Published:Updated:

தஞ்சாவூர்: `எளிமையே உயர்த்தியது!’ - அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் உருகும் தொகுதி மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு ( ம.அரவிந்த் )

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, `இது உங்க எளிமைக்கு கிடைத்த பரிசு’ என வாழ்த்தினார். அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராகத் தன் பயணத்தை தொடங்கியவர், ஒன்றியச் செயலாலர், எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர், அமைச்சர் என படிப்படியாக வளர்ந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்த சம்பவம் தஞ்சாவூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. `எளிமையே அவரை உயரத்துக்குக் கொண்டுசென்றது. இப்போது எல்லோரையும் விட்டுவிட்டு எட்டாத உயரத்திற்கு சென்று விட்டதாக’ மக்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியைச் சேர்ந்தவர் வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி துரைக்கண்ணு நேற்றிரவு உயிரிழந்தார். கடந்த சில தினங்களாகவே துரைக்கண்ணுவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

கொரோனா தொற்று; உடலுறுப்புகள் பாதிப்பு! - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் #NowAtVikatan

இதையடுத்து தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க-வினர் துரைகண்ணு, பூரண குணமாக வேண்டும் என கோயில்களில் யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நிலையில் துரைக்கண்ணு உயிரிழந்த சம்பவம், அ.தி.மு.கவினரை மட்டுமின்றி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முதல்வருடன் அமைச்சர் துரைக்கண்ணு
முதல்வருடன் அமைச்சர் துரைக்கண்ணு

சென்னையிலிருந்து எடுத்துவரப்படும் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் ராஜகிரியில் உள்ள வன்னியடியில் அடக்கம் செய்யப்பட உள்ளது. துரைக்கண்ணுவின் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எளிமையானவர், அமைச்சருக்கே உரிய எந்த பந்தாவும் இல்லாமல் பழகியவர் என்பதால், இவருடைய இழப்பு கட்சி பாகுபாடின்றி பலரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாபநாசம் அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். ``அரசியல்வாதிகளுக்கு உரிய எந்த பந்தாவும் அண்ணன் அமைச்சர் துரைக்கண்ணுவிடம் இருக்காது. எல்லோரையும் அரவணைத்துச் சென்றவர். அதனால்தான் தொடர்ச்சியாக மூன்று முறை அவர், பாபநாசம் தொகுதியில் வாகை சூடினார். மூன்றாவது முறையாக 2016-ல் வெற்றி பெற்ற பிறகு முத்தாய்ப்பாக வேளாண்மைத் துறை அமைச்சராக பதவியேற்றார்.

ஜெயலலிதாவுடன்
ஜெயலலிதாவுடன்

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, `இது உங்க எளிமைக்கு கிடைத்த பரிசு’ என வாழ்த்தினார். அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராகத் தன் பயணத்தை தொடங்கியவர், ஒன்றியச் செயலாலர், எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர், அமைச்சர் என படிப்படியாக வளர்ந்தார்.

தொகுதி மக்களுக்கு எதாவது பிரச்னை என்றால் துடிதுடித்து விடுவார். யாராவது கஷ்டபடுகிறார்கள் என கேள்விப்பட்டால், தாமாகச் சென்று அவர்களுக்கு உதவுவார். சில மாதங்களுக்கு முன்பு பாபநாசம் பகுதியில் 5 வீடுகள் விபத்தொன்றில் தீக்கிரையாயின. சென்னையில் இருந்த துரைக்கண்ணுவிடம் இந்தத் தகவல் சொல்லப்பட்டது.

`தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைராசிக்காரர்; முகராசிக்காரர்!’ - அமைச்சர் துரைக்கண்ணு

அடுத்த நாள் சென்னையிலிருந்து வந்தவர், தன் வீட்டுக்குக் கூட போகாமல் நேராக வீடுகளை இழந்து பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இதேபோல் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவரது மகன், ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். `எங்களோட எதிர்காலமே இருண்டு விட்டது’ என அந்தப் பெற்றோர் கதறினர்.

கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாமல் உடனடியாக அவர்கள் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் துரைக்கண்ணு, இறந்தவருடைய தந்தையின் கரங்களைப் பற்றி கொண்டு, `கவலைப்படாதீங்க, உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் நான் செய்றேன்’ என நம்பிக்கை கொடுத்து கையில் ரூ 50,000 பணம் தந்து ஆறுதல் கூறினார்.

இராஜகிரி
இராஜகிரி

பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தன் மகனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த செய்தி இவரின் கவனத்திற்கு வந்தது. உடனே, தன் இளைய மகன் அய்யப்பன் மூலமாக விஜய் ரசிகரின் வங்கி கணக்கில் ரூ 50,000 செலுத்த வைத்தார்.

இதனை வெளியே சொல்ல வேண்டாம் எனவும் தன் மகன் அய்யப்பனிடம் கூறிவிட்டார். கொஞ்ச நாள் கழித்தே தனக்கு உதவியது அமைச்சர் துரைக்கண்ணு என அந்த ஏழைத் தந்தைக்கு தெரிய வர நெகிழ்ந்துவிட்டார். இதுபோல் மருத்துவ மாணவி ஒருவருக்கும் தன்னால் முடிந்த சிறிய உதவியை செய்தார்.

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

இது போல் சத்தமில்லாமல் பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அவரைப் பொறுத்தவரை, தான் உதவியதை எந்த இடத்திலும் தாமாக வெளியே சொன்னதே இல்லை. தொகுதிக்குள் வரும் போதெல்லாம் அவருடைய காரின் சைரன் எப்போதும் ஆப் செய்யப்பட்டிருக்கும். செக்யூரிட்டிகள் கேட்டால், `தொகுதி மக்களால்தான், நான் இன்னைக்கு இந்த காரில் போறேன். அவங்களுக்கு எந்த இடைஞ்சலையும் தரக்கூடாது’ என்பார்.

Vikatan

ஒரு சிலர் அவரைத் தவறாக புரிந்து கொண்டு கட்சியில் அவருக்கு எதிராகச் செயல்பட்ட சம்பவங்களும் நடந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `துரைகண்ணுவின் மறைவு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு’ என்றார். இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுட்டு செல்வார் என நாங்க கனவிலும் நினைக்கலை. அவருடைய எளிமையையே அவரை உயர்த்தி அழகு பார்த்தது. இப்போது எல்லோரையும் தவிக்க விட்டுட்டு எட்டாத உயரத்துக்கு சென்று விட்டார். அவருடைய மறைவு கட்சிக்கு மட்டுமல்ல எங்க தொகுதிக்கே பெரிய இழப்பு’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு