Published:Updated:

``நம் குழந்தைகளுக்குத் தாய்மொழியைக் கற்பியுங்கள்!" - காந்தி பிறந்த தின சிறப்புப் பகிர்வு

காந்தி
News
காந்தி ( Vikatan )

இந்தியா முழுமைக்கும் ஓர்மை எனும் சித்தாந்தத்தை நிலைநிறுத்த முயற்சி செய்வதும், அதற்கு காந்தி துணைக்கு அழைக்கப்படுவதும்தான் நாட்டின் இப்போதைய ஆபத்து.

‘தமிழ்க் கற்பித்தது’ என்பது தன்னுடைய சுயசரிதையான சத்திய சோதனையின் ஓர் அத்தியாயத்துக்குக் காந்தி வைத்த தலைப்பு. அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்த சமயம், பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்தப் பள்ளியில் உருது, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் கற்பிக்கப்பட்டு வந்தன. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் பலர் தென்னாப்பிரிக்காவில் கூலிவேலை செய்துவந்த காலகட்டமது. அப்போது தமிழ்க் குழந்தைகள் பலர் காந்தியின் பள்ளிக்கூடத்தில் இணைந்து படித்துவந்தனர். அவர்கள் தென்னாப்பிரிக்காவிலே பிறந்து வளர்ந்தவர்கள். ஆகையால், அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியுமே தவிர, எழுதப் படிக்கத் தெரியாது. அப்படி, தமிழ் எழுத, படிக்கத் தெரியாத ஆசிரியர்களுக்கு தமிழ் இலக்கணம் கற்பித்த ஆசிரியர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆம், காந்தி தமிழைக் கற்றுக்கொண்ட மாணவர் மட்டுமல்ல, தமிழைக் கற்பித்த ஆசிரியரும் கூட.

காந்தி
காந்தி

ஆனால், இன்று காந்தி சொன்னார் எனக் காரணம் காட்டி அவரின் கொள்கையைத் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் அரசியல்வாதிகள் சிலர். அந்த நிகழ்வு நடந்தேறி அரை மாதங்கள்கூட ஆகவில்லை. கடந்த செப்டம்பர் 14-ம் தேதி டெல்லியில், ‘இந்தி திவாஸ் கொண்டாட்டம் 2019’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர், ``மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழி கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்” எனக் காந்தியை உடன் அழைத்து காரணம் காட்டினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், இந்தக் காரணம் காட்டுதல்களால் எல்லாம் காந்தியை என்றும் சிதைத்துவிட முடியாது. ஏனெனில், அவர் ஒரு முழுமையான பன்மைத்துவ வாதி. காந்தி என்பவர் ஒருவர்தான். ஆனால், அந்த ஓர்மை என்பது பன்மைத்துவத்தின் குறியீடு. தன் இறுதிமூச்சு வரை அந்தப் பன்மைத்துவத்தை நிலைநிறுத்துவதற்கான பயணத்தையே மேற்கொண்டவர் அவர். ஆகையால், நினைத்த வண்ணத்தை எல்லாம் காந்தியின் சிலைக்குப் பூசிவிட முடியாது.

காந்தி
காந்தி

காந்தியின் வாழ்வில் முரண்கள் உண்டு, ஆனால், அந்த முரண்கள் தீமைகளை நோக்கியவை அல்ல. வாழ்வில் முரண்கள்தான் சில நேரங்களில் நன்மைகளுக்கு வழிவகுத்திருக்கின்றன. பல நேரங்களில் பேசப்படும் தூய்மைவாதங்கள் அநீதியானவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காந்தி ஓர் தீவிரமான மத வழிபாடு கொண்டவர்தான். அதைவிட முக்கியமானது அவர் மனிதத்தை வழிப்பட்டவர் என்பது. அவர் இறந்த பிறகும் அவரைச் சுற்றிக்கொண்டிருக்கும் பெரும் சர்ச்சைகளில் ஒன்று ‘ஹே ராம்.’ காந்தி சுடப்பட்டு இறக்கும் தறுவாயில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினாரா இல்லையா என்ற விவாதம் ஒவ்வோர் ஆண்டும் அவரின் நினைவு தினத்தில் நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த ‘ஹே ராம்’ காந்திக்கு வந்து சேர்ந்த சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. காந்திக்குச் சிறு வயதில் பேய், பிசாசு போன்றவைகளின் மீது அதீத பயம். அப்போது காந்தியின் செவிலித்தாயாகவும், வீட்டு வேலைகளைச் செய்து வந்தவர் பெயர் ‘அரம்பை’. அவர் காந்தியின் பயத்தைப் போக்க சொல்லிக் கொடுத்த மருந்துதான் ‘ ஶ்ரீ ராம ஜெபம்’

காந்தி
காந்தி

இதுகுறித்து காந்தி எழுதத் தொடங்கும்போதே, “கோயில்களில் இருந்து பெற முடியாததை, செவிலித்தாயும், வீட்டின் பழைய வேலைக்காரியுமான அரம்பையிடமிருந்தும் கண்டறிந்தேன்” எனத்தான் சத்திய சோதனையில் எழுத தொடங்குகிறார் காந்தி. மேலும் “அரம்பை எனக்கு அளித்த மருந்தைவிட, அரம்பையின் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. அரம்பை விதைத்த விதையானது எனக்கு எதிர்காலத்தில் உபயோகப்பட்டது. என் வாழ்வின் பின்னாள்களில் ‘ஶ்ரீ ராம ஜெபமே’ எனக்கான மருந்தானது“ என மனிதர்கள் மீதான நம்பிக்கையைப் பதிவு செய்தவர் காந்தி.

தீவிரமான வைதீகத்தைக் கடைப்பிடித்தவர் காந்தி. தன் வாழ்நாள் முழுவதும் புலால் உண்ணாமையின் வழியில் நடந்தவர். ஆனாலும், உயர் கல்விக்காக இங்கிலாந்து செல்ல நேர்ந்ததற்காக, தன் சுயசாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் காந்தி. அவர் சார்ந்த மோத் பனியா சமூகத்திலிருந்து அதுவரை யாரும் கடல் கடந்து சென்றதில்லை. வெளிநாடு சென்று படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் பயணமானார் காந்தி. அது அவர் சார்ந்த சமூகத்திடையே பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. “நீ வெளிநாடு செல்வதால் அங்கு நம் மதச் சடங்குகளை கடைப்பிடிக்க முடியாமல் போய்விடும்” என்றனர் சாதி தலைவர்கள். ஆனால், அவரின் முடிவில் மாற்றமில்லை, காந்தியின் பயணம் இந்த முரண்களின் வாயிலாகத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

காந்தி
காந்தி

கடந்த ஆண்டு காந்தியின் பிறந்த நாளில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பல்வேறு மொழிகளில் பதிவு செய்யப்பட்டிருந்த காந்தியின் கையெழுத்துதான். ஆனால், இப்போது காந்தியின் மொழி குறித்தான பார்வை மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதனால் காந்தியின் 150-வது பிறந்தநாளில் அவரின் மொழிகுறித்தான கொள்கைகளை தெரியாதோர்க்கு எடுத்துரைப்பது அவசியமாகிறது.

பள்ளி பாடத்திட்டத்தில் சம்ஸ்கிருத பாடத்தில் மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகள் அதிகமாக இருந்ததால், அதை விடுத்து பாரசீக மொழியைத் தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்திருந்தார் காந்தி. அப்போது அவரின் சம்ஸ்கிருத ஆசிரியர் காந்தியை அழைத்து, “நீ ஒரு வைணவரின் புதல்வன் என்பதை மறந்துவிட்டாயா? உன் மதத்தின் மொழியான சம்ஸ்கிருதத்தை நீ கற்க வேண்டாமா?” என்ற கேள்விகளை எழுப்ப மீண்டும் மனம் மாறி, சம்ஸ்கிருத வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார் காந்தி. பின்னாள்களில் இந்த நிகழ்வுகளைப் பற்றி பதிவுசெய்யும்போதுகூட “இதுதான் பின்னாள்களில் இந்து மதத்தின் புனித நூல்களை, எழுதப்பட்ட மொழியிலே படிக்க உதவியது” எனக் குறிப்பிட்டார்.

காந்தி
காந்தி

ஆனால், சத்திய சோதனையில் மேற்சொன்ன வரிகளை எழுதிய அடுத்த பத்தாவது வரியில்

“இந்தியாவில் உயர் கல்விகளுக்கு இந்தி மொழியோடு, பாரசீகம், உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது என்னுடைய தற்போதைய அபிப்ராயம்” எனவும் பதிவு செய்தார். இதுதான் காந்தி எனும் பன்மைத்துவ வாதியின் பரிமாணம்.

“நல்ல குஜராத்தி, நல்ல இந்தி, நல்ல ராஜஸ்தானி கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புபவர்கள் சம்ஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்வது என்பது அவசியம். “மேற்சொன்ன வரிகளை இந்திய அரசியல் களத்தில் எவராலும் பதிவுசெய்துவிட முடியும். இந்த அரசியல் எளிமையானவையும்கூட. ஆனால், அந்த வரியின் தொடர்ச்சியாக “அதேபோல் நல்ல உருது, அரபிக் மொழியைப் பேச வேண்டும் என ஆசைப்படுபவர்கள் பாரசீக மொழியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்” எனச் சொல்லும் மனம் சில ஜனநாயகத் தலைவர்களுக்கு மட்டுமே வாய்க்கப் பெரும். இதை ஒளிவு மறைவின்று உரக்கச்சொல்லிவந்த ஜனநாயகவாதி காந்தி.

காந்தி ஆங்கிலேய ஆதரவாளர், அவர்களின் அடிபணிந்து நடந்தவர் எனும் கருதுகோள்கள் இப்போதும் முன்வைக்கப்படுவது உண்டு. காந்தியின் பிரபலமான புத்தகங்களில் ஒன்று ‘இந்திய சுயராஜ்ஜியம்.’ இது எழுதப்பட்ட ஆண்டு என்பது 1908. அதில், “இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதி மக்கள் தங்களின் தாய் மொழியான வேல்ஸ் மொழியை வளர்க்க போராடி வருகின்றனர். ஆனால், நாம் ஆங்கிலமே பெரியது என்கிறோம். காங்கிரஸ் மாநாடுகள்கூட ஆங்கிலத்தில்தான் நடைபெறுகின்றன. இது நம் அடிமைத்தனத்தின் அடையாளம். நம் பிள்ளைகளுக்கு முதலில் ‘தாய் மொழியைக்’ கற்றுத்தர வேண்டும், வேறொரு இந்திய மொழியையும் கற்றுத் தர வேண்டும்.

அவர்கள் வளர்ந்த பிறகு ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளலாம். நம் இந்திய மொழிகள் அனைத்தையும் வளர்க்க வேண்டும்” மேலும், “அசல் நாஸ்திகம் இந்தியாவுக்கு ஓங்காது. மதக் கல்வி என்பது அவசியம். ஆனால், நமது மத போதகர்கள் நயவஞ்சகர்கள். அனைத்து மதத்தின் உண்மை நிலையையும் உணர்த்தும் கல்வியையும், எல்லாவற்றையும் தாமாகப் பார்க்கும் கல்வியையும் உருவாக்க வேண்டும்” எனப் பதிவு செய்தவர் காந்தி. இவைதான் காந்தி எனும் ஓர்மைக்குள் ஒளிந்திருக்கும் பன்மைகள்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் 22 மொழிகள் இருக்கின்றன. ஆனால், இந்தப் பட்டியலில் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலத்தின் தாய் மொழியான ராஜஸ்தானி இடம்பெறவில்லை.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலட், “இந்தியாவில் உள்ள செழுமையான மொழிகளில் ஒன்று ராஜஸ்தானி. ஆனால், அந்த மொழி இன்னும் அதிகாரபூர்வமான மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. ராஜஸ்தானியை அதிகாரபூர்வமான மொழியாக அங்கீகரித்து, அரசியலமைப்பின் 8-வது சட்டப்பிரிவுக்குள் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளேன்” என ட்விட்டரில் பதிவு செய்தார். இந்திய வரலாற்றில் நீண்ட நெடிய பாரம்பர்யம் கொண்ட ராஜஸ்தானி, சுதந்திர இந்தியாவில் இன்னும் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் 38 மொழிகளில் ஒன்றாகத்தான் உள்ளது. இவைதான் இங்கு சிக்கலை உருவாக்குகின்றன. இந்தியா முழுமைக்கும் ஓர்மை எனும் சித்தாந்தத்தை நிலைநிறுத்த முயற்சி செய்வதும், அதற்குக் காந்தி துணைக்கு அழைக்கப்படுவதும்தான் நாட்டின் இப்போதைய ஆபத்து.

காந்தி
காந்தி

இந்தியாவின் இந்த அபத்தங்களைத் தவிர்க்கவும் காந்தியே தேவைப்படுகின்றார். “பசுவை நானும் மதிக்கிறேன். விவசாய நாடான இந்தியா பசுவை நம்பியே வாழ்ந்தாக வேண்டும். பசு பல நன்மைகளைச் செய்யும் விலங்கு என்பதை இஸ்லாமியர்களும் ஏற்பர். நான் பசுவைப் போலவே பிறரையும் மதிக்கிறேன். ஆனால், பசுவைப் பாதுகாக்க முஸ்லிம்களைக் கொல்வதை நான் எப்படி ஏற்க முடியும்?” என்ற காந்தியின் வார்த்தைகள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை மீண்டும் மலரச் செய்ய வழிவகுக்கின்றன.

இன்றைக்கும், இந்தியா முழுமைக்குமான ஓர் ஒற்றை மொழி இருக்கின்றது. அந்த ஒற்றை மொழிதான் இந்தியா எனும் மாபெரும் துணை கண்டத்தைக் கட்டிவைக்கும் ஒற்றைச் சரடு. அந்த மொழிதான் இந்தியாவை ஒன்றாய் இணைத்து வைத்திருக்கிறது. அந்த மொழிக்குப் பெயர் காந்தி.