Published:Updated:

“அரசியலுக்கு வரும் பெண்கள் பின்வாங்கவே கூடாது!”

ஆளுநர் தமிழிசை அட்வைஸ்!

பிரீமியம் ஸ்டோரி
தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசையை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், பேசலாம். ஆனால், ஆளுநர் தமிழிசையை? “இப்போதும், எப்போதும் அதே எளிமையான உங்கள் தமிழிசைதான்!” எனப் புன்னகையோடு வரவேற்கிறார் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன். பல புரோட்டோகாலுக்குப் பிறகு, ஹைதராபாத்தில் 37 ஏக்கருக்கும் மேல் பறந்துவிரிந்து கம்பீரமாக நிற்கும் ராஜ்பவனில் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் அவரைச் சந்தித்தோம்.

``இந்த ஆண்டு தீபாவளியை எங்கு கொண்டாடப்போகிறீர்கள்?”

“கொரோனா தொற்று, ஹைதராபாத் வெள்ளம் போன்ற சில பிரச்னைகள் இங்கு இருப்பதால், இங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. எனவே, இந்தத் தீபாவளி தெலங்கானாவில்தான். சிறுவயதிலிருந்தே நான் பெரிய அளவில் தீபாவளியைக் கொண்டாடியதில்லை. நாங்கள் கேட்டாலும்கூட, எங்கள் அப்பா பக்கத்திலிருக்கும் குடிசைப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, ‘இவர்கள் இவ்வளவு துன்பப்படும் வேளையில் நாம் தீபாவளி கொண்டாடலாமா?’ என்று கேட்பார். திருமணத்துக்குப் பிறகுதான் தீபாவளிக் கொண்டாட்டமெல்லாம் இருந்தன. சரவெடி போன்ற அதிரடி வெடிகள் மீதுதான் எனக்கு விருப்பம்.” (சிரிக்கிறார்).

``நாகர்கோவில் டு கவர்னர் மாளிகை... எப்படியிருக்கிறது இந்தப் பயணம்?”

``ஒரு மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான அனுபவம். நான் அரசியலுக்கு வரும்போது ஒரு நிச்சயமற்ற தன்மையில்தான் அரசியல் இருந்தது. எனது மருத்துவ உயர்கல்வியை முடித்ததுமே, நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. இருந்தபோதிலும் என் மனம் அரசியலை நோக்கியே இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வளர்ந்து வரும் கட்சியான பா.ஜ.க-வில் 1999-ம் ஆண்டு இணைந்தேன். தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் ஆதரவால், ஒவ்வொரு படியாக ஏறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.”

``ஒரு மாநிலத்துக்கு கவர்னர் பதவி எவ்வளவு முக்கியம்?’’

“அரசியலுக்கு வரும் பெண்கள் பின்வாங்கவே கூடாது!”

``ஆளுநர் பதவிக்கு வந்த பிறகுதான் இந்தப் பதவியின் முக்கியத்துவம் எனக்குத் தெரிந்தது. என்னைக் கேட்டால், தற்போது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைவிட இன்னும் கொஞ்சம் கூடுதல் அதிகாரங்களை வழங்கலாம் என்றுதான் சொல்வேன். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, மக்கள் என அனைத்துத் தரப்பையும் உணர்ந்து வழிநடத்த இப்படி ஒரு பதவி அவசியம்.’’

``Constitutional Authority-ஆக இருப்பவர்கள், அரசியல் வாசனையே இல்லாமல் இருக்க முடியுமா?’’

“கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்வேன். அரசியல் பேசக் கூடாது, அரசியல் கட்சியின் கருத்துகளைச் சொல்லக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இன்னும் எனக்குள் அரசியல் கனல் கனன்று கொண்டிருக்கிறது. அரசியல்தான் என் உயிர்நாடி. ஆனாலும், இந்தக் காலகட்டத்தில் இந்தப் பதவிக்கு நேர்மையாக, உண்மையாக இருக்கிறேன்.”

“அரசியலுக்கு வரும் பெண்கள் பின்வாங்கவே கூடாது!”

``ஆளுநரான பிறகு மறக்க முடியாத நாள் எது?’’

``ஒரு பெண் மருத்துவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டபோது, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நான் செல்ல வேண்டும் என்றேன். அதிகாரிகள், பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி அங்கு செல்ல முடியாது என்றார்கள். ‘ஒரு பெண், ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க முடியவில்லையென்றால், இந்தப் பதவி எதற்கு?’ எனக் கேட்டேன். என் கேள்வியை உணர்ந்த அதிகாரிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அங்கு அழைத்துச் சென்றார்கள். அந்த நாள் முக்கியமானது.”

``தெலங்கானா அரசுக்கும் உங்களுக்கும் பிரச்னை இருக்கிறதா?’’

``ஒரு முழு நேர அரசியல்வாதி இங்கு ஆளுநராக வருகிறார் என்றதும், பிரச்னை செய்வதற்காகவே வருகிறார் என்றுதான் முதலில் இங்கிருப்பவர்கள் நினைத்தார்கள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல நான் ஆக்கபூர்வமான பணிகளில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்துவது, அன்பாகக் கையாள்வது என இரண்டையும் என்னிடம் பார்த்தார்கள். அதேசமயம், இவர் வளைந்து கொடுக்கக்கூடிய ஆளுநர் கிடையாது என்பதையும் இப்போது புரிந்துகொண்டார்கள்.”

“மத்திய அரசு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, யாத்திரை நடத்துவது அவசியமா?”

``இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நான் வகிக்கும் இடம், இந்த அரசியலுக்கு அப்பாற்பட்டது.”

“அரசியலுக்கு வரும் பெண்கள் பின்வாங்கவே கூடாது!”

``உங்களைவைத்து மீம்ஸ் போட்ட நபர்களைப் பற்றி இப்போது யோசிக்கும்போது என்ன தோன்றுகிறது?”

``உலகில் வேறு எந்த ஓர் அரசியல் தலைவருக்கும் இந்த அளவுக்கு மீம்ஸ் வந்திருக்குமா என்று தெரியவில்லை. சில மீம்ஸ்களை நான் ரசித்துச் சிந்தித்திருக்கிறேன். சில வெறுப்பு உணர்ச்சி கொண்டதாக இருக்கும். எப்போதுமே, என்மீது வீசப்படும் அம்புகளை வைத்துத்தான் நான் என் சரித்திரத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.”

``பெண்களுக்கு இன்றைய அரசியல் சூழல் ஆரோக்கியமானதாக இருக்கிறதா... நெருக்கடியானதாக இருக்கிறதா?’’

“பெண்களுக்கு எப்போதுமே, எல்லாமே நெருக்கடியான சூழலில்தான் இருக்கின்றன. `அரசியல் பெண்களுக்கானது அல்ல’ என்று ஒரு பொதுப்புத்தி உண்டு. ஆனால், அரசியல் பெண்களுக்கானதுதான். அரசியலில் ஒவ்வோர் அங்குல நகர்வும் போராட்டம்தான். அரசியலுக்கு வரும் பெண்கள் ஒருபோதும் பின்வாங்கவே கூடாது.”

``உங்கள் மகன் சுகநாதன், மகள் பூவினி அரசியலுக்கு வருவார்களா?’’

“நான் அரசியல் பின்புலத்திலிருந்து வந்த வாரிசு. ஆனால், என்னுடையது வாரிசு அரசியல் கிடையாது. என் பிள்ளைகள் இருவருக்குமே அரசியல் ஆளுமை, திறமை இருக்கின்றன. அவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது, அதில் தவறேதும் இல்லை. என்னைக் கேட்டால் அவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் சொல்வேன்.”

``தமிழக அரசியல் உங்கள் கவனத்தில் இருக்கிறதா?’’

``நிச்சயமாக இருக்கிறது. தமிழக அரசியலில் என்ன நடக்கிறது, குறிப்பாக நான் சார்ந்த இயக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனித்துதான்வருகிறேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு