Published:Updated:

'இரண்டுமுறை கேன்சல்; இம்முறையாவது எடப்பாடி கலந்துகொள்ளும் கூட்டம் நடக்குமா?' - கலக்கத்தில் தங்கமணி

தங்கமணி ( நா.ராஜமுருகன் )

மூன்றாவது முறையாக நாள் குறிக்கப்பட்டிருக்கும் தேதியில் பொதுக்கூட்டம் மழை குறுக்கீடின்றி நடந்தேறுமா என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் தங்கமணி கலக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

'இரண்டுமுறை கேன்சல்; இம்முறையாவது எடப்பாடி கலந்துகொள்ளும் கூட்டம் நடக்குமா?' - கலக்கத்தில் தங்கமணி

மூன்றாவது முறையாக நாள் குறிக்கப்பட்டிருக்கும் தேதியில் பொதுக்கூட்டம் மழை குறுக்கீடின்றி நடந்தேறுமா என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் தங்கமணி கலக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Published:Updated:
தங்கமணி ( நா.ராஜமுருகன் )

நாமக்கல்லில் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும், அ.தி.மு.க கட்சியின் பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மழையின் குறுக்கீடு, சட்டசபை சலசலப்பு என இரண்டு முறை கேன்சலானது. இந்நிலையில், மூன்றாவது முறையாக நாள் குறிக்கப்பட்டிருக்கும் தேதியில் பொதுக்கூட்டம் மழை குறுக்கீடின்றி நடந்தேறுமா என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் தங்கமணி கலக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க சார்பில் மாநிலம் முழுக்க அ.தி.மு.க கட்சியின் பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறார்கள். அந்தக் கூட்டங்களுக்கு கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களும், கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களும் பங்குபெற்று, கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி தங்கமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கவிருப்பதாகவும், அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் பொதுக்கூட்டம் ரத்தாக, 'சட்டசபைக்குள் நடக்கும் களேபரம்தான் காரணம்’ என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக அந்த பொதுக்கூட்டம் இன்று (5- ம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய நாள்கள் முதல் 5 - ம் தேதி வரை நாமக்கல்லில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, பொதுக்கூட்டத் தேதியை திடீரென்று 6-ம் தேதிக்கு மாற்றினார்கள். நாமக்கல், சேலம் சாலையிலுள்ள பொம்மக்குட்டமேட்டில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். இந்நிலையில், 'நாளையாச்சும் பொதுக்கூட்டம் நடக்குமா?' என்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க நாமக்கல் மாவட்டச் செயலாளருமான தங்கமணி கலக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 கே.பி.பி.பாஸ்கர் (நாமக்கல் நகரச் செயலாளர்)
கே.பி.பி.பாஸ்கர் (நாமக்கல் நகரச் செயலாளர்)
நா.ராஜமுருகன்

அவரது கலக்கத்துக்கான காரணத்தைப் பற்றி, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.

"நாமக்கல் அ.தி.மு.க கோட்டையாக இருந்தது. கடந்த அ.தி.மு.க பத்தாண்டுக்கால ஆட்சியில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி முதல்வர்களாக இருந்த இரண்டு காலத்திலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. கடந்த 2016 ம் வருட சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர் ஆகிய ஆறு தொகுதிகளில் பரமத்தி வேலூரைத் தவிர்த்து, மீதமுள்ள ஐந்து தொகுதிகளை அ.தி.மு.க-தான் கைப்பற்றியது. ஆனால், கடந்த 2021 ம் வருட சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம், பரமத்தி வேலூர் தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள நான்கு தொகுதிகளை தி.மு.க-விடம், அ.தி.மு.க கோட்டைவிட்டது. இதைத் தவிர, ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களை தி.மு.க-வுக்கு இழுத்துவருகிறார்கள். அதோடு, தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சமீபத்தில் நாமக்கல்லில் தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி, தி.மு.க-வை நாமக்கல்லில் எழுச்சியாகக் காட்டினார்.

இதற்கிடையில், நாமக்கல் மாவட்டத்தில் ஓ.பி.எஸ் அணியினர் வேறு, அவ்வப்போது ஆட்டம்காட்டுகிறார்கள். இப்படிப் பல்முனை அரசியல் தாக்குதல் நடப்பதால், தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தங்கமணி இருக்கிறார். அதனால், அ.தி.மு.க பொன்விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்திக் காட்டி, தனது அரசியல் இருப்பைத் தலைமைக்குக் காட்ட நினைத்தார். தனது தலைமையில் நடக்கும் அந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை அழைத்து வந்து, 'நாமக்கல்லில் அ.தி.மு.க ஸ்திரமாக இருக்கிறது' என்று காட்ட நினைத்தார். அதற்காகத்தான், கடந்த மாதம் 20-ம் தேதியை ஃபிக்ஸ் செய்தார். பிறகு, அது கேன்சலாகி, இன்று மறுதேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுவும் கேன்சலாகி, நாளை பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட மின்கட்டண உயர்வைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தை திருச்செங்கோட்டில் நடத்தினார் தங்கமணி. மாவட்டத் தலைமை இடமான நாமக்கல்லில் அவர் நடத்தாததற்க் காரணம், அ.தி.மு.க நாமக்கல் நகரச் செயலாளரான கே.பி.பி.பாஸ்கர்தான். நாமக்கல்லில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க-வினர்களை திரளவைக்கும் பொறுப்பில் இருக்கும் அவர், அதைச் செய்வதில்லை என்பதால்தான், கண்டன ஆர்ப்பாட்டத்தை திருச்செங்கோட்டில் நடத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி அங்கு சிறப்பாகக் கூட்டத்தைக் கூட்டினார். ஆனால், நாளை பிரமாண்டக் கூட்டத்தை அவர் கூட்டிக் காட்டுவார் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல், தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை நடத்திய அதே பொம்மகுட்டமேட்டில்தான், அ.தி.மு.க பொதுக்கூட்டத்தையும் தங்கமணி நடத்துகிறார். 'கூட்டத்துக்குக் கூட்டம் சரியா போச்சு. நாங்க ஒண்ணும் இளைத்தவர்கள் இல்லை' என்று தி.மு.க-வுக்கு இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க நினைக்கிறார். ஆனால், 'வருணபகவான் வந்து காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாதே' என்று கலக்கத்தில் தங்கமணி திக் திக் மனதோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்" என்றார்கள்.

இது குறித்து, தங்கமணி தரப்பில் பேசினால்,

தங்கமணி
தங்கமணி
நா.ராஜமுருகன்

``மழைதான் இரண்டு முறை பொதுக்கூட்டம் கேன்சலாகக் காரணம். நாமக்கல் என்றைக்கும் அ.தி.மு.க கோட்டைதான். அந்தக் கோட்டைக்கு எங்கண்ணன் என்றும் ராஜாதான். மத்தபடி, நீங்கள் சொல்லும் காரணங்களெல்லாம், அண்ணனின் எதிரிகள் புனையும் பொய்க்கதைகள். நாளை நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தைப் பார்த்து, பலரும் மிரண்டுபோவது உறுதி. அ.தி.மு.க கோட்டை என்பதை அண்ணன் நிரூபிப்பார்" என்றார்கள்.