Published:Updated:

தஞ்சை: `அவமரியாதை நிகழவில்லை!’- நிற்கவைத்துப் பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு டீன் விளக்கம்

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசும் டீன் மருது துரை
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசும் டீன் மருது துரை

``கொரோனா பரவலைத் தடுப்பதில் மருத்துவக் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும்,என்னையும் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார்’’.

தஞ்சாவூரில் கொரோனா சிகிச்சை குறித்த ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், அது தொடர்பான ஆலோசனையின்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனை நிற்க வைத்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து சம்மந்தப்பட்ட டீன் மறுத்து விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சனிக்கிழமை தஞ்சாவூர் வந்திருந்தார். அவர், அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மேலும், தஞ்சை மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்ததுடன், கொரோனா பரவுவதலைக் கட்டுப்படுத்துதல் குறித்த ஆலோசனையிலும் ஈடுபட்டார்.

இதில் கலெக்டர் கோவிந்தராவ், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரியின் டீன் மருது துரையை அமைச்சர் நிற்க வைத்தே பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் அமர்ந்திருக்க, டீன் மருது துரை நின்றுகொண்டே அமைச்சரிடம் பேசிக் கொண்டிருப்பது போன்ற போட்டோ வைரலானது. இதனை அதிகார மீறல் என போட்டோவுடன் அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர், இது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகளில் வைரலாகவும் பரவியது.

தஞ்சாவூர்: `ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது!' - பாராட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்

சம்பவம் குறித்து விசாரித்தோம். ``தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வரை ஒரு ஓரமாக நிற்கவைத்து விட்டு தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். `ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசுங்கள்' என்று சொல்லும் குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லை என டீனை நிற்க வைத்து பேசியதாக டாக்டர் ஒருவர் ஃபேஸ்புக் பகத்தில், தன்னுடைய கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து சர்ச்சை எழுந்தது. அவை சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவியது. அரசு மருத்துவர்கள் பலர் இதனை ஷேர் செய்துகொண்டே இருந்தனர். பலரும் இதுகுறித்து விவாதித்துப் பேச தொடங்கினர். மேலும், டீன் மருது துரைக்கு ஆதரவாக பலர் சமூக வலைதளங்களில், தங்கள் கருத்தைப் பதிவிட்டும் வந்தனர். டீன் மருது துரை இதனால் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்’’ என்றனர்.

கொரோனா குறித்த ஆலோசனை
கொரோனா குறித்த ஆலோசனை

இதுகுறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் மருது துரை, `இந்தப் பதிவு முற்றிலும் தவறானது. நான் வெளியே நின்று கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அறைக்குள் அமைச்சர், கலெக்டர், எஸ்.பி உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவுதலைப் பற்றியும், எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்று அமைச்சர் உதவியாளரிடம் கேட்ட பிறகு அவர் என்னிடம் வந்து சொன்னார். உடனே உள்ளே விரைந்த என்னை அமைச்சர் உட்காரச் சொன்னார். சமூக இடைவெளியின் அவசியம் கருதி, நான் உட்காரமலேயே அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் கூறினேன்.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துதல் குறித்த அந்த உரையாடல் அறிவியல் பூர்வமாக இருந்தது. மருத்துவக் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும், என்னையும் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார்.

கொரோனா: `சமூக பரவல் இல்லாமல் 100 நாள்கள்!’ - சாதித்த நியூசிலாந்து

அந்த இடத்தில் எனக்கு எவ்வித அவமரியாதையும் நிகழ்ந்திடவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் களப் போராளிகளாக, நாம் ஒன்று சேர்ந்து நின்று போராட வேண்டிய இவ்வேளையில் நம் கவனம் சிதற வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து. கொரோனாவை ஒழிக்கக் கூடிய பணியில் இருப்பதால் உட்கார நேரமில்லை’’ என சர்ச்சைக்கு விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு