Published:Updated:

பா.ஜ.க-வின் பி டீமா... 3-ம் அணியின் நாயகனா? - சந்திரசேகர் ராவ் சந்திப்புகள்...

சந்திரசேகர் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர் ராவ்

கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்த சந்திரசேகர் ராவ் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

பா.ஜ.க-வின் பி டீமா... 3-ம் அணியின் நாயகனா? - சந்திரசேகர் ராவ் சந்திப்புகள்...

கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்த சந்திரசேகர் ராவ் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

Published:Updated:
சந்திரசேகர் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர் ராவ்

அரசியலில் சீனியரான சந்திரசேகர் ராவ், தனது தொடர் போராட்டங்களால் ஆந்திராவிலிருந்து தெலங்கானாவைத் தனி மாநிலமாகப் பிரித்து, தெலங்கானாவின் காட் ஃபாதராக மாறியவர். இரண்டாவது முறையாக தெலங்கானாவின் முதல்வராக நீடிக்கும் சந்திரசேகர் ராவ், தேசிய அளவில் களம் காணும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ``பா.ஜ.க-வை அதிகாரத்திலிருந்து நீக்குவோம்; டெல்லி கோட்டையைத் தகர்க்கத் தயாராக இருக்கிறது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’’ என்று அனல் கக்கியபடி தேசிய அரசியலில் கவனம் ஈர்த்துவருகிறார் சந்திரசேகர் ராவ். ஸ்டாலின், சரத் பவார், உத்தவ் தாக்கரே என அவரது சமீபகால சந்திப்புகளும் இதைத்தான் உணர்த்துகின்றன. அதேசமயம், ஆந்திரா - தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியோ, “சந்திரசேகர் ராவை நம்ப முடியாது; அவர் பா.ஜ.க-வின் பி டீம்” என்று கடுமையாக விமர்சிக்கிறது!

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட சந்திரசேகர் ராவ், அதற்காக இந்திய அளவில் சில தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால், அப்போது அவரது கனவு பலிக்கவில்லை. தற்போது மீண்டும் அதே முயற்சியில் இறங்கியிருக்கிறார் சந்திரசேகர் ராவ். குறிப்பாக, தேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிரான பிம்பமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள மத்திய பா.ஜ.க அரசையும், மோடியையும் கடுமையாகத் தாக்கிப் பேசிவருகிறார். சொல்லப்போனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பாதையைப் பின்பற்றி, தேசிய அரசியலில் தடம் பதிக்கும் முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறார் சந்திரசேகர் ராவ்.

பா.ஜ.க-வின் பி டீமா... 3-ம் அணியின் நாயகனா? - சந்திரசேகர் ராவ் சந்திப்புகள்...

பகைவர்களான நண்பர்கள்... மம்தாவும் பின்னே சந்திரசேகர் ராவும்!

2016 வரை மம்தாவும் மோடியும் நல்ல நண்பர்கள். மம்தா, மோடியின் `குஜராத் மாடலுக்கு’ பாராட்டுப் பத்திரம் வாசித்தார். மோடியும் மம்தாவை `சகோதரி’ என்றே பாசமழை பொழிந்தார். 2015-ல் மோடியுடன் ஒன்றாக வங்கதேசத்துக்குப் பயணம் செய்தார் மம்தா. இப்படியாக இருந்த நல்லுறவில், 2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் விரிசல் விழுந்தது. காரணம், பா.ஜ.க-வின் பிராந்திய அரசியல் வளர்ச்சி. அந்தத் தேர்தலில் மம்தாவை ஓரங்கட்டி, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க காலூன்ற நினைத்தது மம்தாவுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும், மேற்கு வங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை வெளியேற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது பா.ஜ.க. இதன் பிறகே தீவிர பா.ஜ.க எதிர்ப்பைக் கையிலெடுத்தார் மம்தா.

பா.ஜ.க விஷயத்தில் சந்திரசேகர் ராவின் அரசியல் பயண அனுபவமும் இப்படித்தான் அமைந்தது. 2016-ல் ``மோடி அரசு ஊழலற்ற அரசாக விளங்குகிறது... எனது 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இது போன்ற ஓர் அரசைப் பார்த்ததே இல்லை’’ என்று மத்திய பா.ஜ.க அரசைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார். அதுமட்டுமல்ல... கடந்தகாலத்தில் பலமுறை மோடியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இப்படியான சூழலில்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை தோற்கடித்தார் பா.ஜ.க வேட்பாளர் தருமபுரி அரவிந்த். அந்த அதிர்ச்சியிலிருந்து சந்திரசேகர் ராவ் மீள்வதற்குள்ளாகவே, 2021-ல் ஹுஸுராபாத் இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் வேட்பாளரை சுமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பா.ஜ.க. தனது சொந்த மண்ணில், அதுவும் ஆளுங்கட்சியாக இருந்தும்கூட ஏற்பட்ட தோல்வியை சந்திரசேகர் ராவால் ஜீரணிக்கவே முடியவில்லை! அதன் பிறகே விழித்துக்கொண்டார் சந்திரசேகர் ராவ். தெலங்கானாவில் சத்தமில்லாமல் பா.ஜ.க வளர்ச்சியடைந்துவருவதை உணர்ந்தவர், கடந்த ஓராண்டாகவே மோடி அரசைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கிறார். தவிர, சந்திரசேகர் ராவின் நீண்டகால தேசிய அரசியல் கனவும் பா.ஜ.க எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.

பா.ஜ.க-வின் பி டீமா... 3-ம் அணியின் நாயகனா? - சந்திரசேகர் ராவ் சந்திப்புகள்...
சரத் பவாருடன்...
சரத் பவாருடன்...

எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்பு!

கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்த சந்திரசேகர் ராவ் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். மாநிலங்களின் தொழில் வளர்ச்சி நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடந்தது என்று வெளியே கூறப்பட்டாலும், சந்திரசேகர் ராவ் தரப்பில் பா.ஜ.க-வுக்கு எதிராக மூன்றாவது அணி அமைப்பது பற்றி ஸ்டாலினிடம் விவாதிக்கப்பட்டது என்று அப்போதே தகவல்கள் கசிந்தன. தொடர்ந்து கடந்த வாரம் மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரையும் மும்பையில் சந்தித்திருக்கிறார் சந்திரசேகர் ராவ். இந்தச் சந்திப்புக்குப் பிறகு பேசிய அவர், ``நாட்டுக்கு மாற்றம் தேவை; புதிய முன்னணி உருவாகும் நேரம் இது’’ என்றார்.

சந்திரசேகர் ராவின் அரசியல் நகர்வுகளை உற்று கவனிக்கும் அரசியல் பார்வையாளர்களோ, “சந்திரசேகர் ராவ் அமைக்க விரும்பும் மூன்றாவது அணி அவ்வளவு சுலபமல்ல; நிறைய சிக்கல்கள் இருக்கின்றன” என்கிறார்கள். நம்மிடம் பேசிய அவர்கள், “உத்தவ் தாக்கரேவையும், சரத் பவாரையும் சந்திரசேகர் ராவ் சந்தித்துவிட்டு வந்த மறுநாளே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, `பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஓர் அணியை உருவாக்க முடியாது’ என்று சொல்லியிருப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் இந்த இரு கட்சிகளும் காங்கிரஸை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதேபோல தனது சந்திப்புகளில், அடுத்ததாக மம்தாவையும் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் சந்திரசேகர் ராவ்.

மம்தா பானர்ஜியுடன்...
மம்தா பானர்ஜியுடன்...

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியை முதன்முதலாகக் கையிலெடுத்தவர் மம்தாதான். தற்போது அதேபோல சந்திரசேகர் ராவும் காங்கிரஸ் இல்லாத அணியை உருவாக்கவே முற்படுகிறார். காங்கிரஸை இணைத்துக்கொண்டால் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ள முடியாது என்று இருவரும் கருதுவதே இதற்குக் காரணம். ஒருவேளை இந்த மூன்றாவது அணியில் மம்தா, சந்திரசேகர் ராவ் என இருவரும் இடம்பெற்றால், யார் தலைமை வகிப்பது என்ற சிக்கல் எழும். இதனால், தேர்தலுக்கு முன்பாகவே இந்த மூன்றாவது அணி உடையும் சூழல் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே மூன்றாவது அணி சாத்தியமாகும். ஒருவேளை மம்தா, சந்திரசேகர் ராவ் விரும்புவதுபோல காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி உருவானால், அது பா.ஜ.க-வுக்குத்தான் சாதகம். பா.ஜ.க-வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறி, மீண்டும் மத்தியில் பா.ஜ.க-வே ஆட்சியமைக்க வழிசெய்யும்” என்றார்கள் விளக்கமாக.

உத்தவ் தாக்கரேயுடன்...
உத்தவ் தாக்கரேயுடன்...

பா.ஜ.க பி டீமா சந்திரசேகர் ராவ்?

இந்த நிலையில்தான் ‘சந்திரசேகர் ராவ் பா.ஜ.க-வின் பி டீம்’ என்று விமர்சித்திருக்கிறது தெலங்கானா - ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி. ``சந்திரசேகர் ராவ் பா.ஜ.க-வின் பி டீம். அவரை நம்பிக் களத்தில் இறங்கினால் மண்ணைக் கவ்வவேண்டிய நிலைதான் ஏற்படும். கடந்தகாலத்தைப் புரட்டிப் பார்த்தால், பா.ஜ.க-வின் பல சட்டங்களை அமல்படுத்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி நாடாளுமன்றத்தில் வாக்களித்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்த்த ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை ஆதரித்திருக்கிறார் சந்திரசேகர் ராவ். மூன்றாவது அணி அமைத்து பா.ஜ.க-வை வெற்றிபெறவைப்பதே அவரது திட்டம்’’ என்று குற்றம்சாட்டுகிறது தெலங்கானா - ஆந்திரா காங்கிரஸ் கமிட்டி.

`உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க சரிவைச் சந்தித்தால், சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் மேலும் தீவிரமடையும். ஒருவேளை அங்கு பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்துவிட்டால், சந்திரசேகர் ராவ் அமைதியாகிவிடுவார்’ என்ற கருத்தும் எழாமல் இல்லை. தற்போதைய அரசியல் சூழல்களைக் கணக்கிட்டால், சந்திரசேகர் ராவின் அடுத்தடுத்த நகர்வுகளும், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுமே தேசிய அரசியலில் சந்திரசேகர் ராவின் இடம் என்ன என்பதை முடிவு செய்யும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism