Election bannerElection banner
Published:Updated:

பாடம் கற்ற ஜெயலலிதா... பரிதாப வைகோ... பலே ராமதாஸ்! - அரசியல் அப்போ அப்படி - 4

அரசியல் அப்போ அப்படி
அரசியல் அப்போ அப்படி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், தனது தேர்தல் வெற்றிக்கு ராஜீவ் மரணம் காரணமல்ல என்றும் ஜெயலலிதா பேசியது தமிழக காங்கிரஸாரை ரொம்பவே கொந்தளிக்கவைத்தது.

தமிழக அரசியலைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு தேர்தலுமே விதவிதமான திருப்பங்களைக்கொண்டதுதான். என்றாலும், 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அதில் கொஞ்சம் ஸ்பெஷல். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இப்போது எப்படி ஆரூடம் சொல்லப்படுகிறதோ, அப்போது இதைவிடப் பல மடங்கு வாய்ப்பு இருப்பதாக ஆரூடம் சொல்லப்பட்டது.

ஆனால், அந்தத் தேர்தல் தி.மு.க கூட்டணிக்கான அமோக வெற்றியை மட்டும் பதிவு செய்யாமல், வேறு பல அத்தியாயங்களையும் எழுதிவிட்டுச் சென்றது.

தலைதூக்கிய சர்வாதிகாரம்... தாண்டவமாடிய ஊழல்கள்!

1991 - 1996 வரையிலான ஜெயலலிதாவின் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், தலைதூக்கிய சர்வாதிகாரம், ஆட்சி அதிகாரத்தில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடுகள், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடைபெற்ற ஆடம்பரமான திருமணம் போன்றவை மக்களிடையே அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்தியிருந்தன.

ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி முதல்வர், அமைச்சர்கள் என சகல தரப்பினரும் வருமானத்துக்கு மீறி சொத்துச் சேர்த்தது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தின் பல இடங்களிலும் முக்கியமான இடங்களை, உரிமையாளர்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கிக்குவித்ததாகப் புகார்கள் எழுந்தன.

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை எழுதி வாங்கியது, டான்சி இடத்தை அபகரித்தது, கொடைக்கானலில் அனுமதியின்றி ஏழு மாடி கட்டுவதற்கு பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி கொடுத்தது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, சென்னை மயிலாப்பூரில் இருந்த `அமிர்தாஞ்சன் நிறுவன’ இல்லத்தை அபகரிக்க முயன்றது, பாலு ஜூவல்லர்ஸ் உரிமையாளர் தற்கொலை விவகாரம்... என அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. மக்களிடையே எங்கு பார்த்தாலும் இவையே பேசுபொருளாக இருந்தன.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இவை தவிர கொடியங்குளம் கலவரம், பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் போன்றவையும் அ.தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருந்தன. இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு முன்னர் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை மனதில்கொண்டு, பாட்ஷா வெற்றிவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அதுவும் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே. இது ஜெயலலிதாவுக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

வைகோவின் மூன்றாவது அணி முயற்சி!

இந்தச் சூழலில்தான் வைகோ, தி.மு.க-விலிருந்து பிரிந்து ம.தி.மு.க-வைத் தொடங்கியிருந்தார். ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் ஊழல்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட நடைப்பயண பிரசாரத்துக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு. மேலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது அணி வைகோ தலைமையில் உருவாகலாம் என்ற அளவுக்கு ஓர் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது. ஆனால், 1996-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.

வைகோ
வைகோ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், தனது தேர்தல் வெற்றிக்கு ராஜீவ் மரணம் காரணமல்ல என்றும் ஜெயலலிதா பேசியது தமிழக காங்கிரஸாரை ரொம்பவே கொந்தளிக்கவைத்தது. இதனால், அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலை உருவானது. அத்துடன் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. ஆனால் தமிழகத்தில் நடப்பது எதுவும் தெரியாமல், நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறுவதால், மீண்டும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிட்டார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்.

ரஜினி கொடுத்த வாய்ஸ்!

இந்த அறிவிப்பு தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி உடைந்து ஜி.கே.மூப்பனார் தலைமையில் `தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற கட்சி (த.மா.கா) உதயமானது. கூடவே மறைந்த பத்திரிகையாளர் சோ மற்றும் நடிகர் ரஜினி ஆகியோரின் முயற்சியில் தி.மு.க - த.மா.கா கூட்டணி உருவானது. அத்துடன், ``ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது’’ என ரஜினியும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக `வாய்ஸ்’ கொடுத்தார். இதுதான் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பிள்ளையார்சுழி போட்டது.

ரஜினி
ரஜினி

ரஜினி கொடுத்த இந்த வாய்ஸால், ஜெயலலிதா கடுப்பின் உச்சத்துக்கே போனார். போதாததற்கு அப்போது ஒளிபரப்பான சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் வீடியோ பேட்டி வேறு அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான எண்ணத்தை மக்களிடையே உருவாக்கியது. இதில் அப்போது தொடங்கப்பட்டிருந்த சன் டி.வி., தி.மு.க பிரசாரத்துக்கு ரொம்பவே கைகொடுத்தது.

பா.ம.க உருவாக்கிய கூட்டணி!

இவ்வாறு அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக உருவான எதிர்ப்பலை, தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பை உருவாக்கியது. இந்த எதிர்ப்பலையில், ``தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்று ம.தி.மு.க-தான்’’ என்ற வைகோவின் முழக்கம் எடுபடாமல் போனது. தி.மு.க கூட்டணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட பா.ம.க., ம.தி.மு.க உடன் கூட்டணி அமைக்க முயன்றது. இருப்பினும் போட்டியிடும் இடங்களைத் தீர்மானிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூடவே, `ம.தி.மு.க - பா.ம.க கூட்டணி' என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார் ராமதாஸ். ஆனால் `ம.தி.மு.க கூட்டணி' என்றுதான் சொல்ல முடியும் என வைகோ சொல்லவே, பேச்சுவார்த்தை முறிந்தது.

ராமதாஸ்
ராமதாஸ்

அதேசமயம், வாழப்பாடி ராமமூர்த்தியுடன் இணைந்து சமூகநீதிக் கூட்டணியை உருவாக்கியது பா.ம.க. இதில், பா.ம.க 116 தொகுதிகளிலும், வாழப்பாடி ராமமூர்த்தியின் அகில இந்திய திவாரி காங்கிரஸ் 46 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

ம.தி.மு.க-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனதா தளமும் கூட்டணி அமைத்தன. `மக்கள் ஜனநாயகக் கூட்டணி' என்ற பெயரில் 177 இடங்களில் ம.தி.மு.க-வும், மார்க்சிஸ்ட் 40 இடங்களிலும், ஜனதா தளம் 16 இடங்களிலும் போட்டியிட்டன.

தி.மு.க-வுக்குக் கிடைத்த திருப்புமுனை வெற்றி

அ.தி.மு.க கூட்டணியில் குமரி அனந்தன் தலைமையிலான காங்கிரஸ் மட்டுமே இடம்பெற்றது. அ.தி.மு.க 168 தொகுதிகளிலும், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தி.மு.க கூட்டணியில், தி.மு.க 182 இடங்களிலும், த.மா.கா 40 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளிலும், ஃபார்வர்ட் பிளாக் 1 தொகுதியிலும் போட்டியிட்டன. இப்படி பலமுனைப் போட்டி இருந்தும்கூட, எதிர்பார்த்தபடியே தி.மு.க 173 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கூட்டணிக் கட்சியான த.மா.கா 39 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. நாடாளுமன்றத் தேர்தலில், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி அள்ளியது.

கருணாநிதி
கருணாநிதி

மீண்டும் நான்காவது முறையாக தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 32 பேர் அமைச்சர்களாகினர். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பாடம் புகட்டிய பர்கூர் மக்கள்!

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா - சசிகலா

168 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க, நான்கு இடங்களில் மட்டும் வெற்றிபெற்று, ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அடைந்த தோல்வி, அவருக்கு மிகுந்த அவமானத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது ஒன்றே, அந்தக் கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் படம்பிடித்துக் காட்டியது. அதேபோல் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைவரும் தோல்வியடைந்தனர். அ.தி.மு.க-வில் திருநாவுக்கரசு, ராசிபுரம் சுந்தரம், சங்கரன்கோவில் கருப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி ஆகியோர் மட்டும் வெற்றிபெற்றனர்.

தப்பிப் பிழைத்த பா.ம.க... தனித்துவிடப்பட்ட ம.தி.மு.க

அதேசமயம், பா.ம.க-வுக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. அது அப்போது பா.ம.க-வுக்கு பெரிய வெற்றிதான். காரணம், அந்தத் தேர்தலில்தான் பா.ம.க முதன்முறையாக கணிசமான வாக்குகளைப் பெற்று, தமிழக அரசியலில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்தது. ஆனால், மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்ட ம.தி.மு.க-வால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. விளாத்திகுளத்தில் போட்டியிட்ட வைகோ தோல்வியடைந்தார். மார்க்சிஸ்ட், ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.

வெற்றிபெற்ற பா.ஜ.க... வென்று காட்டிய கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

இவ்வளவு எதிர்ப்பலையிலும், பா.ஜ.க-வுக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கும் தலா ஒரு இடம் கிடைத்தது பலரையும் புருவம் உயர்த்தவைத்தது. பா.ஜ.க சார்பில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேலாயுதம், வெற்றிபெற்று முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

அதேபோன்று கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டினார். அந்தத் தேர்தலில் போட்டியிட்ட சிறிய கட்சிகளில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே இடம் கிடைத்தது. ஆனால், வைகோவின் ம.தி.மு.க மட்டும் மக்களால் நிராகரிக்கப்பட்டது பரிதாபகரமாக ஆனது!

பகுதி 3 படிக்க..

கருணாநிதி Vs ஆர்.வி: தீராத கோபங்கள்... தீர்க்கப்பட்ட கணக்குகள்! அரசியல் அப்போ அப்படி - 3
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு