அரசியல்
அலசல்
Published:Updated:

நீங்க மட்டும் யோக்கியமா?

நீங்க மட்டும் யோக்கியமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்க மட்டும் யோக்கியமா?

ஓவியம்: ஜீவா

டீக்கடையில் அமர்ந்து ‘காரசார’ அரசியல் பேசும் `நீங்க மட்டும் யோக்கியமா?’ பகுதியின் இந்த அத்தியாயத்தில், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே கடையில் அரசியல் பேசினால் என்ன நடக்கும் என்ற கற்பனையைச் சூட்டோடு சூடாகவே பார்ப்போமா?

ஆண்டவர் அணி: என்ன... டீக்கடையில இன்னைக்கு, டாஸ்மாக் மாதிரி ஓவர் கூட்டமா இருக்கு..?

சமத்துவ டீ மாஸ்டர்: விஷயம் தெரியாதா உனக்கு... நம்ம செட்ல காணாமப் போனவங்களை யெல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு, `பொலிட்டிகல் அலும்னி மீட்’ வெச்சுருக்கோம்யா. வா வந்து உட்காரு!

ஆண்டவர் அணி: ஓ அப்பிடியா விஷயம்... சரி ரொம்ப ஆத்தாம ஒரு டீயைப் போடு.

ச.டீ மாஸ்டர்: லைட்டாவா... ஸ்ட்ராங்காவா?

இடி முரசு: ரெண்டுமே இல்லாம மய்யமா போடுய்யா... அப்போதான் நம்மாளு குடிப்பாரு. ஹிஹிஹி...

லவ்பெல் பாசறை: தம்பி பாட்டுக்கு செவனேனு வீட்ல `பிக் பாஸ்’ பார்த்துட்டு இருந்துருக்கும். இங்கே கூட்டியாந்து இப்படி அநியாயம் பண்றீங்களேய்யா... பாவத்த!

சீட்டா பாய்ஸ்: ம்க்கும்... ஓவியா உள்ள இருந்திருந்தா... நீங்களும் டி.வி முன்னாடிதான் உக்காந்துருப்பீங்க.

ஆண்டவர் அணி: எங்க ஆண்டவர் `மல்டி டேலன்ட் பர்சனாலிட்டி.’ ஒரே நேரத்துல எல்லாமே பண்ணுவாரு. ஒருபக்கம் படம், இன்னொரு பக்கம் டி.வி ஷோ. அப்புறம்...

ச.டீ மாஸ்டர்: அப்புறம் ட்விட்டர்லயே கட்சி நடத்துவாரு அதானே! ஹாஹா...

ஆண்டவர் அணி: யோவ்... நாங்களாச்சும் அதாவது பண்றோம். உங்க பெரிய பழுவேட்டரையர், கட்சினு ஒண்ணு இருக்குறதையே மறந்துட்டு உலக அழகிகூட ஜோடி போட்ட குஷியிலல்ல இருக்காரு. ஹேஹேஹே...

துரைகோ: ஏன்யா மய்யம்... அப்போ உங்க ஆளு சினிமாவுல பண்ணினதையெல்லாம் பட்டியல் போட்டா, டீக்கடை தீக்கடையாவே ஆயிருமேய்யா பார்த்துக்கோ. ஹாஹாஹா...

டோல்கேட் வீரன்: இப்போ எதுக்கு சினிமாவை இழுக்குறீங்க... அரசியலுக்கு வாங்கய்யா.

அண்ணாத்த மன்றம்: தம்பி.... அவரு வருவாரா தம்பி...

டோல்கேட் வீரன்: யோவ்... இன்னுமா இந்த சப்ஜெக்ட் உசுரோட சுத்திக்கிட்டு இருக்கு... தூக்கி டிஸ்போஸ் பண்ணுங்கய்யா!

மன்சூர் தம்பி: வெற்றிடத்தை எங்க ஆளை வெச்சு நிரப்பலாமா?

இடி முரசு: எது பண்ணினாலும் ஓரமா போய் பண்ணு. கேப்டன் இல்லாம துளிர்விட்டுப் போச்சு உங்களுக்கு...

ச.டீ மாஸ்டர்: சரி சரி... `மக்கள் நீதி மய்யம்’னு பேருவெச்சுருக்கீங்களே... மய்யம் இருக்கு, மக்களும் நீதியும் எங்க இருக்கு?

இடி முரசு: `அகில இந்திய’ சமத்துவ மக்கள் கட்சினு பேருவெச்சுக்கிட்டு, கடைசிவரைக்கும் தென்காசி, திருச்செந்தூரைத் தாண்டாத ஒங்க கதை மாதிரிதான் இதுவும். ஹாஹாஹா...

ச.டீ மாஸ்டர்: யோவ் இடி... கேப்டனுக்காகப் பார்க்குறேன். மய்யம் நீ பதிலைச் சொல்லுய்யா...

நீங்க மட்டும் யோக்கியமா?

ஆண்டவர் அணி: கட்சி ஆரம்பிச்ச அஞ்சு வருசத்துல அஞ்சு `பிக் பாஸ்’ பண்ணிக் கொடுத்துட்டு, இப்போ 6-வது `பிக் பாஸ்’ சக்சஸ்ஃபுல்லா பண்ணிக்கிட்டு இருக்காரே எங்க ஆண்டவர். இதெல்லாம் யாருக்காக மக்கள் சந்தோஷத்துக்காகத்தானே?

இடி முரசு: யோவ்... அது உங்க ஆளு சம்பளத்துக்காகவும் புரொமோஷனுக்காகவும் பண்றதுய்யா. மக்களுக்காக என்ன பண்ணினாரு?

ஆண்டவர் அணி: உங்க மக்கள்தான் ஒட்டுப்போடலையே... ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாத்தானே ஏதாச்சும் பண்ண முடியும்?

துரைகோ: அதுக்கு எங்களை மாதிரி மக்களை ‘ஜாக்கிங்’ல போய் சந்திக்கணும்!

லவ்பெல்: அப்படி ஜாக்கிங் போய் எத்தனை சீட் ஜெயிச்சீங்க ராசா!

துரைகோ: (கப்சிப்).

ஆண்டவர் அணி: அட அனத்தாம இருங்கய்யா... மய்யத்துல கொஞ்சம் நிதிப் பற்றாக்குறை... அதான் மத்தவங்களை மாதிரி எங்களால காசை வாரி இரைக்க முடியலை...

ச.டீ மாஸ்டர்: எதே காசில்லையா... டைரக்டருக்கு 2 கோடில லக்சஸ் காரு... ஒரேயொரு சீன்ல வந்து போன சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சுனு தூக்கிக் கொடுத்தாரே அதெல்லாம் என்ன கணக்குய்யா?

ஆண்டவர் அணி: நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை..!

ச.டீ மாஸ்டர்: அந்த நாலு பேருதான் யார்னு தெரியலை...

ஆண்டவர் அணி: கறுப்புக்குள் காவியும் அடக்கம்: அந்த நாலு பேரில் அவ்விருவரும் அடக்கம்!

இடி முரசு: பதில் சொல்லத் தெரியலைன்னா அப்படியே புரியாத மாதிரியே பேசி மழுப்பிடுறது. உங்களுக்கெல்லாம் தக் லைஃப் கொடுக்க அந்த ஜி.பி.முத்துதான்யா கரெக்ட்டு.

ச.டீ மாஸ்டர்: ரொம்ப கலாய்க்காதீங்கய்யா... அப்புறம் ஊரைவிட்டே போயிடுவேன்னு பிளாக்மெயில் பண்ணப்போறாப்ல...

இடி முரசு: எங்க கேப்டனுக்கு மட்டும் உடம்பு நல்லாருந்துச்சு... இந்நேரம் உங்க ஆளுங்களையெல்லாம் அரசியல்ல இருந்தே தூக்கி அடிச்சிருப்பாரு!

துரைகோ: சண்டை போடாதீங்கய்யா... நாமல்லாம் ஏன் ஒண்ணா சேர்ந்து அடுத்த தேர்தல்ல `ம.ந.கூ-2.0’னு கூட்டணி வெச்சுக்கக் கூடாது?

இடி முரசு: ஆத்தி... இது அதுல்ல..!

சீட்டா பாய்ஸ் & செவப்பு கம்பெனி: தப்பிச்சு ஓடுங்கய்யா...

தம்பி: இந்தக் கருமத்துக்குத்தான் நடிகன் நாடாளக் கூடாதுனு சொல்றோம்.

இடி முரசு: ம்க்கும்... இவங்கண்ணனையே `மாயாண்டி குடும்பத்தார்’ல பார்த்துத்தான் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

டி.டி.மன்னார்: கட்சிக்குனு ஒழுங்கா கொள்கை இருந்தாத்தானே... தகுதியே இல்லாம ஆளுக்காளு கட்சி ஆரம்பிச்சா இப்படித்தான்.

டோல்கேட் வீரன்: உங்க கட்சிக்கு அப்பிடி என்னய்யா கொள்கை?

டி.டி.மன்னார்: அ.தி.மு.க கட்சியை மீட்டெடுக்குறதுதான்!

லவ்பெல் பாசறை: அட ச்சை... கட்சியை மீட்டெடுக்குறதுல்லாம் ஒரு கொள்கையாய்யா!

சீட்டா பாய்ஸ்: ஓ... அப்போ உங்க கொள்கை என்னங்க ஆபீஸர்?

லவ்பெல் பாசறை: இது சாதிக்கான கட்சியல்ல... சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்குமான கட்சி. மாற்றம், முன்னேற்றம் PMK!

தம்பி: PMK னா?

டோல்கேட் வீரன்: (P) பெற்ற (M) மகனுக்கான (K) கட்சி... அதானே! ஹாஹாஹா...

லவ்பெல் பாசறை: போய்யா துரோகி..!

சமத்து டீ: பாய்லர்ல பறக்குது ஆவி... சட்டில டீத்தூளும் காலி... கடைய மூடணும். தயவுசெஞ்சு எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்கடா சாமி!

துரைகோ: இங்க இவ்ளோ பிரச்னை நடந்துக்கிட்டிருக்கு... யார்ரா இவன் கொழுந்து வெத்தலையும் பாக்கும் மென்னுட்டு இருக்கான்!

த.மா.சு: நான் தமிழ் மாநில காங்கிரஸோட அதிதீவிரத் தொண்டன் ப்ரோ... புளிச்ச்!