக்ஸிஜன் கதையை பேசவேண்டும்."

``எவ்வளவு நாள்தான் கூட்டணியிலிருந்து தலைமையைக் காப்பாற்றுவீர்கள். தமிழ்நாட்டை ஆள காங்கிரஸுக்கு ஆசை இல்லையா?"

``தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிதான் எங்கள் கனவு. அதை நோக்கியேதான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த காலங்களில் மாநில அளவில் இருந்த பிரச்னையை சரிசெய்து வலிமையாக்கி வருகிறோம்."

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``வலிமையான கட்டமைப்பு இருந்தும் தமிழ்நாட்டில் பா.ஜ.க தானே ஸ்கோர் செய்து வருகிறது?"

``ஆளுங்கட்சியின்மீது குற்றச்சாட்டு சொல்வதோடு இடத்தை காலிசெய்து விடுகிறது தமிழ்நாடு பா.ஜ.க. போறப்போக்கில் ஒரு வெடியை வீசுகிறார்கள். அது ஊசி வெடிபோல் 'டொப்' என்று ஒரு சின்ன சத்தம் கேட்கும். உடனே அணுகுண்டு வெடித்தபோல் கூத்தாடுகிறார்கள். அன்றோடு அது முடிந்துவிடும். பிறகு அடுத்த ஊசிவெடி. முழுக்க முழுக்க விளம்பரத்துக்காக செய்யும் செயலின்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களைப் போல எங்களுக்கு வீண் விளம்பரம் தேவையில்லை."