Published:Updated:

ஆளுநர் என்றாலும் வீட்டில் நான் மனைவி, அம்மா...

டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்

டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனின் கலகல

ஆளுநர் என்றாலும் வீட்டில் நான் மனைவி, அம்மா...

டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனின் கலகல

Published:Updated:
டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழக பா.ஜ.க தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனை நாமெல்லாம் நன்கறிவோம். மருத்துவராகவும் அவரது இன்முகத்தை நாம் அறிவோம். இப்போது தெலங்கானாவின் ஆளுநர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் என இரட்டைப் பொறுப்புகளுடன் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இவற்றையெல்லாம் தாண்டி, நமக்கெல்லாம் தெரியாத பல சுவாரஸ்ய முகங்கள் உண்டு டாக்டர் தமிழிசையிடம்... புதுச்சேரியில் ராஜ் நிவாஸில் அவருடன் நாம் நிகழ்த்திய அந்த சுவாரஸ்ய பேட்டி.

மகள், மனைவி, மருமகள், அம்மா... இப்படி நிறைய ரோல்களை சுமக்கும் உங்களுக்கு மிகவும் பிடித்த ரோல் எது... ஏன்?

ஒவ்வொன்றுமே பிடிக்கும். குடும்பம், பொது வாழ்க்கை என இரண்டையும் பேலன்ஸ் செய்வது தான் என் விருப்பம். பொதுவாழ்க்கையில் விருப்பம் கொஞ்சம் அதிகம். அதனால்தான் குடும்ப வாழ்க் கையைத் தாண்டி, பொது வாழ்க்கைக்கு வர முடிந்தது. மருத்துவத்துறையும் பிடிக் கும். ஆனால் அதைவிட பொதுவாழ்க்கையில் இன்னும் அதிக நபர்களுக்கு சேவை செய்ய முடியும். குடும்ப வாழ்க்கையையும் பொதுவாழ்க்கையையும் ஒப்பிட்டுக் கேட்டீர்கள் என்றால் பொதுவாழ்க்கைதான் பிடித்தமானது. அதற்காக குடும்ப வாழ்க்கை பிடிக்காது என அர்த்தமில்லை. அதைத் தாண்டி பொது வாழ்க்கைக்கு வர அந்த விருப்பம்தான் காரணம்.

மனைவி தன்னைவிட பிரபலமாக இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பல ஆண்களுக்கு இருப்பதில்லை. உங்கள் விஷயத்தில் அதை எப்படி பேலன்ஸ் செய்தீர்கள்? ஈகோ பிரச்னை வந்ததுண்டா?

எங்களுக்குள் எந்தக் காலத்திலும் ஈகோ எட்டிப் பார்த்ததே இல்லை. என்னை இந்தளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்தவரே என் கணவர்தான். ‘அந்தக் காலத்துல என்னை குமரி அனந்தனோட மருமகன்னு சொன் னாங்க. இப்போ தமிழிசையோட கணவர்னு சொல்றாங்க’ என என் கணவரே விளை யாட்டாகச் சொல்வார். பிரபலமான சிறுநீரக மருத்துவர் சௌந்தர்ராஜன் என சொல்லிக் கொள்வதைத்தான் அவர் பெருமையாக நினைக்க வேண்டும். ஆனால், தமிழிசையின் கணவர் என்பதில் பெருமையடைகிறேன் என்று சொல்லும் அளவுக்கு நல்ல மனிதர் அவர்.

கட்சியில் இருந்தபோதும் சரி, மருத்துவராக இருந்தபோதும் சரி... நானும் ஈகோ என்னை அணுகாமல்தான் பார்த்துக்கொண்டேன். என்னைவிட வயதில் இளையவர்களிடம் பேசுவதிலோ, மன்னிப்புக் கேட்பதிலோ, வளைந்துகொடுப்பதிலோ எனக்குப் பிரச்னை இருந்ததில்லை. ‘இவங்க ஓவரா வளைஞ்சுகொடுக்கறாங்களோ’ என்றுகூட சில நேரங்களில் சிலர் நினைத்திருக்கிறார்கள். அப்படியில்லை. வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக் கொள்கிற நபர் நான்.

இன்று பெரிய பதவி இருப்பதற்காகப் பெருமையும் பட மாட்டேன், அது இல்லாத போது கவலையும் பட மாட்டேன். என் வாழ்க்கையை மிதமான, யதார்த்த நிலையி லேயே வைத்திருப்பேன். வாழ்க்கையில் எதுவும் நிரந்தர மில்லை. இன்று இங்கு இருக்கிறேன். நாளை என்ன வேலை கொடுக்கப்படுகிறதோ அங்கு இருப்பேன். வசதி, பதவிகளுக்கு மயங்காமல் ‘நான் எப்போதும் தமிழிசைதான்’ என்ற மனநிலையில் இருப்ப தால் எனக்குப் பிரச்னைகள் வந்ததில்லை.

ஆளுநர் என்றாலும் வீட்டில் நான் மனைவி, அம்மா...

வேறு எந்தப் பதவிகளும் பணிகளும் வேண்டாம்... மருத்துவராக மட்டுமே இருந்திருக்கலாம் என்று என்றாவது நினைத்ததுண்டா?

பின்னால் திரும்பிப் பார்க்கும் பழக்கமே எனக்குக் கிடையாது. `எண்ணித்துணிக கருமம்' என்பதற்கேற்ப ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன் பலமுறை யோசிப்பேன். ஆனால், யோசித்த பிறகு பின்வாங்க மாட்டேன். எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யப் பழகிக்கொள்வேன். உதாரணத்துக்கு சென்னைக்குப் போனால் எனக்கு என் கணவரையும் என் மகளையும் பார்க்கப் பிடிக்கும். கோயம்புத்தூர் போனால் என் மகன் குடும்பத்தைப் பார்க்கப் பிடிக்கும். ஒரு வாரத்தில் அந்த ஒருநாள் அவர்களைப் பார்ப்பது அடுத்த ஒரு வாரத்துக்குத் தாங்கும்.

இரு மாநிலப் பொறுப்புகளில் இருக்கிறேன். எத்தனை நாள்களுக்கு இந்தப் பொறுப்புகள் இருக்குமோ தெரியாது. வருங்காலத்தில் எந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் மகிழ்ச்சியாகச் செய்வேன். மக்கள் பணியில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும்கூட.

திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு நட்பு என்பது வெற்றிடமாகவே இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நட்பு ஏதேனும் உண்டா?

புதிய அரசியல் நட்பு ஏற்பட்ட பிறகு பழைய நட்பு எதுவும் தொடரவில்லை என்றே சொல்வேன். 24 மணி நேரமும் என் வேலையே என்னை ஆக்கிரமித்துக்கொள்ளும். அதனால் பழைய நண்பர்களிடம் பேச நேரமிருப்பதில்லை. பல நேரங்களில் என்னைத் தொலைக்காட்சியில் பார்த்து விட்டு பழைய தோழிகள், உடன் படித்த கல்லூரி நண்பர்கள் அழைத்துப் பேசுவார்கள். அவர்களுக்கு என்னை ஞாபகமிருக்கும். நான் தினமும் நிறைய பேரை சந்திப்பதால் எனக்கு ஞாபகமிருப்பதில்லை. அதனால் எனக்குப் பெரிய நட்பு வட்டம் இல்லை. மனம்விட்டுப் பேச நினைக்கும் தோழன், தோழி எல்லாம் என் கணவர்தான்.

உங்களுடைய ஓய்வுக்காலம் எப்படியிருக்க வேண்டுமென ஆசை... மக்கள் பணி, கட்சிப் பணி என்ற வழக்கமான பதில்கள் தவிர்த்துச் சொல் லுங்கள்...

ஓய்வுக்காலம் என ஒன்று என் சிந்தனை யிலேயே கிடையாது. ஏதாவது ஒருவிதத்தில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனவே ரிட்டையர்மென்ட் லைஃப் பற்றி நான் யோசிப்பது இல்லை, அது எனக்குத் தேவையும் இல்லை.

நேர்த்தியாக உடை உடுத்தும் பழக்கம் எப்போது தொடங்கியது?

நான் ஆறாவது படிக்கும்போது ஒரு நாடகத்தில் கட்டபொம்மனாக நடிக்கத் தேர்வாகியிருந்தேன். திடீரென்று தமிழ் ஆசிரியை என்னை அழைத்து சிவப்பாக இருக்கும் ஒரு மாணவி கட்டபொம்மனாக நடிப்பதாகவும், அந்தப் பெண்ணுக்குத் தமிழ் உச்சரிப்பு சரியாக வராது என்பதால், நான் பின்குரல் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். நான் மறுத்துவிட்டேன். அந்தச் சம்பவத்தில் இருந்தே ‘ஆள்பாதி ஆடைபாதி’ என்பதுபோல் என்னை நன்றாக ‘பிரசன்ட்’ செய்துகொள்ள வேண்டும் என்று ஓர் எண்ணம்.

சிறிய வயதில் இருந்தே ‘அக்ஸஸரிஸ்’ வாங்குவதில் விருப்பம் அதிகம். கல்லூரி படிக்கும்போது என் அம்மா, ரங்கநாதன் தெருவுக்கு கூட்டிக்கொண்டுபோய், கம்மல், பாசிமணி எல்லாம் வாங்கிக்கொடுப்பார்கள். தங்கம் அதிகம் வாங்கமாட்டேன். பிளாஸ்டிக் கம்மலாக இருந்தாலும் அதை உடைக்கு மேட்சிங்காக போட்டுக்கொள்வேன். இந்த மாதிரி உடை உடுத்துவது எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

என்ன கலெக்‌ஷன் அதிகமாக வைத்திருக் கிறீர்கள்?

டெரகோட்டா நகைகள் ரொம்பப் பிடிக்கும். நிறைய கலெக்‌ஷன் வைத்திருக் கிறேன். பிளாஸ்டிக் மணி, கலர் கலர் முத்துகள் பிடிக்கும். புடவை நிறைய வைத்திருக்கிறேன். எத்தனை புடவைகள் நிறைய வைத்திருக்கிறேன் என்று கணக்கு சொல்லத் தெரியவில்லை.

பழைய புடவைகள் அதிகமாகச் சேர்ந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

பிரித்து, யாருக்கு எது பயன்படும் என்று பார்த்துக் கொடுத்துவிடுவேன். டிசைனர் புடவைகள் என்றால் என் வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் கல்லூரி செல்லும் மகளுக்குக் கொடுப்பேன். காட்டன் புடவை களை வயதானவர்கள் கட்ட விரும்புவார்கள் என்பதால் பூ விற்கும் பெண்ணுக்குக் கொடுப்பேன். பட்டுப் புடவைகளை திருமண மானவர்களுக்குக் கொடுப்பேன்.

குடும்பமாக வெளியே செல்வதென்றால் எங்கு போவீர்கள்?

திருமணமான புதிதில் என் கணவருக்கு டெல்லி, கட்டாக் என்று ஆண்டுக்கு ஒருமுறை வெவ்வேறு இடங்களில் மருத்துவக் கருத்தரங்குகள் நடக்கும். அப்போது நானும் அவருடன் சேர்ந்து போவேன்.

குடும்பத்துடன் அவ்வளவாக வெளியில் சென்றது கிடையாது. அதற்கு நேரமும் கிடையாது. எப்போதாவது குலதெய்வம் கோயிலுக்குச் சேர்ந்து போவோம்.

என் கணவர், மகன், மருமகள், மகள் என குடும்பத்தில் எல்லோரும் அவரவர் வேலையை சந்தோஷமாக அனுபவித்துச் செய்கிறார்கள். சிலர், ‘என்ஜாய் பண்றதுக்காக வெளில போறோம்’ என்று சொல்வார்கள். நாங்கள் எல்லாரும் செய்கிற வேலையை என்ஜாய் செய்கிறோம். எதிர்பார்ப்புகள், கட்டுப் பாடுகள், திட்டமிடல் இல்லாமல் எல்லோருமே யதார்த்தமாக வாழ்கிறோம்.

டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுடனான விரிவான பேட்டியை https://bit.ly/348FmbZ லிங்கில் முழுமையாகப் பார்க்கலாம்.