Published:Updated:

`அ.தி.மு.க-வினருக்கு மட்டுமே அனுமதியா?!' - தன்னார்வலர்கள் விவகாரத்தில் கொதிக்கும் தஞ்சை தி.மு.க

கொரோனா பணியில் தன்னார்வலர்கள்
கொரோனா பணியில் தன்னார்வலர்கள் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூரில் கொரோனா பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களை பெரும்பாலும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கொரோனா தடுப்புப் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளைச் செய்வதற்கு ஆளும்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

சண்.ராமநாதன்
சண்.ராமநாதன்

கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்கள் நேரடியாக ஈடுபடக் கூடாது. உணவுப் பொட்டலங்கள் கொடுத்தால் கூட அரசின் மூலமாகவே செய்ய வேண்டும் என ஆளும் அ.தி.மு.க அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. இந்த நிலையில், தஞ்சாவூரில் கொரோனா பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களைப் பெரும்பாலும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து தஞ்சை தி.மு.க-வின் இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் என்பவரிடம் பேசினோம், ``கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சமூக விலகலைக் கடைப்பிடிப்பது, கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒவ்வொரு பகுதி மக்களும் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல பணிகளைத் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

உதவும் பணியில் தி.மு.கவினர்
உதவும் பணியில் தி.மு.கவினர்

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் நகர அ.தி.மு.க-வினராகவே உள்ளனர். மற்ற கட்சியினருக்கு இதில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கொரோனா முடிவுக்கு வந்த பிறகு நடைபெற இருக்கும் நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் தாங்கள் செய்வதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இது போன்ற செயலில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் துணை போகின்றனர்.

வருமானத்தை இழந்ததால் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அரசு ரூ.1,000 நிவாரணமாக அறிவித்ததுடன், ரேஷன் கடைகள் மூலம் அந்தப் பணம் கொடுக்கப்பட்டது. இதற்காகப் பயனாளிகள் ஒரே நேரத்தில் கூடாமல் இருக்க அந்தந்தப் பகுதிகளில் டோக்கன் வழங்கப்பட்டது. இந்தப் பணியை அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே செய்ததுடன் பல இடங்களில் ரேஷன் கடைகளில் இருந்துகொண்டு பணத்தையும் அவர்களே வழங்கியது அனைவரும் அறிந்ததே.

பணியில் தன்னார்வலர்கள்
பணியில் தன்னார்வலர்கள்

இதேபோல் தற்போது தஞ்சாவூர் பகுதியில் நகர, கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் அ.தி.மு.க-வினராகவே உள்ளனர். இதில் கட்சிப் பாகுபாடின்றி தன்னலம் பாராமல் மக்களுக்குப் பணி செய்யத் தயாராக உள்ள அனைவரையும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இதிலும் ஆளும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ``ரூ.1,000 பணம் கொடுக்கும்போது அ.தி.மு.க-வினரின் தலையீடு இருந்தது உண்மைதான். ஆனால், தன்னார்வ பணிகளில் ஈடுபடுவதற்கு அ.தி.மு.க-வினருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பது தவறான தகவல். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் இதைக் கிளப்பி விடுகின்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு