Published:Updated:

`மனைவிக்கு சீட் கொடுக்கல; பா.ஜ.க-தான் பெஸ்ட்!' - தஞ்சையை அதிரவைத்த உடன்பிறப்பு

ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் முரளியைபோல் இன்னும் சில ஒன்றியச் செயலாளர்கள் தங்களது மனைவிக்கு சீட் கேட்டனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் தமிழகத்தின் 27 மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், தஞ்சாவூர் தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர், அதிலிருந்து விலகி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்திருப்பது தஞ்சை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முரளி
முரளி

தி.மு.க-வில் தஞ்சாவூர் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் முரளிதரன். இவர், மேலவெளி பஞ்சாயத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். கட்சி நிகழ்ச்சிகளுக்காக ஸ்டாலின் தஞ்சை வரும்போதெல்லாம் அருகில் இருந்து அனைத்துப் பணிகளையும் செய்வார். இந்தநிலையில் அவர் தி.மு.க-விலிருந்து விலகி பி.ஜே.பி-யில் சேர்ந்திருப்பது தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தி.மு.க வட்டத்தில் விசாரித்தோம், ``முரளிதரன், தனது மனைவிக்கு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு சீட் கேட்டு கட்சியில் விருப்பமனு அளித்திருந்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் முரளியைபோல் இன்னும் சில ஒன்றியச் செயலாளர்கள் தங்களது மனைவிக்கு சீட் கேட்டனர். கட்சி மேலிடம், `ஏற்கெனவே மகளிருக்கு 55 சதவிகித இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் யாரும் பெண்களை நிறுத்தக்கூடாது' என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

முரளிதரன்
முரளிதரன்

இதைத் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகர் ஒன்றியச் செயலாளர்களிடம் எடுத்துக் கூறியதையடுத்து, அவர்களே போட்டியிட மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து முரளி மட்டும், `என் மனைவி போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்' என சந்திரசேகரிடம் கேட்டு வந்தார். `தலைமையின் முடிவுதான் எல்லோருக்கும். உங்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?' என துரை.சந்திரசேகர் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து கோபமாகச் சென்ற அவர் சென்னைக்குச் சென்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பி.ஜே.பி-யில் சேர்ந்து விட்டார். தி.மு.க-விற்கு வருவதற்குமுன் சசிகலா அண்ணன் மகன் மகாதேவனின் ஆதரவாளராக இருந்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன் உடன் முரளி
பொன்.ராதாகிருஷ்ணன் உடன் முரளி

அதன்பிறகு தி.மு.க-வில் இணைந்தார் அவர் கட்சிக்கு வந்து சுமார் நான்கு வருடங்கள்தான் இருக்கும். பின்னர் டி.ஆர்.பாலு ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டு செயல்பட்டு வந்தார். கட்சிக்காக உழைத்த பலரை விட்டுவிட்டு முரளிக்கு ஒன்றியச் செயலாளர் பதவி கொடுத்தார் சந்திரசேகர். இவர் மீது காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.

`தி.மு.க மாவட்டச் செயலாளர்  அவமானப்படுத்தினார்!' - தஞ்சையில் தனித்துப் போட்டியிடும் சி.பி.எம்

மாவட்டச் செயலாளர் சந்திரசேகரிடம் இவர் மீதுள்ள புகார்கள் பற்றிக் கூறியும் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு செய்தும் அவர் மாற்றுக் கட்சிக்குச் சென்று விட்டார். அதனால் எந்த இழப்பும் எங்களுக்கு இல்லை. கட்சிக்காக உயிரைக் கொடுத்து உழைத்தவர்கள் பலர் இப்போதும் அதே நிலையில் இருக்கின்றனர்.

ஸ்டாலினுடன் மேடையில்
ஸ்டாலினுடன் மேடையில்

தஞ்சை மாவட்டத்தில் உள்கட்சிப் பூசலோடு உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது தி.மு.க. அத்துடன் புதியவர்களுக்கு வாய்ப்பு என்பது மறுக்கப்பட்டு போட்டியிட்டவர்களே போட்டியிடுவதால் கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இவை தலைமையின் கவனத்துக்குச் சென்றதா எனத் தெரியவில்லை'' என வேதனையுடன் தெரிவித்தனர்.

பா.ஜ.க-வில் இணைந்தது குறித்து முரளிதரனிடம் விளக்கம் கேட்பதற்காகத் தொடர்பு கொண்டோம். அவர், நமது அழைப்பை ஏற்கவில்லை. தனது தரப்பு விளக்கத்தை அவர் கொடுக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப்பின் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.