Published:Updated:

அக்டோபரில் தமிழக பி.ஜே.பி தலைவர் மாற்றம்- ரேஸில் முந்தும் அடுத்த தலைவர் யார்?

ந.பொன்குமரகுருபரன்

வரும் அக்டோபர் மாதத்திற்குள் தமிழக பி.ஜே.பி தலைவரை மாற்ற டெல்லி மேலிடம் முடிவெடுத்துள்ளதாகக் கமலாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

tamilisai
tamilisai

தமிழக பி.ஜே.பி தலைவராக உள்ள தமிழிசையின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதமே முடிந்துவிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியதால், அவரை மாற்றாமல் வைத்திருந்தனர். இந்நிலையில், அடுத்த மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

amit shah and modi
amit shah and modi
தமிழகத்தைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க, தி.மு.க மீது அதிருப்தியில் உள்ள சமூகங்களைக் கையில் எடுத்து அரசியல் செய்யவே பி.ஜே.பி விரும்புகிறது. அதிருப்தி சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதன்மூலம், தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என பி.ஜே.பி தலைமை கருதுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கயிறு வாரியத் துறை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி மாநில நிர்வாகி ஒருவர், “தமிழக அரசு மீதான ஊழல் பட்டியல், சமூகவாரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பி.ஜே.பி-க்கு உள்ள செல்வாக்கு, உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் டெல்லி பி.ஜே.பி தலைமையிடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க-வைத் தாக்குவது என டெல்லி மேலிடம் முடிவெடுத்துவிட்டால், பொன்னார் அல்லது சி.பி.ஆர்-க்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

மிதமான போக்கை கையாள விரும்பினால், அதற்கேற்பவும் ஆட்களைத் தேர்வுசெய்யப்படலாம். முன்னாள் கிருஷ்ணகிரி எம்.பி.நரசிம்மன், முன்னாள் திருத்தணி எம்.எல்.ஏ. ரவிராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. வன்னியர் சமூகத்தவரான ரவிராஜ், பா.ம.க-வில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு கடந்த 2017-ல் பி.ஜே.பி-யில் இணைந்தார்” என்றவரிடம், “மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் பெயர்கள் அடிபட்டதே?” என்றோம்.

narasimman with pon.radhakrishnan
narasimman with pon.radhakrishnan

“தமிழகத்தைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க, தி.மு.க மீது அதிருப்தியில் உள்ள சமூகங்களைக் கையில் எடுத்து அரசியல் செய்யவே பி.ஜே.பி விரும்புகிறது. அதிருப்தி சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம், தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என பி.ஜே.பி தலைமை கருதுகிறது. முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பாலும் டி.டி.வி தினகரன் பின்னால் அணிவகுத்திருப்பதால், அச்சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு குறைவுதான். அதற்குப் பதிலாக, வாரியத் தலைவர் பதவி வழங்கப்படலாம். வானதி சீனிவாசன், கறுப்பு முருகானந்தம் பெயர்களும் முன்பு பரிசீலனையில் இருந்தன. சமூக அரசியலைக் கையிலெடுக்க பி.ஜே.பி தலைமை விரும்புவதால், அவர்களுக்கும் வாய்ப்பு குறைவுதான் ” என்றார்.

தற்போது பி.ஜே.பியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபருக்குள் புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாதத்திலிருந்தே, தனது ஆட்டத்தை பி.ஜே.பி ஆடத் தொடங்கும் எனவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.