Published:Updated:

`அ.தி.மு.க நிர்வாகியா அவர்?' - அரசுப் பள்ளி தலைமையாசிரியரின் ஃப்ளெக்ஸால் கொதித்த பெற்றோர்

அரசுப் பள்ளி விழாவில்
அரசுப் பள்ளி விழாவில் ( ம.அரவிந்த் )

`விழா முடிந்தும் பள்ளியில் இருந்த இந்த ஃப்ளெக்ஸ் போர்டை மாணவர்களைக்கொண்டே அப்புறப்படுத்தியிருக்கிறார். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பாவது?'

தஞ்சாவூர் அருகே, அரசுப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவிற்காக, பள்ளித் தலைமையாசிரியரே அ.தி.மு.க நிர்வாகி போல் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருந்து, பின்னர் அதை மாணவர்களைக்கொண்டே அப்புறப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்ளெக்ஸை அகற்றும் மாணவர்கள்
ஃப்ளெக்ஸை அகற்றும் மாணவர்கள்

தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி நடந்தது. இதில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதற்கு, சிறப்பான ஏற்பாட்டைச் செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இதையடுத்து, பள்ளிக்கு அமைச்சர் துரைக்கண்ணு வருவது உறுதியானவுடன், அதன் தலைமையாசிரியர் மணியரசன், அமைச்சரை வரவேற்று பள்ளி வளாகத்தினுள் தனது போட்டோவுடன் ஃப்ளெக்ஸ் ஒன்றை வைத்து, அதில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

ஃப்ளெக்ஸ்
ஃப்ளெக்ஸ்

இதைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் சிலர், `என்ன இது, அமைச்சரை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகிபோல் தலைமையாசிரியர் ஃப்ளெக்ஸ் வைத்திருக்கிறாரே?' என்று கேள்வி எழுப்பினர். ஆனால், கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலரான பாப்பம்மாள், இதைக் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்தபோது, ``பொது இடங்களில் ஃப்ளெக்ஸ் வைக்க நீதிமன்றம் தடை வித்தித்திருக்கிறது. அதனால், ஃப்ளெக்ஸ் விவகாரத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களே அடக்கித்தான் வாசிக்கிறார்கள். இந்த நிலையில், அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்ட ஃப்ளெக்ஸில் `மாண்புமிகு இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்' எனத் தொடங்கி, அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பெயரையும் சேர்த்து ஒரு கட்சிக்காரரைப் போலவே அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் செயல்பட்டிருக்கிறார்.

அரசுப்பள்ளி விழாவில்
அரசுப்பள்ளி விழாவில்

அத்துடன், விழா முடிந்ததும் பள்ளியில் இருந்த இந்த ஃப்ளெக்ஸை மாணவர்களைக்கொண்டே அப்புறப்படுத்தியிருக்கிறார். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பாவது? அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை வரவேற்று ஃப்ளெக்ஸ் வைப்பது நடைமுறையில் இருக்கக்கூடிய ஒன்றுதான் என்றாலும், அதற்கென ஒரு வரம்பு இருக்கிறது. அந்த வரம்பை மீறி தலைமையாசிரியர் செயல்பட்டுள்ளார்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு