Published:Updated:

சிறைவாசிகளை 16-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி: டி.ஜி.பி உத்தரவு!

சிறை
சிறை

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக சிறைகளிலுள்ள சிறைவாசிகளை அவர்களது வழக்கறிஞர்களும் உறவினர்களும் சந்திக்க இயலாத சூழ்நிலை நிலவியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் கொரோனா முதல் அலை 2020 மார்ச்சில் தொடங்கி, செப்டம்பர் வரை நீடித்தது. மீண்டும் கொரோனா இரண்டாவது அலை 2021 மார்ச்சில் தலைதூக்கியது. இந்த இரண்டு அலைகளாலும் பொதுமக்கள், வேலை செய்வோர், சுயதொழில் செய்வோர், வியாபாரம் செய்வோர், தொழிலதிபர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டனர். சிறைகளிலுள்ள கைதிகளும் பாதிப்புக்குள்ளாகினர். பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக சிறைகளிலுள்ள சிறைவாசிகளை அவர்களின் வழக்கறிஞர்களும் உறவினர்களும் நேரில் சந்திக்கவே இல்லை. கொரோனா பரவல் காரணமாக அதற்கான அனுமதியை சிறைத்துறை வழங்கவில்லை.

சைலேந்திர பாபு், டி.ஜி.பி
சைலேந்திர பாபு், டி.ஜி.பி

இந்தச் சூழ்நிலையில், வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் தமிழகத்திலுள்ள கிளைச் சிறை தொடங்கி, மத்திய சிறை வரை அவற்றில் அடைக்கப்பட்டிருக்கும் 30,000-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளை அவர்களது வழக்கறிஞர்களும் உறவினர்களும் நேரில் சந்திக்க அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறார் டி.ஜி.பி சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், e-prisons visitors management system அல்லது சிறைகளின் தொலைபேசி மூலம் வழக்கறிஞர்களும் உறவினர்களும் தொடர்புகொண்டு யாரைச் சந்திக்க வேண்டும் என்பது குறித்து முன்பதிவு செய்ய வேண்டும். அனுமதி கிடைத்த பின்னர், சந்திப்பு நாளன்று சந்திப்பு நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட சிறைக்கு வருகை தர வேண்டும். உறவினர்கள் பார்க்க விரும்பினால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வழக்கறிஞர்கள் ஒருவர் அனுமதிக்கப்படுவார். ஒரு சிறைவாசிக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே நேர்காணலுக்கு அனுமதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைகளில் பொதுத் தொலைபேசி இருந்தாலும், மறைமுகமாக செல்போன் பயன்பாடு இருந்தாலும், மனைவி மக்களை நேரில் பார்க்கும்போது கிடைக்கும் ஒரு மன நிம்மதி இல்லை. இத்தனை நாள்களாக மனதால் வாடிக்கொண்டிருந்த கைதிகளுக்கு தமிழக டி.ஜி.பி-யின் இந்த உத்தரவு ஓர் அருமருந்தே!

பாபு முருகவேல், அதிமுக
பாபு முருகவேல், அதிமுக
`துணிச்சலா செயல்பட்டு பெருமை சேர்த்துட்டீங்க சரவணன்!'- டி.ஜி.பி போன்காலால் நெகிழ்ந்த தலைமைக் காவலர்

டி.ஜி.பி இப்படி உத்தரவுப் பிறப்பதற்கு காரணம் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ பாபு முருகவேல்தான். அவரிடம் பேசினோம். ``என்னதான் குற்றங்களைச் செய்துவிட்டு தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டாலும், நீதிமன்றக் காவலில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டாலும், வழக்கறிஞர்களையும், உறவினர்களையும் கைதிகள் சந்திக்க சட்டத்தில் இடமுண்டு. கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இப்படியான சந்திப்பு நிகழவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் வழக்கறிஞர்களாவது சந்தித்தே ஆக வேண்டும். அப்போதுதான் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க முடியும். அதேநேரம், கைதிகளின் பெற்றோர், மனைவி, பிள்ளைகளும் நேரில் காண ஆவலாக இருப்பார்கள். அதனால்தான் இரண்டுக்கும் சேர்த்து அனுமதி கொடுக்கும்படி தமிழக முதல்வர், டி.ஜி.பி., உளதுறைச் செயலாளர், சிறைத்துறை ஐ.ஜி ஆகியோருக்குக் கடிதம் அனுப்பினேன். அதை ஆய்வு செய்து தற்போது டி.ஜி.பி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். கொரோனாவுக்கு முன்பு வழக்கறிஞர்கள் என்ற முறையில் நாங்கள் தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை கைதிகளைச் சந்திக்கலாம். சனிக்கிழமை அன்று மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்திக்கலாம். உறவினர்களைப் பொறுத்தவரை மனு எழுதிக்கொடுத்து அவ்வப்போது சந்தித்துவந்தனர். தற்போது கொரோனா முழுமையாக நம்மைவிட்டுப் போகாததால், 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே சந்திப்புக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். எனினும், இதுவே சிறப்பான முடிவுதான்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு