Published:Updated:

``அதிமுக-வின் திட்டங்களை நிறுத்தி வைத்ததே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

``அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்." - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:

``அதிமுக-வின் திட்டங்களை நிறுத்தி வைத்ததே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு

``அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்." - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

ஈரோட்டில் இன்று அ.தி.மு.க தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்துப் பேசினார். கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அரசு கொறடா பா.மோகன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கருப்பண்ணன், ராஜேந்திர பாலாஜி, செம்மலை, சண்முகநாதன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆனந்தன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் போட்டியிட வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்த த.மா.கா தலைவர் வாசன், யுவராஜா ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல நமக்கு முதலில் த.மா.கா-வும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்தத் தேர்தல் நமக்குப் புதிதல்ல. இதுபோல பல தேர்தல்களில் களம் கண்டு வெற்றியைப் பெற்றவர்கள் அ.தி.மு.க-வினர். நமக்கு ஏற்படும் சோதனைகளும் புதிதல்ல. பல சோதனைகளை எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறோம். இன்று சிலர் எட்டப்பன் வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

வரவேற்கும் கே.ஏ.செங்கோட்டையன்
வரவேற்கும் கே.ஏ.செங்கோட்டையன்

இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று எதிரிகளோடு கைகோத்துக்கொண்டு கட்சிக்கு விரோதமாக செயல்படுவோருக்கு இந்தத் தேர்தல் பாடமாக அமைய வேண்டும். அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர்., அதை இமைபோல் காத்த ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு மக்கள்தான் குழந்தைகள். நாம்தான் பிள்ளைகள். நமது தலைவர்களின் பிள்ளைகளாகிய நம்மிடம் கட்சியை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். அதை நாம் அனைவரும் உணர்ந்து ஒன்றுபட்டு, உழைத்து வெற்றி என்ற மிகப்பெரிய சாதனையைப் படைக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப நம்முடைய உழைப்பைச் செலுத்தி சிந்தாமல், சிதறாமல் மக்களின் வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய சரித்திர வெற்றியை நாம் பெற வேண்டும்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் யாருமே தெரியவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும், நான்கைந்து தினங்களில் பாருங்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அ.தி.மு.க கரைவேட்டி கட்டியவர்கள் மட்டுமே தெரிவார்கள். அ.தி.மு.க வீரர், வீராங்கனைகள் ஆங்காங்கே முகாமிட்டு, மக்களைச் சந்தித்து மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்காக உழைக்கும் கூட்டம் இது. அதை எதிரிகள் புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க நிர்வாகிகள்
கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க நிர்வாகிகள்

அ.தி.மு.க-வை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் எனப் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க தோற்ற வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் நிச்சயமாக வெற்றி நம்மைத் தேடிவரும். நம்மை நாம்தான் தோற்கடிக்க முடியுமே தவிர, வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது. நமக்குள் உள்ள சிறு, சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றிக்காக உழைக்க வேண்டும். உழைப்பு, தியாகம் இருந்தால் வெற்றி என்ற மிகப்பெரிய சாதனையை அடைய முடியும். எல்லாக் கட்சியிலும் பிரச்னை இருக்கிறது. தி.மு.க-வில் உச்சபட்சமான பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இரண்டு மாபெரும் தலைவர்களும் இல்லாமல், இவ்வளவு பெரியக் கூட்டத்தை அ.தி.மு.க-வினால் மட்டுமே கூட்ட முடியும். உழைக்கும் தொண்டர்கள் ஒன்றிணைந்து, தடைகளைத் தகர்த்தெரிந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அசோகபுரம், பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், பெரியார் நகர், வீரப்பன்சத்திரம் என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஐந்து பகுதிகளுக்கும் பூத்வாரியாக கட்சியின் நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அந்த பூத்தில் இடம்பெற்றிருக்கும் பொறுப்பாளர்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் வாக்காளர் பட்டியல், ஏற்கெனவே பெற்ற வாக்குகள், வார்டு விவரம், பொறுப்பாளர்கள், பகுதிச் செயலாளர் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பகுதிக்குச் சென்று கூட்டத்தைக் கூட்டி, நமது பணியை ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பட்டியலில் நிர்வாகிகள் பெயர் விடுபட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து அவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நாளைமுதல், வீடு, வீடாகச் சென்று அந்த வீட்டில் வாக்காளர் இருக்கிறாரா, இறந்துபோய்விட்டாரா அல்லது வேறு பகுதிக்கு வீடு மாறிச் சென்றுவிட்டாரா என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதை தி.மு.க-வினரே சொல்கின்றனர். மூன்றில் ஒரு கட்டம் என்ற கால அளவில் ஆட்சி முடிந்துவிட்ட போதிலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க ஒரு துரும்பளவுக்குக்கூட வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை. அ.தி.மு.க ஆட்சியில்தான் நிறைய திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இதைக் கூறி நாம் நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் வாக்கு கேட்கலாம். ஆனால், தி.மு.க-வோ கூனிக் குறுகிதான் ஓட்டு கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

பங்கேற்ற அ.தி.மு.க நிர்வாகிகள்
பங்கேற்ற அ.தி.மு.க நிர்வாகிகள்

வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருக்கின்றனர். மாதம் ரூ.1,000 வீதம் இல்லத்தரசிகளுக்கு வழங்குவதாகக் கூறியிருந்த நிலையில், இப்போது தகுதியானவர்களுக்குத்தான் கொடுப்போம் என்று கூறி ஏழை மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். எந்த முக்கியமான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. முதியோர் உதவித்தொகையை உயர்த்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாம் கொடுத்துவந்த உதவித்தொகையையும் நிறுத்திவிட்டனர். கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. 52 லட்சம் மாணவர்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் லேப்-டாப் வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். திருமண நிதி உதவி, இருசக்கர வாகனத்துக்கு மானியத் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஈரோடு மாநகரில் ரூ.100 கோடிக்கு மேல் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கான நிதி ஒதுக்கியும், ஆட்சியர் அலுவலகத்தை விரிவுபடுத்தியும் கட்டித் தரப்பட்டிருக்கிறது. திண்டலிலிருந்து நகர்ப்பகுதி வரையிலும் உயர்மட்ட பாலம் கட்ட ரூ. 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அரசு மருத்துவமனை பாலம், ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் அதைக் கிடப்பில் போட்டுவிட்டனர். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 564 பேர் மருத்துவக் கல்வி கற்றுவருகின்றனர். அவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொண்டது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு விசைத்தறித் தொழிலாளர்கள் வேலையிழந்து வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணியை மக்களுக்கு முறையாக வழங்கவில்லை. விசைத்தறி தொழில் நலிவடைந்து விட்டது. இதைப்பற்றி கவலைப்படாமல், கமிஷன், கலெக்ஷன் ஆட்சிதான் நடக்கிறது. பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தோம். நாம் பொங்கலுக்கு 21 வகையான பொங்கல் பொருள்கள் கொடுத்தோம். ஆனால், தி.மு.க ஆட்சியில் யாராலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்ற பொருள்களை வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக்கொடுத்தார்கள்.

அ.தி.மு.க நிர்வாகிகள்
அ.தி.மு.க நிர்வாகிகள்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொங்கலுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்று சொன்ன ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் ரூ.1,000 மட்டுமே கொடுத்தார். விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகே கரும்பு கொடுத்தார்கள். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நீங்களே வேட்பாளராகப் போட்டியிடுவதாக எண்ணி, தேர்தல் பணியாற்ற வேண்டும். இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சரித்திரம் படைத்திட வேண்டும்" என்றார்.