Published:Updated:

விதிமீறல் கட்டடமா, நோட்டீஸ் இன்றி இடி!

சீறிப்பாயும் சந்திரசேகர ராவ்

பிரீமியம் ஸ்டோரி

`விதிமீறல் கட்டடங்கள், முன்னெச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்காமல் இடிக்கப்படும். சட்டவிரோதக் கட்டடங்கள் குறித்து அரசுக்குத் தகவல் கொடுப்போருக்கு, பரிசுகள் வழங்கப்படும். நகராட்சி பட்ஜெட்களில் பசுமை பட்ஜெட்டுக்கு (மரக்கன்று நடுவதற்கு) பத்து சதவிகிதத் தொகை ஒதுக்கப்படும். நடப்பட்ட மரக்கன்றுகளைச் சரியாகப் பராமரிக்காத அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பணிநீக்கம் செய்யப்படுவர்’ என அதிரடிச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

ஜூலை 18, 19 தேதிகளில் தெலங்கானா சட்டசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தெலங்கானா நகராட்சிச் சட்டம் 2019-ன் சில பிரிவுகள்தான் இவை. கட்டட வரைபடங்களுக்கு அனுமதி வாங்குவதில் அதிகபட்ச லஞ்சம் விளையாடு கிறது; மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைக் கருத்தில்கொண்டு, அதை எளிமைப்படுத்த முனைகிறது இந்தச் சட்டம். இதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

  • 75 சதுர மீட்டர் வரை கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெற தேவையில்லை. நகர்ப்புற எளியவர்கள் கட்டும் இதுபோன்ற சிறு வீடுகளுக்கு, ஆண்டு வரி ரூ.100 மட்டுமே. குடிநீர், கழிவுநீர் வசதிக்காக அரசிடம் பதிவுசெய்து, ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • 500 சதுர மீட்டர் வரையிலான வீடுகளுக்கு இணையதளம் மூலம் கட்டட அனுமதி அளிக்கப்படும். இதற்கு, அரசின் கள ஆய்வு தேவையில்லை. அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட நாள்களுக்குள் கட்டட அனுமதி கிடைக்கவில்லையெனில், அரசு அலுவலகத்துக்கு வந்து அலைந்து திரியவேண்டியதில்லை. அனுமதி கிடைத்துவிட்டதாகக் கருதி, வீடு கட்டும் பணியைத் தொடங்கலாம். ஆனால், பறக்கும் படையினர் ஆய்வுக்கு வரும்போது விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • குறித்த காலத்துக்குள் பணியை முடிக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அந்தத் தொகை, அவரது சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும். இந்த அபராதம், கட்டட அனுமதிக்கான பணிக்கு மட்டுமல்ல... அனைத்து நகராட்சிப் பணிகளுக்கும் பொருந்தும். பணிகளை முறையாகச் செய்யாத அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றமும் உண்டு. இதனால், அரசு நிர்வாகம் வேகமாக இயங்கும் என்று எதிர்பார்க்கலாம். தனியார் வங்கிகள், தன் வாடிக்கையாளர்கள் முடிந்தவரை வங்கிக் கிளைக்கு வராமல் இணையத்திலேயே பெரும்பான்மையான சேவைகளை முடித்துக்கொள்ள ஊக்குவிப்பார்கள். அதுபோன்ற அணுகுமுறையைத்தான் கையில் எடுத்திருக்கிறது தெலங்கானா அரசு.

விதிமீறல் கட்டடமா, நோட்டீஸ் இன்றி இடி!
  • மக்கள், தங்கள் வீட்டுவரியைத் தாங்களே நிர்ணயித்துக்கொள்ளவும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால், ஆய்வின்போது தவறான தகவல் அளிக்கப்பட்டிருந்தால் 25 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.

  • அடிப்படை வசதிகள் செய்துதராமல் வீட்டுமனை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு செக் வைக்கிறது இந்தச் சட்டம். மனைப் பிரிவில் வாகன நிறுத்தம், கடைகள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு கட்டுமானங்கள் இருந்தால், நிலத்தின் மதிப்பில் 25 சதவிகிதம் அபராதமாக வசூலிக்கப்படும்.

  • கட்டட விதிமீறல் மட்டுமல்ல... நகர மன்றக் கூட்டங்கள் தொடர்பாகவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நகர மன்றக் கூட்டங்களில் கைகலப்பு, அநாகரிமாகப் பேசுதல் ஆகியவற்றில் ஈடுபடும் கவுன்சிலர்களின் பதவி பறிக்கப்படும். அவர்கள், ஆறு ஆண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால், மேற்காணும் சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. குறிப்பாக, `சட்டசபையில் இந்தச் சட்டத்தை விவாதிப்பதற்கு அனுமதி தராமல், ஒரே நாளில் அமல்படுத்திவிட்டார் ராவ்’ என்று சர்ச்சை கிளப்புகின்றன எதிர்க்கட்சிகள். ‘நகர மன்றக் கூட்டங்களின் தீர்மானங்களை ரத்துசெய்யவும் திறம்பட செயல்படாத நகராட்சிகளைக் கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 74-வது அரசியல் சாசனத் திருத்தத்தின் அடிப்படையையே இது தகர்க்கிறது. மாவட்ட ஆட்சியர்கள், மாநில உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மீது ஆதிக்கம் செலுத்த, கூடுதல் அதிகாரம் கொடுக்கிறது. இது ஜனநாயக விரோதம்’ என்று இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது காங்கிரஸ். ஆனால், சட்டமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ளவே போராட்டம் நடத்தவேண்டிய நிலையில் உள்ள காங்கிரஸின் கருத்துக்கு, அசுரபலத்தில் உள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதி செவிசாய்க்குமா என்ன?

எல்லாம் சரி, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்தப்போகிறது மாநிலத் தேர்தல் ஆணையம்... எடப்பாடி பழனிசாமி கேட்டுச் சொல்வாரா?

- கணியூர் குமரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு