தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் ஒருவர், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வரும் தன் தம்பி குறித்த விவரங்களை வேட்புமனுவில் மறைத்து விட்டதாகவும், அதனால் தன்னியல்பாகவே கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதாக கூறி குறிப்பிட்ட அந்த கவுன்சிலருக்கு மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கவுன்சிலர் பதவியை இழந்ததால், அந்த கவுன்சிலர் முதல் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூறப்படுவது தஞ்சை திமுக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகம். இவரின் அக்கா மகன் அண்ணா.பிரகாஷ் தஞ்சாவூர் மாநகராட்சி 16-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்து வந்தார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்ககூடாது. மாநகராட்சி மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய எந்த வேலையும் செய்திருக்க கூடாது என்பது தேர்தல் விதிமுறையில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅண்ணா.பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம்பிரசாத் அரசு ஒப்பந்தகாரராக இருந்து வருகிறார். அவர் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். அண்ணா.பிரகாஷ் தன்னுடைய வேட்புமனுவில் அதனை மறைத்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்தார். இது குறித்து விவரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டவரும், மாநகராட்சி ஆணையருமான சரவணக்குமாருக்கு தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அண்ணா.பிரகாஷ் மற்றும் அவரின் தம்பி ராம்பிரசாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்தியளிக் காததால் அண்ணா.பிரகாஷ் தன்னியல்பாகவே கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியினை இழந்து விட்டதாக கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் ஒருவர் தன் பதவியை இழந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்க கூடாது. அதே போல் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிற கடைகளை டெண்டர் எடுத்து நடத்தக் கூடாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநாகராட்சி சார்பில் வருமானம் ஈட்டக்கூடிய எந்த ஒரு வேலையும் செய்திருக்க கூடாது.

இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டியது வேட்பாளராக இருப்பவரின் ரத்த சொந்தங்களும் இது போன்ற லாபம் ஈட்டும் எந்த பணியினையும் செய்யக் கூடாது. செய்திருக்கவும் கூடாது என்பது தேர்தல் விதிமுறையில் உள்ளது. அண்ணா.பிரகாஷின் தம்பி ராம்பிரசாத், அவரின் தாய்மாமாவும் ,எம்.எல்.ஏவுமான டி.கே.ஜி நீலமேகத்தின் மூலம் அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். அத்துடன் அண்ணா.பிரகாஷுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இதனை தனது வேட்புமனுவில் அண்ணா.பிரகாஷ் மறைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் மறைத்த விவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ராம்பிரசாத் நேரில் ஆஜாராகி தான் வேறு முகவரியில் வசிப்பதாக விளக்கம் அளித்தார். ஆனால் அரசு ஒப்பந்த பணிகளுக்காக தான் கொடுத்துள்ள சால்வென்ஸில் அண்ணா. பிரகாஷ் வசிக்கும் வீட்டின் முகவரியையே கொடுத்துள்ளார்.

இரண்டு பேரும் ஒரே வீட்டில் வசிப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் அண்ணா.பிரகாஷ் தன்னியல்பாகவே கவுன்சிலராக பதவி வகிப்பதற்கு தகுதியை இழந்து விடுகிறார். இதனை அவரிடம், `கவுன்சிலராக பதவி வகிப்பதற்கான தகுதி உங்களுக்கு இல்லை அதனை நீங்கள் இழந்து விட்டீர்கள்’ என குறிப்பிட்டு அண்ணா.பிரகாஷுக்கு கடிதம் அனுப்பி விட்டோம். அத்துடன் தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் வரும் 30ம் தேதி நடக்க இருக்கிறது. கவுன்சிலர் பதவியை இழந்து விட்ட அண்ணா. பிரகாஷ் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது” எனவும் தெரிவித்தனர்.
திமுக வட்டத்தில் சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த சண்.ராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி பதவி வகித்து வருகின்றனர். இதற்காக நடைபெற்ற மறைமுக தேர்தலில் தலைமை அறிவித்த சண்.ராம நாதனுக்கு எதிராக டி.கே.ஜி நீலமேகத்தின் ஆதரவாளர்கள் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முதல் நாள் இரவு 10வது வார்டு திமுக கவுன்சிலரான தொழில் அதிபர் பாலசுப்ரமணியன், தலைமையின் உத்தரவை மீறி மேயர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து தங்கள் ஆதரவு கவுன்சிலர்களுக்கு ரூ 10 லட்சம் வீதம் பணம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இதன் பின்னணியில் நீலமேகம் இருப்பதாகவும் அப்போது தகவல் பரவியது.

இந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் வரை செல்ல உடனடியாக அவர் மாவட்ட செயலாளரான துரை. சந்திரசேகரனை தொடர்பு கொண்டு தலைமை அறிவித்த வேட்பாளர் வெற்றிபெற வில்லை என்றால் பல பேரோட பதவி பறிக்கப்படுகின்ற நிலை ஏற்படும் என எச்சரித்தார். இதனை தொடர்ந்து பாலசுப்ரமணியனை டி.கே.ஜி நீலமேகம் சமாதானம் செய்து போட்டியிலிருந்து பின் வாங்க செய்தாராம். மேயர் தேர்தல் நாளிலும் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் அதனை ஆணையர் சரவணக்குமார் முறியடித்தாக பேசப்பட்டது.
இந்த நிலையிலும் மூன்று பேர் சண்.ராமநாதனுக்கு எதிராக அதிமுக மேயர் வேட்பாளரான மணிகண்டனுக்கு ஓட்டுப் போட்டனர். அதே நேரத்தில் மதியம் நடைபெற்ற துணை மேயர் தேர்தலில் அந்த மூன்று பேரும் தலைமை அறிவித்த டாக்டர் அஞ்சுகம் பூபதிக்கு வாக்களித்தனர். சண்.ராமநாதனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் நீலமேகத்தின் ஆதரவாளர்கள் என கட்சியினர் பேசிக்கொணடனர்.

இந்த விவகாரம் திமுக தலைமை வரை சென்றது. இந்நிலையில் தான் அண்ணா.பிரகாஷ் விவகாரம் கையில் எடுக்கப்பட்டதுடன் தன்னியல்பாகவே கவுன்சிலராக பதவி வகிப்பதற்கான தகுதியை இழந்து விட்டதாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அண்ணா.பிரகாஷும் கட்சியின் தலைமையிடம் இது குறித்து பேச முயன்றுள்ளார். மூன்று பேர் ஓட்டு மாற்றி போட்ட விவகாரத்தால் அவரது கருத்து எடுபடவில்லை” என தெரிகிறது என்றனர்.

அண்ணா.பிரகாஷிடம் பேசினோம், ``நான் கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதாக மாநகாராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அந்த நோட்டீஸ் என் கைக்கு இன்னும் கிடைக்கவில்லை. என் தம்பி ராம்பிரசாத் உரிய விளக்கம் கொடுத்தும் அதனை ஆணையர் சரவணக்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக என்னை கவுன்சிலர் பதவியிருந்து நீக்குவதுடன் என் தம்பியின் ஒப்பந்த வேலையை ரத்து செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். இதனை நான் நீதிமன்றத்திற்கு சென்று சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்றார். இது குறித்து ஆணையர் சரவணக்குமாரிடம் கேட்டதற்கு அவர் கருத்து கூற மறுத்து விட்டார்.