Published:Updated:

திமுக-வை நெருங்கும் தேமுதிக?; தவிர்க்கும் அமமுக?! - உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் கட்சிகள்

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

முதலில் நடைபெறவிருப்பது விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே. ஒன்பதில், ஏழு மாவட்டங்கள் வடக்கில் வருவதால், தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க போன்ற கட்சிகள் போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகின்றன.

கடந்த அதிமுக ஆட்சியில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது புதிதாக உருவாக்கப்பட்டிருந்த திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கும், எந்த மாவட்டங்களிலிருந்து அவை பிரிக்கப்பட்டனவோ அந்த மாவட்டங்களுக்கும், அதாவது வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்கள் என மொத்தம் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் தடையை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல்முறையீடு! 
உள்ளாட்சித் தேர்தல் தடையை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல்முறையீடு! 

இந்தநிலையில், இது குறித்த வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இன்னும் ஒன்றரை மாதங்களே இருக்கும் நிலையில், கட்சிகள் எப்படித் தயாராகின்றன... கட்சிகள் வட்டாரத்தில் ஒரு ரவுண்ட் அடித்தோம்.

தி.மு.க:

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் என்னதான் அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தாலும், தி.மு.க சுமார் 50 சதவிகித இடங்களைப் பிடித்துவிட்டது. அதனால், தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், ஒன்பது மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 100 சதவிகித இடங்களைப் பிடிக்கத் தயாராகிறது தி.மு.க. இதற்காக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலுள்ள அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதன்படி காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசியபோதுதான் அமைச்சர் தா.மோ.அன்பரசன், `மாவட்ட சேர்மன் போன்ற முக்கியப் பொறுப்புகளைக் கைப்பற்றவில்லை என்றால் கழுத்தை அறுத்துப்போட்டுவிடுவோம்’ என்று பேசியதாகச் செய்திகள் வந்தன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும், வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமல்படுத்தவில்லை. சட்ட வல்லுநர்களுடனும், அதிகாரிகளுடனும் பேசிவிட்டு அறிவிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அவசரகதியில் அதிமுக நிறைவேற்றியதை நாம் அமல்படுத்த வேண்டுமா என ஸ்டாலின் குழப்பத்தில் இருந்தார். ஒரு சமூகத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டினால் மற்ற சமூகங்கள் எதிர்க்குமே என்று நினைத்தார். அதிகாரிகள் தரப்பிலிருந்து, `நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். அப்படி நடத்தும்போது மொத்தமுள்ள ஒன்பது மாவட்டங்களில், ஏழு மாவட்டங்கள் வடக்கில் வருகின்றன. வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இவை என்பதால், எந்த பாதிப்புமில்லை, திமுக-வுக்குச் சாதகமே’ என விளக்கிய பின்னர்தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புக்கொண்டாராம் முதல்வர் ஸ்டாலின். இதனால் எப்படியும் அடிச்சுத்தூக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது தி.மு.க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ம.க:

வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் பாமக-வுக்குத்தான் மிக முக்கியம். வன்னியர் சமூகம் இன்னமும் ராமதாஸ் பின்னால்தான் இருக்கிறது என்பதை அவர்கள் நிரூபித்தாக வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து அதிமுக கூட்டணியில் நீடித்து வருகிறது பாமக. இவர்களின் போராட்டத்தாலும், எடப்பாடி தொகுதியில் இருக்கும் கணிசமான வன்னியர் வாக்குகளாலும் வேறு வழியின்றி 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. வடக்கில் சில தொகுதிகளில் அதிமுக-வும் பாமக-வும் வெற்றிபெற இதுவும் ஒரு காரணம். இந்தநிலையில், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி திமுக ஸ்கோர் செய்யப்பார்க்கிறது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அதேவேளையில், தங்களால்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்பதைப் பிரசார யுக்தியாகப் பயன்படுத்த பாமக தயாராகிவிட்டது. சத்தமில்லாமல் பாமக சார்பில் திமுக தரப்பிலும் தூதுவிட்டு வருகிறார்கள். சீட் பேரம் படிந்தால், எடப்பாடிக்கு டாட்டா காட்டிவிட்டுச் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அ.தி.மு.க:

திமுக-வின் ரெய்டு அஸ்திரம் ஒருபுறம், பாஜக-வின் டெல்லி பிளான் ஒருபுறம், சசிகலாவின் சீண்டல் ஒருபுறம் என முக்கோணத் தாக்குதலில் சிக்குண்டுபோயிருக்கிறது கட்சி. இது மட்டுமன்றி எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம் இடையேயான பனிப்போரும் தீர்ந்தபாடில்லை. எனினும், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாகவே ஆலோசனைக் கூட்டம்போட்டு, நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தியது அதிமுக. ஆனால், இதிலென்ன சிக்கலென்றால், உள்ளாட்சித் தேர்தலுக்குத் தலைமையிலிருந்து பணம் எதுவும் கொடுக்கப்படாதாம். அந்தந்த மாவட்டச் செயலாளர்களும், எம்.எல்.ஏ-க்களும், முன்னாள் அமைச்சர்களும்தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்களாம். இதனால், நிர்வாகிகள் டோட்டல் அப்செட்டில் உள்ளனர். கட்சித் தலைமை வைட்டமின்களைக் கொடுத்தால் களத்தில் குதிக்கத் தயாராயிருக்கிறார்கள்.

பன்னீர் - எடப்பாடி
பன்னீர் - எடப்பாடி

2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பாலானவை வடமாவட்டங்களிலுள்ள தொகுதிகள் என்பதால், பாமக-வுடனான கூட்டணி காரணமாக ஒன்பது தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது அதிமுக. உள்ளாட்சித் தேர்தலில் பாமக-வின் வாக்குகள் அதிமுக-வுக்கு மிகுதியாக ட்ரான்ஸ்ஃபர் ஆனதால் 50 சதவித இடங்களை அ.தி.மு.க கைப்பற்றியது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பாமக துணை தேவைப்பட்டது. அதனால், வன்னியர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதை வைத்தும், பாமக-வை உடன் வைத்துக்கொண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிவருகிறது அதிமுக.

தே.மு.தி.க!

எந்தக் கட்சியும் சந்திக்கக் கூடாத மிகப்பெரிய வீழ்ச்சியைத் தொடந்து சந்தித்துவருகிறது தேமுதிக. 2021 தேர்தலில், கடைசி கட்டத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற்றப்பட்டது. பிறகு தினகரனுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது கட்சி. துவண்டுபோயிருக்கும் கட்சியினருக்கு வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் புத்துயிரூட்டும் என்ற நம்பிக்கை அந்தக் கட்சியினரிடம் இருக்கிறது. ஏனெனில், பாமக வலுவாக இருக்கும் வடக்குப் பகுதிகளில்தான் தேமுதிக-வும் ஓரளவு செல்வாக்குடன் இருக்கிறது. உள்ளாட்சியில் எப்படியேனும் திமுக கூட்டணிக்கு உள்ளே புகுந்துவிட வேண்டும் என்பதிலும் குறியாக இருக்கிறது பிரேமலதா வட்டாரம்.

விஜயகாந்த், பிரேமலதா
விஜயகாந்த், பிரேமலதா

பா.ஜ.க:

தேசியக் கட்சியான பா.ஜ.க., புதிய தலைவர் அண்ணாமலையைத்தான் முழுமையாக நம்பியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலைக் கணக்கில்கொண்டுதான் மேக்கேதாட்டுவில் அணைகட்டும் கர்நாடக பா.ஜ.க அரசைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்துகிறது.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை என்ன பண்ணலாம், எந்தெந்த கோஷ்டிகளுக்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்கலாம், திமுக-விடம் எத்தனை இடங்களைக் கேட்டுப் பெறலாம் போன்றவை குறித்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இரு நாள்களாக ஆலோசனை நடத்தியது மாநிலத் தலைமை.

மக்கள் நீதி மய்யம்:

தொடர் நிர்வாகிகள் விலகளால் கலகலத்துப்போயிருந்த கமலின் மக்கள் நீதி மய்யம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. புதிய உறுப்பினர்களை இணைப்பதற்காக ஆங்காங்கே முகாம் அமைக்கவும் முடிவுசெய்துள்ளனர். கவுன்சிலர் முதல் யூனியன் சேர்மன் பதவி வரையில் வைட்டமின் பார்ட்டிகளைத் தேடி வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ள கமல், உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயார் என்று பேட்டியும் கொடுத்துவிட்டார்.

நாம் தமிழர் கட்சி: தயாராகும் வேட்பாளர் பட்டியல் - உள்ளாட்சித் தேர்தலுக்கு சீமானின் திட்டம் என்ன?

நாம் தமிழர்:

வழக்கம்போல, சீமானின் நாம் தமிழர் கட்சி எல்லா கட்சிகளுக்கும் முன்பாகவே தயாராகிவருகிறது. மற்ற கட்சிகளைவிட நாம் தமிழரின் வேட்பாளர் தேர்வு வித்தியாசம் என்பதால், அதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. இன்னும் சில தினங்களில் வேட்பாளர் பட்டியலையே சீமான் வெளியிடப்போகிறார்.

டி.டி.வி.தினகரனின் தொடர் மௌனம் காரணமாக அந்தக் கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளுக்குத் தாவிக்கொண்டேயிருக்கிறார்கள். சசிகலாவின் எதிர்ப்பும் மிகுதியாக இருப்பதால் அநேகமாக அமமுக உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும், கட்சிகளின் தேர்தல் பணிகள் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு