Published:Updated:

`இந்திரா காந்தியிடமே அவர் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்!’ - தஞ்சை ராமமூர்த்தியின் அரசியலும் வாழ்வும்

பதவி, பணம், அதிகாரம், புகழ், சாதி என எந்த ஒன்றுக்காகவும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காததனாலேயே, அரசியல் வாழ்வில் சரிவைச் சந்தித்தார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். ஆனால், அதைப் பற்றி இம்மி அளவும் தஞ்சை ராமமூர்த்தி கவலைப்பட்டதில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, காமராஜர், வி.பி.சிங் என மிகப்பெரும் அரசியல் ஆளுமைகளுடன் நேரடி நட்பில் இருந்த முதுபெரும் அரசியல் அறிஞர் தஞ்சை ராமமூர்த்தி நவம்பர் 12-ம் தேதி காலமானார். இவரின் இறப்புச் செய்தி ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் பேசுபொருளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நேர்மையின் சிகரமாக, சமரசமற்ற கொள்கைப் பற்றாளராக, எளிமையின் அடையாளமாக வாழ்ந்ததனாலயே, இவரின் மறைவுச் செய்தி, எந்த ஒரு சலனமும் சலசலப்பும் இல்லாமல் மாயமாகிப்போனதுதான் துரதிர்ஷ்டம். பதவி, பணம், அதிகாரம், புகழ், சாதி என எந்த ஒன்றுக்காகவும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காததனாலேயே, அரசியல் வாழ்வில் சரிவைச் சந்தித்தார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். ஆனால் அதைப் பற்றி இம்மி அளவும் தஞ்சை ராமமூர்த்தி கவலைப்பட்டதில்லை.

காமராஜர் 0-உடன் தஞ்சை ராமமூர்த்தி
காமராஜர் 0-உடன் தஞ்சை ராமமூர்த்தி

காமராஜர் இவர்மீது மிகுந்த பாசம்கொண்டிருந்தார். ஆனாலும்கூட காமராஜரோடு செல்லாமல், சோஷலிசக் கொள்கையின் மீதுகொண்ட தனது பற்றின் காரணமாக, இந்திரா காங்கிரஸில் பயணித்தார். 1970-களில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திரா காங்கிரஸின் மாநிலத் தலைவராக தஞ்சை ராமமூர்த்தி இருந்திருக்கிறார் என்றால், எவ்வளவு பெரிய அதிகாரத்தோடு இருந்திருப்பார் எனச் சொல்லத் தேவையில்லை.

ஒரு தனியார் வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காக, ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கே பரிந்துரைக் கடிதம் கொடுத்து, அதை நிறைவேற்றியும் கொடுத்தவர். நாடு முழுவதும் அப்போதைய பிரதமர் இந்திர காந்தி நெருக்கடிகால நிலையை நடைமுறைப்படுத்தியபோது, தஞ்சை ராமமூர்த்தி, தமிழ்நாட்டில் ஓர் ஆளுநருக்கு இணையாக, எழுதப்படாத அதிகாரத்தோடு வலம்வந்திருக்கிறார். ஆனால், அவர் அதை ரசிக்கவில்லை; நேசிக்கவும் இல்லை. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடமே `இது தவறான போக்கு’ என தஞ்சை ராமமூர்த்தி சுட்டிக்காட்டிப் பேசியதாக, அரசியல் விமர்சகர்கள் வியந்திருக்கிறார்கள். இவர் அரசியல் தலைவர் மட்டுமல்ல... மிகச்சிறந்த வழக்கறிஞர். எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்களை விடுவிக்க நீதிமன்றத்தில் வாதாடியவர். தஞ்சையின் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சாதியில் இவர் பிறந்திருந்தாலும்கூட, பட்டியலின மக்களின் நலனுக்காகப் பல வழக்குகளில் கட்டணம் இல்லாமல் வாதாடி உதவிபுரிந்திருக்கிறார்.

காமராஜர்
காமராஜர்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தஞ்சாவூர் சீனிவாசப்புரத்திலுள்ள இவரின் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களாக இருந்த வி.சி.சுக்லா, ரஜினி படேல், சந்திர ஜித் யாதவ் உள்ளிட்ட இன்னும் பலர் தஞ்சை ராமமூர்த்தி மீது மதிப்புகொண்டு, நெருக்கமான நட்பில் இருந்தார்கள். ஆனாலும் தனது குடும்பத்தினருக்காக, யாரிடமும் அவர் சிபாரிசுக்குச் சென்றதில்லை. அகில இந்திய அளவில் செல்வாக்குடன் வலம்வந்த தஞ்சை ராமமூர்த்தியின் குடும்பம், நடுத்தர வர்க்கத்துக்கான எளிய தோற்றத்துடனே இருக்கிறது. கவிஞர் கண்ணதாசன், தான் எழுதிய `நான் கண்ட அரசியல்’ நூலில், தஞ்சை ராமமூர்த்தியுடனான தனது அரசியல் பயணம் குறித்துப் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சை ராமமூர்த்தியுடன் நேரில் பழகியவர்கள், அவரைப் பற்றிய பெருமிதங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், ``தலைவராக, எங்களுக்கெல்லாம் மூத்த தோழராக விளங்கிய தஞ்சையாரின் இழப்பு பேரிழப்பு. இந்திய தேசிய காங்கிரஸில் அவரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. தமிழ் நாடறிந்த அரசியல் பிரமுகராக விளங்கினார். பெருந்தலைவர் காமராசருடன் நெருக்கமாகச் செயல்பட்டார். காங்கிரஸ் 1969-ல் பிளவுபட்டபோது, இந்திரா காந்தி தலைமைகொண்ட இந்திரா காங்கிரஸில் இணைந்து அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவராக புயல்வேகப் பரப்புரையில் ஈடுபட்டார்.

`இந்திரா காந்தியிடமே அவர் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்!’ - தஞ்சை ராமமூர்த்தியின் அரசியலும் வாழ்வும்

இளமையில் கல்லூரி விரிவுரையாளராக இருந்து, பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று, வழக்கறிஞர் பட்டம் பெற்று, முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்தார். நான் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டபோது, எங்கள் தலைவர் தோழர் ந.வெங்கடாசலம் அவர்களும், தஞ்சையார் அவர்களும் நெருக்கமான தோழர்களாக விளங்கினார்கள். அவர் மூலம்தான் தஞ்சையார் எனக்கு அறிமுகம். தஞ்சையார் இளமையிலேயே காந்தியம், மார்க்சியம் கற்றவர். சோஷியலிசத்தை நேசித்தவர். எங்களது அரசியல் வழக்குகள் பலவற்றைக் கட்டணமின்றி தஞ்சையார் நடத்தியிருக்கிறார். மிகவும் திறமையாக வாதாடுவார். 1975-ல் இந்திரா காந்தி அம்மையார் நெருக்கடி நிலையைச் செயல்படுத்தி, ஜனநாயக உரிமைகளைப் பறித்தார்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் மீது காவல்துறை போட்ட வழக்குகளையெல்லாம் கட்டணமின்றி வாதாடி, பிணை எடுத்துக் கொடுத்தார். அதில், தன் கட்சிக் கொள்கைக்கு முரண்பாடாயிற்றே என்று பார்க்காமல், நெருக்கடிநிலையை எதிர்த்துப் போராடிய எங்களுக்காக வழக்கு நடத்தினார். காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய அகில இந்தியக் கட்சிகளில் அவர் முக்கியப் பொறுப்பு வகித்தாலும், தமிழர்நல உரிமைகளில் அக்கறையோடு செயல்பட்டார். பொதுமேடைகளில் வெளிப்படையாகவே தமிழ்த் தேசியத்தை ஆதரித்துப் பேசினார். பழ.நெடுமாறனோடு இணைந்து செயல்பட்டார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், ``1968-ம் ஆண்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தஞ்சையாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த தருணம்... பெருந்தலைவர் காமராஜர் இங்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். ஆனாலும்கூட 1969-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து காமராஜர் தனியாகப் பிரிந்து சென்று ஸ்தாபன காங்கிரஸைத் தொடங்கியபோது, அவருடன் தஞ்சை ராமமூர்த்தி செல்லவில்லை. காரணம், சோஷலிசக் கொள்கையின் மீது கொண்ட பற்றின் காரணமாக காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்தார். பிரதமராக இருந்த இந்திரா காந்தி, வங்கிகளை தேசியமயமாக்கி சோஷலிசக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியதாலேயே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காமராஜர் காங்கிரஸிலிருந்து வெளியேறியதால், அவருடன் தஞ்சையார் செல்லவில்லை.

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன்

இந்தியாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர், தன்னை வந்து தஞ்சை மருத்துவமனையில் நலம் விசாரித்தாரே என்பதற்காக தஞ்சையாரின் மனம் சலனப்படவில்லை. திருப்பனந்தாள் பகுதியில் வசித்த, 50-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர்கள்மீது ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். அவர்களுக்காக நீதிமன்றத்தில் தஞ்சையார் பிணை கேட்டபோது, `திருச்சியில் ஒரு மாதம் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும்’ என நீதிபதி சொன்னபோது `பிணையே வேண்டாம். நாங்கள் சிறையிலேயே இருந்துவிடுகிறோம்’ என அந்த மாணவர்கள் மறுத்துவிட்டார்கள். காரணம், அவர்கள் ஏழ்மையானவர்கள். திருச்சியில் ஒரு மாதம் தங்கியிருக்கப் பண வசதி இல்லை. தஞ்சாவூரில் தங்கியிருந்து இங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்து போட தஞ்சையார் அனுமதி கேட்டார். 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தஞ்சையிலுள்ள அவரின் வீட்டிலேயே ஒரு மாதம் தங்கியிருந்தார்கள்.

திருவோணம் ஊராட்சித் தலைவராக இருந்த முத்து தங்கப்பா என்பவர், பட்டியலினச் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்ததால், அவரை நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துவிட்டார்கள். அந்த வழக்கில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த கோதண்டராமன், லெனின், தியாகு உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைசெய்யப்பட்ட முத்து தங்கப்பா தன்னுடைய உறவினர் என்றபோதிலும்கூட தஞ்சை ராமமூர்த்தி, கோதண்டராமன், லெனின், தியாகு உள்ளிட்டோருக்காக நீதிமன்றத்தில் வாதாடினார்’ ’ எனப் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

எழுத்தாளர் அ.மார்க்ஸ், ``இந்தப் பகுதியில் முக்கியமான மூத்த வழக்குரைஞராக இருந்த தஞ்சையார், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்காடினார். நானறிந்தவரை அரசியலில் இருந்துகொண்டு, மிக அதிகமாக ஆழ்ந்து முக்கிய நூல்களைப் படித்தவர் அவர். மிக ஆழமான பேச்சுத்திறன் உடையவர். வெட்டி அடுக்குமொழிகளெல்லாம் இன்றி, கருத்தாழத்துடன் பேசுபவர். நான் அப்போதுதான் எழுதத் தொடங்கியிருந்தேன். நானும் பெ.மணியரசனும் எழுதிய `பாரதி’ நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய விரிவான உரை மறக்க இயலாதது.

தஞ்சை ராமமூர்த்தி
தஞ்சை ராமமூர்த்தி

தஞ்சையில் செயல்பட்டுவந்த கைலாசபதி இலக்கிய வட்டத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும், அவர் பேசினாலும் பேசாவிட்டாலும் கலந்துகொண்டவர். அவர் பேசாத கூட்டத்திலும் நான் அவரைக் கருத்து சொல்ல அழைப்பதுண்டு. அவர் உதிர்த்த கருத்துகளை இப்போது நான் சற்றே கண்ணீர்மல்க நினைத்துப் பார்க்கிறேன்’’ என உருக்கமாகத் தெரிவித்தார்.

முதுபெரும் அரசியல் அறிஞராக, அனைத்து மக்களுக்குமான வழக்கறிஞராக, இலக்கிய ஆளுமையாக வலம்வந்த தஞ்சையாருக்கு விகடன் புகழஞ்சலி செலுத்துகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு