Published:Updated:

அதிகரிக்கும் அரசுப் பேருந்து விபத்துகள்... என்னவாகும் போக்குவரத்துத் துறை?

விஷ்ணுராஜ் சௌ

2013 முதல் 2018 வரையிலான ஐந்தாண்டுகளில் மட்டும் அரசுப் பேருந்துகள்மூலம் நடைபெற்ற விபத்துகள் குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதில், ஐந்தாண்டுகளில் 6,172 அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

பேருந்துகள்
பேருந்துகள் ( விகடன் )

தமிழ்நாடு, இந்தியா முழுமைக்கும் பல சமூக நலத்திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. அந்த வரிசையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே முதல்முறையாகப் போக்குவரத்துத் துறையை அரசு எடுத்து நடத்திய மாநிலமும் தமிழ்நாடுதான். கடந்த மார்ச் 2018 கணக்கெடுப்பின்படி, தமிழக அரசின்கீழ் கிட்டத்தட்ட 22 ஆயிரம் பேருந்துகள் இயங்கிவருகின்றன. 'இது இந்தியாவின் பிரதமர்களைத் தீர்மானிக்கும் மாநிலம்' எனச் சொல்லப்படக்கூடிய உத்தரப்பிரதேச போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான பேருந்துகளின் எண்ணிக்கையைவிட, கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாகும்.

போக்குவரத்து ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்கள்
விகடன்

அதேபோல், இந்தியாவின் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக முன்னிறுத்தப்படும் குஜராத்தில் அரசுப் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கையே 14,743 தான். இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், தமிழகத்தின் போக்குவரத்துத் துறைக்கும் பெரும் பங்குள்ளது. தமிழகப் போக்குவரத்துத் துறையானது, அரசுடைமையாக்கப்பட்டதற்குப் பின்னால் பெரும் வரலாறு அமைந்துள்ளது. அதைச் சுருங்கச் சொல்வதென்றால்...

இரண்டாவது உலகப் போர் நிறைவடைந்திருந்த சமயம். இந்தியாவில் மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சியே தொடர்ந்துகொண்டிருந்தது. அந்த வேளையில், சென்னை மாகாணத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் பெரும்பாலும் மக்கள் நலனைக் கருத்தில்கொள்ளாமல், லாபநோக்கில் மட்டும் இயங்கிவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி 1944-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவானது, சென்னை மாகாணம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு தன்னுடைய அறிக்கையை 1946-ம் ஆண்டு சமர்ப்பித்தது.

பேருந்துகள்
பேருந்துகள்
விகடன்

இந்த அறிக்கையின் அடிப்படையில், சென்னை மாகாணத்தின் தலைநகரான சென்னையில் இயங்கிவந்த 239 தனியார் பேருந்துகள் தேசியமயமாக்கப்படுவதற்கான அரசாணை 24.03.1947 அன்று வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், சென்னையில் இயங்கிவந்த தனியார் பேருந்துகள் படிப்படியாக ஜூலை 1948-க்கு அரசுடைமையாக்கப்பட்டது. அதன்பிறகு, 1956-ல் மாநில மறுசீரமைப்பின் அடிப்படையில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்பிறகு, அரசுப் போக்குவரத்துச் சேவை என்ற பெயரில் இயங்கிவந்த போக்குவரத்துத் துறையானது, மாநிலப் போக்குவரத்துத் துறை என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது.

அதன்பிறகு, 1968-ம் ஆண்டு தமிழகப் போக்குவரத்துத் துறையின் செயல்திறன் பற்றி ஆராய, மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவானது, 'தமிழகப் போக்குவரத்துத் துறையை நேரடியாக அரசுத் துறையின்கீழ் கொண்டுவராமல் வரையறுக்கப்பட்ட கழகங்களின்கீழ் கொண்டுவருவதன் மூலம் சிறப்பாகச் செயல்பட முடியும்' எனச் சொல்ல... அதனடிப்படையில், முதலில் பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்
விகடன்

இந்நிலையில், தி.மு.க 1957-ம் ஆண்டு முதல்முறையாகச் சட்டமன்றம் நுழைந்ததிலிருந்து கூறிவந்த பேருந்து உச்ச வரம்பு சட்டத்தை, 1971-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி நிறைவேற்றினார் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. அதன்மூலம், ஒருவர் 15-க்கும் அதிகமான பேருந்துகள் வைத்திருப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்துவந்த காலத்தில் மாணவர்களுக்கு இலவசப் பேருந்துச் சீட்டுகள், முதியவர்களுக்கான இலவச பயணச் சீட்டுகள், நோயாளிகளின் பயணத்திற்கான இலவசப் போக்குவரத்து வசதிகள் எனப் பல சமூகநலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதேபோல், தமிழகத்தில் வளர்ச்சியைப் பரவலாக்கியதிலும் போக்குவரத்துத் துறைக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

ஆனால், தமிழகப் போக்குவரத்துத் துறையின் தற்போதைய நிலைதான் கேள்விக்குறியாக உள்ளது. ஒருபுறம், தொடரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டங்கள். மற்றொரு புறம், போக்குவரத்துத் துறையில் நஷ்டங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல், விபத்துக்குள்ளாகும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இதற்குத்தான் போக்குவரத்துத் துறை அரசுடைமையாக்கப்பட்டதா என்ற கேள்வியைப் பலரும் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து
விகடன்

ஆம் , இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் பல நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த 2018 ஜூன் 3-ம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் போக்குவரத்துத் துறைத் தொடர்பான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் 2013 முதல் 2018 வரையிலான ஐந்தாண்டுகளில் மட்டும் அரசுப் பேருந்துகளில் நடைபெற்றுள்ள விபத்துகள் குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதில் கடந்த ஐந்தாண்டுகளில் 6,172 அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளன எனவும், இந்த விபத்துகளின் காரணமாக 6,279 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விபத்து விகிதமானது கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்றுள்ள மொத்த விபத்து விகிதத்தில் 8 சதவிகிதமாகும்.

அதேபோல், விபத்துகளில் பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களுக்கான நிவாரணம் வழங்கும் முறையும் நடைமுறையில் உள்ளது. கடந்த 2011-12-ம் நிதியாண்டிலிருந்து 2018-19-ம் நிதியாண்டுவரை கிட்டத்தட்ட அரசுப் பேருந்து விபத்து தொடர்பான 9,710 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு, இதற்கு நிவாரணத் தொகையாக 29,312 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

``உங்களுக்கு த்ரில், எங்களுக்கு திகில்...'' - நந்தனம் விபத்து குறித்து பெற்றோரும் உளவியல் நிபுணரும்!

இந்தத் தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணமே, தரமான பேருந்துகள் இல்லாததுதான் எனக் குற்றம்சாட்டுகின்றனர், பொதுமக்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க... மறுபுறம், ஆண்டுதோறும் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான அறிவிப்புகள் மட்டும் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அதேவேளையில், பேருந்துகள் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் வாங்குவதற்காக விடப்படும் டெண்டர்களில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

போக்குவரத்துத் துறையின்மீது முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, அந்தத் துறையில் ஏற்பட்டுவரும் நஷ்டம். ஆனால், இங்குக் கவனிக்கப்பட வேண்டியது கடந்த 2017-18-ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 26 கோடி ரூபாயாக இருந்த போக்குவரத்துத் துறையின் வருமானம் தற்போது 29 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அரசுப் பேருந்து விபத்து
அரசுப் பேருந்து விபத்து
விகடன்

இதுதொடர்பாக தொ.மு.ச. பொருளாளர் நடராஜன், “இது மாதிரியான சமூகநலத் திட்டங்களில் அரசு இழப்பைச் சந்திப்பது என்பது இயல்பானதுதான். அதேவேளையில், இதன்மூலமாகச் சமூகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.

ஆனால், அரசும் அதிகாரிகளும் போக்குவரத்துத் துறையின் நஷ்டத்திற்கும், பேருந்துகளின் விபத்திற்கும் காரணங்களை மட்டும் சொல்லாமல், இயன்றவரையில் போக்குவரத்துத் துறையை லாபத்துக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இல்லையெனில், எந்த நோக்கத்துக்காகப் போக்குவரத்துத் துறையானது அரசுடைமையாக்கப்பட்டதோ, அதன் நோக்கம் நிறைவேறாமல் மக்கள் அரசுப் பேருந்துகளை புறக்கணிக்கத் தொடங்கிவிடுவார்கள்.