Published:Updated:

தஞ்சாவூர்: மாநகராட்சிக் கடைகள் ஓப்பன் டெண்டரில் ஏலம்; ஆணையருக்கு எதிராக வணிகர்கள் சாலைமறியல்!

மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்.
மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார். ( ம.அரவிந்த் )

மறியலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள், வணிகர்கள் உள்ளிட்டோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் மாநகராட்சி ஆணையர். இதற்கிடையில் ஒரு கடை, மாற்றுதிறனாளி ஒருவர் ஏலம் கோரியிருந்தார் அவருக்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட கடைகளுக்கு ஆணையர் ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். டி.கே.ஜி நீலகமேகம் எம்.எல்.ஏ தரப்பைச் சேர்ந்த சிலரும் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி அலுவலகத்தில்  நடைபெற்ற ஏலம்
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஏலம்

தஞ்சாவூரில், ஸ்மார்ட் சிட்டித்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், அதற்கு எதிரே உள்ள திருவையாறு வழித்தடங்களுக்குச் செல்லும் பேருந்து நிலையம் அவற்றிலிருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையமும் கடைகளும் கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்தப் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திறக்கப்படவிருக்கிறது.

இந்தநிலையில், பேருந்து நிலையங்களில் கட்டப்பட்ட 93 கடைகள் ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம்விடப்படும் என ஆணையர் சரவணக்குமார் அறிவித்தார். இதற்கு ஏற்கெனவே கடைவைத்திருந்த வணிகர்களும், தி.மு.கவைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ஏலத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஏலம் நடத்தலாம்; ஆனால் கடைகளை ஒப்படைப்பதாகக் கூறி அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.

ஆணையர் சரவணக்குமார்
ஆணையர் சரவணக்குமார்

இதைத் தொடர்ந்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. புதிதாக ஏலம் எடுப்பதற்கு வந்தவர்கள், வணிகர்கள் என ஏராளமானோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அலுவலகத்துக்கு முன்பாக நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிதாக ஏலம் எடுக்க வந்தவர்கள் அதற்கான விண்ணப்பத்தை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர். பின்னர் மாநகராட்சி கமிஷனர் சரணவகுமார் முன்னிலையில் பெட்டியைத் திறந்து அலுவலர்கள் விண்ணப்பங்களை எடுத்துப் பிரித்தனர். இதையடுத்து தி.மு.க மாநகர துணைச் செயலாளரான நீலகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள், கமிஷனர் சரவணகுமாரிடம், ``அலுவலகத்துக்கு முன்பு ஏகப்பட்ட பேர் கூடிவிட்டனர். குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அனைவரையும் வரச் சொல்லாதது தவறு" என மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இதைக் கண்டுகொள்ளாத ஆணையர், ஏலம்விடுவதற்கான பணியைத் தொடங்கினார்.

தஞ்சாவூர் : ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷனருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்!

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே கடை வைத்திருந்த வணிகர்கள், தி.மு.க நிர்வாகிகள் சிலர், மாநகராட்சி அலுவலகத்தின் வெளியில் நின்றுகொண்டு,பழைய ஆட்களுக்குக் கடைகளை ஓதுக்கீடு செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். கொரோனா காலத்தில் எந்தவித கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையையும் பின்பற்றாமல் ஆணையர் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி கோஷமிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆணையர், மறியலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள், வணிகர்கள் உள்ளிட்டோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில் ஒரு கடையை, மாற்றுதிறனாளி ஒருவர் ஏலம் கோரியிருந்தார். அவருக்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள கடைகள் அனைத்துக்கும் இரண்டு நாள்கள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பில் போலீஸ்
பாதுகாப்பில் போலீஸ்

இது குறித்து மாநகராட்சித் தரப்பில் பேசினோம். "மாநகராட்சிக்குப் போதுமான வருமானம் இல்லாததால் ஊழியர்களுக்குச் சம்பளம் போட முடியாத சூழல் நிலவுகிறது. வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் ஆணையர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக பேருந்து நிலைய கடைகளுக்கு ஓப்பன் டெண்டர் முறையை அறிவித்தார். இதற்கு வணிகர்கள் மற்றும் தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் டெண்டர் பணியை நடத்தினார். மாற்றுத்திறனாளி ஒருவர் ரூ 40,000-க்கு கடையை வாடகைக்கு எடுக்க முன்வருகிறார். ஆனால், தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ நீலமேகத்தின் தூண்டுதல்பேரில் அவரின் ஆதரவாளர்கள் சிலர் தொடர்ந்து பிரச்னை செய்துகொண்டிருந்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ-வின் உறவினரான பிரகாஷ், நீல்கண்டன், சங்கர் உள்ளிட்டவர்கள், வணிகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டம்
போராட்டம்

அப்போது பழைய வணிகர்களுக்கே கடையை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு, ``எல்லாம் சட்டப்படி நடந்துகொண்டிருக்கிறது. உங்களையும் ஏலத்தில் கலந்துகொள்ளும்படி சொல்லியாச்சு அப்புறம் ஏன் இதைச் செய்ய விட மாட்டேங்கிறீங்க..." என ஆணையர் கேட்டார்.

இதையடுத்து வணிகர்கள் மூன்று நாள்கள் ஏலத்தைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கூறினர். ``நீங்கள் ஏலத்தில் கலந்துகொண்டு கடையை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னதற்கு, ``எங்களிடம் பணம் இல்லை" எனத் தெரிவித்தனர். ஏதாவது ஒன்றைச் சொல்லி ஏலத்தை நடத்தவிடக் கூடாது என்பதில் பலர் தெளிவாக இருக்கிறார்கள் ஆனால் சட்டப்படி எல்லாம் நடைபெறும் என ஆணையர் தெரிவித்தார்’’ என்றனர்.

மாநகராட்சி அலுவலகம் முன்பு
மாநகராட்சி அலுவலகம் முன்பு

மேலும் சிலர், ``ஓப்பன் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ நீலமேகமும் அவரின் ஆதரவாளர்களும்தான் குடைச்சல் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. பெரிய அளவில் கூட்டம் வரும் எனத் தெரிந்தும் போலீஸ் அதைத் தடுக்க தவறிவிட்டது. சொல்லப்போனால் ஆணையரின் இந்த முயற்சிக்கு போலீஸ் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால்தான் இது போன்ற சலசலப்புகள் ஏற்பட்டன" எனத் தெரிவித்தனர்.

வணிகர்கள் தரப்பிலோ, ``பல ஆண்டுகள் கடைவைத்திருந்த நாங்கள் இரண்டு வருடங்களாகக் கடை இல்லாமல் போனதால் வருமானம் இல்லாமலும், தற்போது வாழ்வாதாரம் இல்லாமலும் இருக்கிறோம். அதனாலேயே எங்களுக்குக் கடையை ஒதுக்க வேண்டும் எனப் பல வகையில் போராடிவருகிறோம்" எனத் தெரிவித்தனர். இரண்டாவது நாளான இன்றும் ஏலம் விடும் பணி நடைபெற்றுவருகிறது. எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்தின் ஆதரவாளர்களும் வணிகர்களும் கமிஷனருக்கு எதிராக கோஷமிட்டு, ஏலத்தைக் கைவிட வலியுறுத்தியும் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் ஏலம்விடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

அடுத்த கட்டுரைக்கு