Published:Updated:

இலக்கு 2021... எடப்பாடி 2.0 Vs பி.கே - டி.எம்.கே வியூகம்!

எடப்பாடி
எடப்பாடி

அவருடைய ஆட்சி சாதனை விளம்பரங்களில்கூட ஜெயலலிதா, எடப்பாடி படங்கள் மட்டுமே இருக்கின்றன. பன்னீரைக் காணவில்லை. கட்சி என் கையில், ஆட்சி என் கையில் என்பதை, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அழுத்தமாகப் பதிய வைக்க நினைக்கிறார்

'முத்திரை பதித்த மூன்றாண்டு... முதலிடமே அதற்குச் சான்று' எனச் சொல்லிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் எடப்பாடி, இந்த மூன்றாண்டில் சாதித்தது என்ன? ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இரண்டு முறையும் இறந்தபோது ஒருமுறையும் முதல்வர் ஆக்கப்பட்ட பன்னீர்செல்வம், ஜெயலலிதா பயன்படுத்திய முதல்வர் அறையையோ அவர் அமர்ந்த நாற்காலியையோ பயன்படுத்தியதில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில்கூட நடுநாயகமாக ஜெயலலிதாவின் படத்தை வைத்துவிட்டு ஓரமாக அமர்ந்துகொண்டவர் பன்னீர்செல்வம். ஆனால், எடப்பாடி அப்படியே மாறிப்போனார். ஜெயலலிதாவின் அறையிலே அமர்ந்து ஆட்சி செய்கிறார். ஜெயலலிதாவாகவே மாற ஆரம்பித்தார். ''பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை செய்யுங்க'' என அரசு விளம்பரத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார் எடப்பாடி.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியைக்கூடத் தமிழகத்தில் நடத்தவிடாமல் 2013-ல் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. அவரின் துணிச்சல் எங்கே? கட்சியை டெல்லிக்கு அடமானம் வைத்துவிட்ட எடப்பாடியின் கோழைத்தனம் எங்கே? பி.ஜே.பி கொண்டு வரும் எல்லாச் சட்டங்களையும் திட்டங்களையும் கண்மூடிக்கொண்டு ஆதரித்து அண்ணா தி.மு.க-வை 'அமித் ஷா தி.மு.க' ஆக்கிவிட்டார்.

எடப்பாடி
எடப்பாடி

2021 மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். மீண்டும் ஆட்சியைப் பிடித்து அமர்ந்துவிட எடப்பாடி நினைக்கிறார். தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்தை மீண்டும் அமைச்சரவைக்குள் இணைக்க நடந்த பேச்சுவார்த்தையில் பிரதானமாக வைக்கப்பட்ட கோரிக்கை முதல்வர் பதவி. அந்தப் பதவியை விட்டுத் தர முடியாது என்பதில் விடாப்பிடியாக இருந்த எடப்பாடி, அடுத்த தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் தான்தான் என்பதை அழுத்தமாக முத்திரை பதிக்கும் வகையில்தான் இப்போது காய்கள் நகர்த்திக்கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்சி சாதனை விளம்பரங்களில்கூட ஜெயலலிதா, எடப்பாடி படங்கள் மட்டுமே இருக்கின்றன. பன்னீரைக் காணவில்லை. கட்சி என் கையில், ஆட்சி என் கையில் என்பதை, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அழுத்தமாகப் பதிய வைக்க நினைக்கிறார் எடப்பாடி.

ரஜினி தலைமையில் கூட்டணி அமைந்தால் அதில் அ.தி.மு.க பங்கேற்குமா என்பது கேள்விக் குறிதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிக தொகுதிகள் கேட்ட பி.ஜே.பி-க்கு 5 இடங்கள்தான் அளித்தது அ.தி.மு.க. அதனால், ரஜினியின் கூட்டணியில் அ.தி.மு.க இணையும் வாய்ப்பு வந்தாலும் தன்னுடைய இடத்தை எடப்பாடி விட்டுத் தரத் தயாரில்லை என்றுதான் தோன்றுகிறது.

- 'இறுதி ஆண்டில் எடப்பாடி ஆட்சி... என்ன செய்தார்..? என்ன செய்வார்..?' என்னும் தலைப்பில் 'ஆனந்த விகடன்' இதழில் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி எழுதிய சிறப்பு அலசல் கட்டுரையின் சில பகுதிகளே இவை. முழுமையான கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க... > https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-edappadi-palanisamy-governance-av-march-04-2020

பி.கே - டி.எம்.கே... வெல்லுமா வியூகம்?

கிஷோரின் தமிழக என்ட்ரிக்குப் பின்னால் பல குழப்பங்களும் நடந்துள்ளன. அவரைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்ததே அ.தி.மு.க-தான். அந்தக் கட்சியின் தம்பிதுரையும், ரபிஃபெர்னாட்டும் கடந்த ஆண்டே டெல்லியில் வைத்து கிஷோரைச் சந்தித்து அ.தி.மு.க-வுக்குப் பணியாற்ற அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டு தமிழகத்தில் தன் ஆட்கள் மூலம் கள ஆய்வும் நடத்தினார். ஆனால் அந்த முடிவுகளை அ.தி.மு.க தலைமையிடம் கொடுத்துவிட்டு, அடுத்தகட்டமாக மக்கள் நீதி மய்யத்திற்குப் பணியாற்ற ஆரம்பித்தார். கமலிடம் பேசி, கட்சிக்குள் சில மாற்றங்களையும் கொண்டுவந்தார். என்ன காரணமென்று தெரியவில்லை. அங்கிருந்தும் கழன்றுகொண்டார்.

வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கே அதிக வெற்றிவாய்ப்பு இருப்பதை அறிந்து, அவர் உள்ளே நுழைந்திருப்பதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. தி.மு.க-வுடன் 78 கோடி ரூபாய்க்கு ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகத் தெரிகிறது. அண்ணா நகரில் தனி அலுவலகம் செயல்படத் தொடங்கிவிட்டது. பணிகளைக் கவனிக்க இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க-வுக்கு ஐபேக் நிறுவனம் பணியாற்று வதில் உள்ள நன்மைகளை நம்மிடம் பட்டியலிட்டார் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர். ''சமூகவலைதளங்களைத் தேர்தலுக்குப் பயன்படுத்துவதில் பி.கே கில்லாடி. தி.மு.க-வின் ஐ.டி.விங் ஓரளவுக்குச் செயல்பட்டாலும் தேர்தலுக்கு அதை மட்டுமே நம்பமுடியாது. ஸ்டாலினைத் தனித்துவமாக அடையாளப்படுத்துவதற்கான திட்டத்தை பிரசாந்த் வகுப்பார். ஏற்கெனவே தமிழக நிலவரங்கள் குறித்துக் கள ஆய்வு செய்திருப்பதால் அதை வைத்து எளிதாக வாக்காளர்களை தி.மு.க பக்கம் திருப்பும் உத்தியைச் செய்துவிடுவார். நவீனயுகத்தில் இது தவிர்க்கமுடியாதது, தவிர்க்கக்கூடாதது" என்றார். பிரசாந்த்தை வைத்துப் பணியாற்றுவதில் உள்ள சில சிக்கல்களையும் விவரிக்கிறார் மற்றொரு நிர்வாகி...

- 'பி.கே - டி.எம்.கே... வெல்லுமா வியூகம்?' என்னும் தலைப்பில் 'ஆனந்த விகடன்' இதழில் அ.சையது அபுதாஹிர் எழுதிய செய்திக் கட்டுரையின் சில பகுதிகளே இவை. முழுமையான கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க.. > https://www.vikatan.com/government-and-politics/politics/can-prashant-kishore-pull-off-a-landslide-victory-for-dmk

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு