Published:Updated:

துரைக்கண்ணு மகனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்? - கைது நாடகம்; ஜாமீனில் வந்த 5 பேர்!

துரைக்கண்ணு
துரைக்கண்ணு ( ம.அரவிந்த் )

துரைக்கண்ணு மற்றும் அய்யப்பனிடம் நெருக்கமாக இருந்த பிரபல ரெளடி பெரியவன் முருகன், பாலகுரு, வேதா செல்வம், அய்யர் என்கிற சக்திவேல், சுரேஷ்குமார் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்குப் பிறகு, அவரது பினாமிகள் என்று சொல்லப்பட்ட ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர். துரைக்கண்ணு கொடுத்துவைத்திருந்த பணத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்ததுடன், குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான பணிகளையும் போலீஸார் முன்னெடுத்தனர். இந்தநிலையில் ஐந்து பேரும் நிபந்தனை ஜாமினீல் வெளியே வந்திருப்பது தஞ்சாவூர் அ.தி.மு.க-வில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

துரைக்கண்ணு மகன் அய்யப்பன்
துரைக்கண்ணு மகன் அய்யப்பன்
ம.அரவிந்த்

அ.தி.மு.க அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்தவர் துரைக்கண்ணு. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான ராஜகிரிக்கு எடுத்துவரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

இதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில் துரைக்கண்ணு வகித்தவந்த வேளாண்மைத்துறைரீதியாக வர வேண்டிய கமிஷன் பணம் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் செலவுக்காக ஆட்சி மேலிடம் அவரிடம் கொடுத்துவைத்திருந்த பணம் ஆகியவை துரைக்கண்ணுவிடம் இருந்ததாகக் கூறப்பட்டது.

பெரியவன் முருகன்
பெரியவன் முருகன்

திடீரென அவர் மறைந்ததால், அந்தப் பணம் குறித்து துரைக்கண்ணுவின் இளைய மகன் அய்யப்பன், அவருடைய மருமகன் ஆகியோரிடம் ஆட்சி மேலிடம் கேட்டது. ஆனால், `பணம் குறித்த எந்தத் தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை’ என அய்யப்பன் கைவிரித்துவிட்டார். இதனால் முதல்வர் தரப்பு கடும் கோபமடைந்ததாகத் தகவல் வெளியானது.

இந்தநிலையில், மேலிட உத்தரவின் பேரில் போலீஸார் அய்யப்பனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். அதைத் தொடர்ந்து துரைக்கண்ணு மற்றும் அய்யப்பனிடம் நெருக்கமாக இருந்த பிரபல ரெளடி பெரியவன் முருகன், பாலகுரு, வேதா செல்வம், அய்யர் என்கிற சக்திவேல், அ.ம.மு.க பிரமுகரான வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆகிய ஐந்து பேரை ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், போலீஸாரை மிரட்டியதாகவும் கைதுசெய்தனர்.

பாலகுரு
பாலகுரு

அவர்கள் ஐந்து பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. இதில் பெரியவன் முருகன், வேதா செல்வம் ஆகியோர் துரைக்கண்ணுவின் பினாமிகளாக இருந்ததாகச் சொல்கிறார்கள். அத்துடன் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கிக்குவிப்பதற்கும், பல்வேறு உதவிகளை வெளியே தெரியாமல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

துரைக்கண்ணு, ஆட்சி மேலிடம் தன்னிடம் கொடுத்த பணத்தை இவர்கள் வசம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கச் சொன்னதாகவும், அந்தப் பணத்தை கைப்பற்றவுமே கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், இதை அய்யப்பன் முற்றிலுமாக மறுத்தார்.

தஞ்சை: துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது; 5 பேர் பினாமியா? - பிரமிக்கவைக்கும் பின்னணி!

போலீஸ் உயரதிகாரிகள் தரப்பும், `டெல்டா மாவட்டத்தில் ரெளடிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரவே கைது நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன’ என விளக்கமளித்தனர். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு வழக்கறிஞர் சுரேஷ்குமார் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து பெரியவன் முருகன் உள்ளிட்ட நான்கு பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். அய்யப்பனிடமிருந்த பணத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநிலங்களவை உறுப்பினரான வைத்திலிங்கம் மேற்கொண்டார். இதில் முக்கால்வாசிப் பணத்தைக் கைப்பற்றிவிட்டனர்.

அய்யர் என்கிற சக்திவேல்
அய்யர் என்கிற சக்திவேல்

அதன் பிறகே மேலிடத்தின் அழுத்தம் காரணமாக ஜாமீனில் வெளியேவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி, பரபரப்பான பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன. இது குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர்,``அய்யப்பன், பெரியவன் முருகனிடம் நெருக்கமாக இருந்துவந்தார். வேளாண்மைத்துறைரீதியான பணி நியமனம், டிரான்ஸ்ஃபர் என எந்த விவகாரமாக இருந்தாலும், `அய்யப்பனைப் பாருங்கன்’னு துரைக்கண்ணு சொல்லிடுவார்.

அய்யப்பன்தான் அனைத்தையும் கவனிச்சுக்கிட்டார். அதேநேரத்தில் துரைக்கண்ணு கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பினாமி பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்தார். இந்த ஐந்து பேரும் அதற்கு உதவியாக இருந்ததுடன், பினாமிகளாகவும் இருந்தனர்.

வேதா செல்வம்
வேதா செல்வம்

இந்தநிலையில், தேர்தல் செலவுக்காக கட்சித் தலைமை கொடுத்த ஒரு பெரும் தொகையும், துறைரீதியாக வர வேண்டிய கமிஷன் பணமும் என சுமார் ரூ.300 கோடி பணம் துரைக்கண்ணு வசமிருந்தது. இதை அவர், தனக்கு நெருக்கமான நபர்களான பெரியவன் முருகன், வேதா செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் சிலரிடம் கொடுத்துவைத்திருந்தார். இந்த விவகாரங்கள் அனைத்தும் அய்யப்பனுக்குத் தெரியும்.

இதையடுத்து துரைக்கண்ணு மறைந்துவிட அய்யப்பனிடம் பணத்தைக் கேட்டனர். அவர், எனக்குத் தெரியாது என ஒரேயடியாகக் கைவிரிக்க, கைதுப் படலத்தைத் தொடங்கியது ஆட்சி மேலிடம். பணத்தைத் தரவில்லையென்றால் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படும் எனக் கூற, அய்யப்பன் மீதான பிடியும் இறுகியது.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

பெரியவன் முருகன் உள்ளிட்டவர்களும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவித்தனர். அதன் பிறகு அய்யப்பன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்தார். இதுவரை முக்கால்வாசிப் பணம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. மீதிப் பணத்தையும் `நீங்கதான் பாபநாசம் தொகுதி வேட்பாளர்’ எனக் கூறியே கைப்பற்றப்பட்டுவருகிறது.

பணம் கைக்கு வந்த பிறகு ஐந்து பேர் மீதான பிடி தளர்ந்தது. இதைக் காரணமாகவைத்தே சுரேஷ்குமார் தவிர்த்து பெரியவன் முருகன் உள்ளிட்ட நான்கு பேரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான பணிகள் நடைபெற்றன. அதற்கான ஃபைலை உயரதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்காக போலீஸ் உயரதிகாரிகள் காத்திருந்தனர்.

தஞ்சை: `வரவு, செலவுக் கணக்கு; கைவிரித்த மகன்?’ - துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது பின்னணி

இதற்கிடையில் ஒரு வாரத்துக்கு முன்பே சுரேஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். அதன் பிறகு மற்ற நான்கு பேரையும் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஃபைல் கையெழுத்து ஆகாமலேயே கிடப்பில் போடப்பட்டது. போலீஸார் எவ்வளவோ முயன்றும் ஒருகட்டத்துக்கு மேல் நகரவில்லை.

மேலிடத்துக்கு நெருக்கமான சிலர் மற்றும் அமைச்சர் ஒருவரும் இவர்களை ஜாமீனில் வெளியே விடுவதற்காக முயன்றதாகத் தெரிகிறது. இந்தநிலையில் மற்ற நான்கு பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். பணத்தைக் கைப்பற்றவே இந்தக் கைது நாடகம் நடப்பதாக அப்போது பேசப்பட்டது. பணம் கைக்கு வந்த பிறகு அவர்களை விட்டுவிட்டதால், தற்போது அது உண்மையாகிவிட்டது.

துரைக்கண்ணு - அய்யப்பன்
துரைக்கண்ணு - அய்யப்பன்

ஆனாலும், பெரியவன் முருகன் உள்ளிட்ட நான்கு பேரின் செயல்களை பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் கண்காணித்துவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும், சிலர் வழக்கு பதியும்போதே பணம் கிடைத்த பிறகு விட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சரியான பிரிவுகளில் வழக்கு பதியவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதனால் அய்யப்பன் மெல்ல சகஜநிலைக்கு மாறிக்கொண்டிருப்பதுடன், தொகுதியைக் கைப்பற்றும் ஆசையில் வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆனால், அவரிடம் இருக்கும் மீதிப் பணத்தைக் கைப்பற்றியே பிறகே என்ன நடக்கும் என்பது தெரியும்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு