Published:Updated:

‘போதைப்பொருள்கள் ஆபத்தானவை!’ என்றால், டாஸ்மாக் மது?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற விளம்பர உத்தியால் ஸ்டாலின் இப்படிப் பேசுகிறார்

‘போதைப்பொருள்கள் ஆபத்தானவை!’ என்றால், டாஸ்மாக் மது?

போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற விளம்பர உத்தியால் ஸ்டாலின் இப்படிப் பேசுகிறார்

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

``போதை என்பது சமூகத்தையே அழித்துவிடும் என்பதை உணர வேண்டும். போதைக்குத் தெரிந்த ஒரே பாதை அழிவுப் பாதை மட்டும்தான். போதைதான் பல குற்றங்களுக்குத் தூண்டுதலாக இருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் பேசியிருந்தார். ஆம், போதைதான் இங்கே பல குற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆனால், போதைப்பொருள் என்பது வெறும் புகையிலை, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்டவை மட்டும் அல்ல. அரசே டாஸ்மாக்கில் விற்பனை செய்துவரும் மது வகைகளும்தான். “போதைப்பொருள்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கையை எடுக்கும் தமிழ்நாடு அரசு, மதுவை மட்டும் விற்பனை செய்வது சரியா?” என அனைத்துத் தரப்பினரும் அக்கறையோடு கேள்வியை முன்வைக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மது போதையில் நடந்த சில குற்றங்களை கவனித்தால், அது புரியும்!

‘போதைப்பொருள்கள் ஆபத்தானவை!’ என்றால், டாஸ்மாக் மது?

அதீத மது போதை... அரங்கேறிய கொலைகள்!

சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பாக தகராறு பெரிதாக, அவரின் மனைவி கீதா தன் அம்மா சித்ரா வீட்டுக்குச் சென்றுவிட்டார். கடந்த 7-ம் தேதி மது போதையில் மாமியாரின் வீட்டுக்குச் சென்ற ஆறுமுகம், தன் மனைவியை அனுப்பிவைக்கும்படி கேட்டிருக்கிறார். அதற்கு மாமியார், ‘அவள் வீட்டில் இல்லை’ என்று சொல்ல, ஆத்திரமடைந்த ஆறுமுகம் சமையலறை யிலிருந்த கத்தியை எடுத்து மாமியாரின் கழுத்தில் குத்தியிருக்கிறார். தடுக்க வந்த மைத்துனர் உதயகுமாரின் வயிற்றிலும் குத்தியிருக்கிறார். மாமியார் உயிரிழந்த நிலையில், மைத்துனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், பொன் விளைந்த களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் டார்ஜன். தொடர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மது போதையில் டார்ஜனுக்கும், அவர் மனைவி ஜெயந்திக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு வந்த டார்ஜன், ‘ஏன் சமைக்கவில்லை?’ என்று ஜெயந்தியை அடித்திருக்கிறார். இதைப் பார்த்த ஜெயந்தியின் பெற்றோர் டார்ஜனைக் கண்டித்திருக்கிறார்கள். இதில் ஆத்திரமடைந்த டார்ஜன், அருகிலிருந்த கட்டையை எடுத்து, ஜெயந்தியின் அப்பா துலுக்கானம், அம்மா சம்பூர்ணம் இருவரையும் சரமாரியாக அடித்திருக்கிறார். மேலும், துலுக்கானத்தைத் துரத்தித் துரத்தி டார்ஜன் அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இவை இரண்டும் உதாரணங்கள்தான். இப்படியான மது போதையிலான குற்றச் சம்பவங்கள், அதாவது சொந்த அப்பா அம்மா தொடங்கி, மனைவியைக் கொலை செய்தது முதல் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை வரை தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. போதைப்பொருளை ஒழிப்பது எவ்வளவு அவசியமோ, அதேபோல மதுவுக்கு ஒரு முடிவுகட்டவேண்டியதும் மிக அவசியம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘போதைப்பொருள்கள் ஆபத்தானவை!’ என்றால், டாஸ்மாக் மது?

“மதுவை உடனடியாக நிறுத்திவிட முடியாது!”

இது குறித்து, அ.தி.மு.க கழகச் செய்தித் தொடர்பாளர், கோவை சத்யனிடம் பேசினோம். ``போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற விளம்பர உத்தியால் ஸ்டாலின் இப்படிப் பேசுகிறார். மற்றபடி மது ஒழிப்பில் ஆர்வமெல்லாம் கிடையாது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, `மது ஒழிக்கப்பட வேண்டும். மது விற்பனையில் வரும் வருமானத்தில் அரசாங்கத்தை நடத்துவது அவமானம்’ என்றெல்லாம் பேசியிருந்தார். படிப்படியாக மட்டுமே மதுவிலக்கு சாத்தியம். அதைத்தான் அம்மா அரசு செய்துவந்தது. அ.தி.மு.க என்றுமே பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இவ்வளவு பேசும் முதல்வர், `மதுவும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். அதையும் படிப்படியாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று பேசியிருக்க வேண்டுமல்லவா... எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு... ஆட்சிக்கு வந்த பிறகு இன்னொரு பேச்சு. இதுதான் தி.மு.க” என்றார்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வத்திடம் பேசினோம். ``சமீபத்தில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் காட்சி இணையத்தில் பரவியது. காவல்துறையினர் அந்த மாணவிகளின் பெற்றோரை அழைத்துக் கண்டித்திருக்கிறார்கள். உண்மையில் காவல்துறையினர் மாணவிகளுக்கு மதுவை விற்பனை செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தி.மு.க அமைச்சர் ஒருவர், ‘மது இல்லையென்றால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்’ என்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான், மது போதையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை என்று குற்றங்கள் அதிகரித்துள்ளன. முன்பிருந்த அ.தி.மு.க அரசு படிப்படியாகக் கடைகளை மூடியது. ஆனால், மதுவின் விலையைக் கூட்டும் தி.மு.க அரசு அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், தமிழ்நாடு டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவில் 75 சதவிகிதம் தி.மு.க சார்ந்தவர்களின் மது ஆலைகளிலிருந்துதான் வாங்கப்படுகிறது” என்றார்.

இது தொடர்பாக, தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``போதைப் பழக்கத்தையும், மதுப் பழக்கத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. தற்போதைய சூழலில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முதல் பலரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது. நீண்டநாள் புழக்கத்திலுள்ள மதுவை உடனடியாக நிறுத்திவிட முடியாது. அதற்குத் தேவையான நடவடிக்கையைப் படிப்படியாக மட்டுமே எடுக்க முடியும். தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது” என்றார்.

‘போதைப்பொருள்கள் ஆபத்தானவை!’ என்றால், டாஸ்மாக் மது?

தமிழ்நாட்டில் பலவிதமான போதைப்பொருள்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ... அதே அளவுக்கு மதுவும் பல பேராபத்துகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் அளவுக்கு டாஸ்மாக் மதுவையும் ஆபத்தாகக் கருதி, அதை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

உணருமா தமிழ்நாடு அரசு?