Published:Updated:

தேனி: ஓ.பி.எஸ்-ஸுடன் மோதும் தங்க தமிழ்ச்செல்வன்? - தி.மு.க-வில் புதிய பொறுப்பு

தங்க தமிழ்ச்செல்வன்
News
தங்க தமிழ்ச்செல்வன்

தி.மு.க-வில் இணைந்து கிட்டத்தட்ட ஓர் ஆண்டைக் கடந்தநிலையில், இன்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

தேனி: ஓ.பி.எஸ்-ஸுடன் மோதும் தங்க தமிழ்ச்செல்வன்? - தி.மு.க-வில் புதிய பொறுப்பு

தி.மு.க-வில் இணைந்து கிட்டத்தட்ட ஓர் ஆண்டைக் கடந்தநிலையில், இன்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தங்க தமிழ்ச்செல்வன்
News
தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் அழுத்தம் கொடுத்தவர் தங்க தமிழ்ச்செல்வன். கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, டி.டி.வி.தினகரன் பக்கம் சென்ற தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அ.ம.மு.க-வில் இருந்துகொண்டு, தேனி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு, ஜூன் மாதம் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து, தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார்.

தங்க தமிழ்ச்செல்வன், ஸ்டாலின், கம்பம் ராமகிருஷ்ணன்.
தங்க தமிழ்ச்செல்வன், ஸ்டாலின், கம்பம் ராமகிருஷ்ணன்.

அவருக்கு, அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போது,``இப்படி ஒரு பதவியை ஸ்டாலின் கொடுப்பார் என எனக்குச் சத்தியமாக தெரியாது” எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் தங்க தமிழ்ச்செல்வன்.

பதவி கிடைத்தாலும், மாவட்ட தி.மு.க கூட்டங்களில் அவ்வப்போது தலைகாட்டிவிட்டு அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அதற்கான காரணம் குறித்து அவருடைய ஆதரவாளர்களிடம் கேட்டபோது,``மாவட்டப் பொறுப்புக்காக தங்கம் வெயிட்டிங்… அப்புறம் பாருங்க…” என்றனர். அதற்கு ஏற்றாற்போல, தேனி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை, தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனிடமும், மற்ற இரண்டு தொகுதிகளை தங்க தமிழ்ச்செல்வனிடமும் கொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில்தான் இன்று (01.10.2020) தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து மாவட்டம் பிரிக்கப்பட்டதற்கான அந்த அறிவிப்பு வெளியானது.

பெரியகுளம் ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊர். போடி, ஓ.பி.எஸ்-ன் தொகுதி. ஒருவேளை தேர்தல் நேரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டு, இப்படி ஒரு முடிவைத் தலைமை எடுத்திருக்கலாம்.
தி.மு.க நிர்வாகிகள்
 கம்பம் ராமகிருஷ்ணன் - தங்க தமிழ்ச்செல்வன்
கம்பம் ராமகிருஷ்ணன் - தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில், கம்பம், ஆண்டிபட்டி தொகுதிகளைத் தெற்கு மாவட்டமாகப் பிரித்து அதன் பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், போடி, பெரியகுளம் தொகுதிகளை வடக்கு மாவட்டமாகப் பிரித்து அதன் பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டிருப்பதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். ``மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கப்போகிறார்கள் என்பது தெரியும். ஆனால், தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆண்டிபட்டியும், பெரியகுளமும் கொடுப்பார்கள் என்றே நினைத்திருந்தோம். மாறாக, போடியையும், பெரியகுளத்தையும் கொடுத்திருக்கிறார்கள். பெரியகுளம் ஓ.பி.எஸ்-ஸின் சொந்த ஊர். போடி, ஓ.பி.எஸ்-ஸின் தொகுதி. இதைக் கணக்கிட்டு, கட்சி வேளைகளை வேகப்படுத்தவும், தேர்தல் நேரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு அழுத்தம் கொடுக்கவும் திட்டமிட்டு, இப்படி ஒரு முடிவை தலைமை எடுத்திருக்கலாம். ஓ.பி.எஸ் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வனைக் களமிறக்க தலைமை திட்டமிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றனர்.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

சென்னையிலுள்ள தங்க தமிழ்ச்செல்வன், நாளை தேனி திரும்ப இருக்கிறார். அவரை வரவேற்க, அவருடைய ஆதரவாளர்கள் தயாராகிவருகின்றனர். தேனி எல்லையான காட்டுரோடு பகுதியில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கவிருக்கிறாராம். இதற்கிடையில், தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதவி கொடுக்கப்பட்ட செய்தி அறிந்த அவரது ஆதரவாளர்கள், மாவட்டத்தின் சில இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.